
தன்தேரஸ் – தீபாவளி
— ராமலிங்கம் கிருஷ்ணா —
தன்தேரஸ் – அதாவது தீபாவளிக்கு முந்தைய நாள் வரும் கிருஷ்ண பட்ச திரயோதசி திதி (18.10.25) – அட்சய திருதியை அன்று பொன் பொருள் வாங்கினால் எவ்வளவு சுபிட்சமோ விருத்தியோ அது போலவே வட இந்திய மாநிலங்களில் தந்தேரஸ் அன்று பொருட்களை வாங்குவதுண்டு.
இந்தியாவில் பல பகுதிகளில், தந்தேராஸ் தீபாவளி பண்டிகைகளின் தொடக்கத்தை குறிக்கிறது, இது தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கிருஷ்ண பக்ஷ திரயோதசி திதியில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பக்தர்கள் தன்வந்திரி, லட்சுமி, குபேரன், யமன் ஆகியோரை வழிபடுகின்றனர்.
பட்டாசு என்பது வேடிக்கை அல்ல, அது இந்துக்களின் சம்பிரதாயம், ஆசியக் கண்டம் இந்துமதத்தின் பிடியில் இருந்த வந்த பொழுது குறித்த காலம் இருந்து விட்டு விடைபெற்று செல்லும் பித்ருக்களை வழியனுப்பும் ஒருவித சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்தோம்.
அந்த கலை இந்தியாவில் இருந்தது, பூமியில் விளக்கேற்றி பித்ருக்களை வழிபடுவது போல வானில் விளக்கேற்றி அவர்களை வழியனுப்பி வைக்கும் சம்பிரதாயம்.
அந்த கலை இந்தியாவில் பவுத்த சமண காலங்களில் விடைபெற்றது, ஆனால் பெளத்த மதத்தை தழுவினாலும் சீனா இதை அந்த நாட்டின் கலாச்சார ரீதியாக தொடர்ந்து கொண்டு இருந்து வருகிறது.
முன்னோர்கள் வ்ழிபாடு, முன்னோர்கள் ஆசீர்வாதம், என வானத்தை நோக்கி விளக்கு ஏற்றி வேண்டும் பிரார்த்தனை தான். அதனாலே தான் கத்தி, கோடரி, ஈட்டி, வாள் என சண்டையிட்ட சீனர்கள் வெடிபொருளை ஆயுதமாக ஒரு போதும் பயன்படுத்தவில்லை, அது அங்கே ஒரு வழிபாடாக தெய்வத்திடம் வேண்டுகிற வழிபாட்டு பொருளாகவே புனிதமானதாகவே இருந்து வருகிறது.
(பின்னாளில் வந்த ஒரு கூட்டம் தான் அதனை ஆயுதமாக்கினார்கள், அதற்கு பின் உலகம் இன்றிருக்கும் வெடிகுண்டு அழிவுக்குள் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டு இருக்கிறது).
ஆம், பட்டாசு என்பது விளக்கேற்றுதல் போல வானில் தெய்வங்களை பித்ருக்களை வணங்கும் மரபு, அதை ஒவ்வொரு இந்துவும் உற்சாகமாக செய்ய வேண்டும், செய்வது நன்று.
இந்த இரவில், தீபாவளிக்கு முந்தைய இரவுகளில் பட்டாசும் கூடவே இந்த யம தீபமும் அவசியமானது.
யம தீபம் என்பது வெறும் சம்பிரதாயம் அல்ல, அது முன்னோருக்கான வெறும் அடையாள வழிபாடும் அல்ல, ஆழ்ந்த தத்துவம் கொண்டது.
ஒவ்வொரு மனிதனுக்கும் பெரும் எதிரி பயம், தைரியம் என்பது அச்சத்தை மறைப்பதன்றி முழுக்க களைவது அல்ல, ஆனால் பயம் எல்லோர் மனதிலும் எப்போதும் உண்டு, அடுத்து என்ன ஆகுமோ எனும் அச்சமும், மரண பயமும் அப்படியானது, அந்த பயம் தான் ஒருவனை முடக்கும், கவலையுற செய்யும், மனகுழப்பத்தை தரும், பெரும் குழப்பத்தில் தள்ளும்.
இதனால் ஒரு மனிதன் களைய வேண்டிய விஷயங்களில் முதன்மை பயம் என சொன்னது இந்துமதம், மேலும் இந்துமத தெய்வங்களை வணங்கும் போது அவர்களின் கைகள் “அபய முத்திரையால்” நமக்கு காண்பிக்கும், அதாவது நம் மனபயத்தைப் போக்கும் அடையாளத்தை அந்த கரங்களில் காணலாம்.
அடுத்ததாக என்னாகுமோ, மரணித்தால் என்னாகுமோ எனும் அந்த பயம் ஒருவனை முடக்கும் , ஒருவனை கர்மம் செய்யவிடாமல் குழப்பும், மரணபயம் இன்னும் கொடுமையானது, அடுத்து எங்கு செல்வோமோ எப்படி இருக்குமோ என்ற பெரும் அச்சத்தை ஏற்படுத்தும்.
எல்லாவற்றிக்கும் பயப்படுவார்கள் யார் என்றால் தர்ம வழியில் கர்ம வழியில் நடக்காதவர்கள் தான், அவர்களுக்குத் தான் பயம் வரும், சரியான பாதையில் செல்கின்றேன் என நம்புவோர்க்கு பயம் எப்போதும் வராது.
தர்ம வழிதான் அச்சத்தினை அகற்றும், தர்மம் என்பது தன் நிலை அறிந்து, நெறி அறிந்து, தர்மம் அறிந்து, அந்தவழி நடப்பது, நான் தர்ம வழி நடப்பவன் அதனால் நான் அச்சபட வேண்டியது இல்லை, தர்மம் என்னை மீட்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பவர் எக்காலமும் கலங்குவதில்லை.
மகாபாரதத்தில் தருமர் அதற்கு முழு உதாரணம், அவன் முழுக்க முழுக்க தர்மத்தின் வழி நடந்தவர், அந்த தர்மம் கொடுத்த தெளிவுதான் 14 வருடம் அவரை கலங்காமல் வைத்திருந்தது, சூதாட்டம் ஆடும் போதும், துரியன் அவையிலும் அவர் கலங்கவில்லை.
யட்சப் பிரஷ்ணத்தில் அந்த தேவதை முன்னால் தம்பிகளின் இறந்த உடலை கண்டபோதும் அவர் கலங்கவில்லை, கலங்காமல் அந்த தேவதையின் கேள்விக்கு தகுந்த பதில்களை கூறி சகோதரர்களை மீட்டு வந்தார், எங்கும் அவர் அஞ்சி அழுது ஒடுங்கியதாக யாரும் கண்டதில்லை. காரணம் அவர் தன் தர்மம் அறிந்திருந்தார், அதனாலே தர்ம வழியில் நடந்தார், தெளிவாக இருந்தார்.
அதே சமயம் அர்ஜூனன் களத்தில் கலங்கினான், தன் தர்மத்தை மறந்தான் குழம்பினான் அழுதான், அவனை கீதை உரைத்து கண்ணன் தேற்றினார்.
தர்மத்தின் வழியில் ஒருவன் வாழும் போது அச்சமில்லை, பதற்றமில்லை. அதற்காக காவல்துறைக்கு அஞ்சியோ, சட்டதிட்டங்களுக்கு அஞ்சியோ தர்மத்தின் வழியில் வாழ்வது தர்ம வாழ்வாகாது அதுவும் அச்சமிக்க வாழ்வே.
மனதார கர்மத்தை ஏற்று நடத்தலே கர்மத்தை கடக்கும் வழி. அந்த வரத்தை தருபவன் தான் எமதர்மன். ஆம், எம தர்மன் ஒரு ஞானகுரு, ஞான வெளிச்சம் தருபவன், அவனை வணங்கினால் மரண பயம் அகலும், எல்லாவித அச்சமும் அகலும், முழு தெளிவும் ஞானமும் கிடைக்கும்.
இந்த உடல் அழியக்கூடியது உயிர் பிரியக்கூடியது ஆன்மா அழியாதது என கீதையில் சொன்னார் கண்ணன், அந்த தெளிவினை தருபவன் எமதர்மனே.
அச்சமற்ற மனம் எங்கும் குழம்பாமல் தெளிந்த அர்ஜூனன் போல, தர்மனை போல, ராமனை போல வைராக்கியமாக பந்த பாசத்தை, மாயையை கடந்த கர்மத்தை போல, கர்மமாக செய்யும் வரத்தை தருவதே எம வழிபாடு.
துலா ராசியில் சூரியன் வரும் இம்மாதம் சனி உச்சமடையும் மாதம், அந்த சனீஸ்வரன் வாழும் போது கர்மத்தை செய்யவைப்பவர், எமதர்மன் வாழ்வுக்கு பின்னர் கர்ம கணக்கு வழக்குகளை சரிபார்ப்பவர், அதனால் தான் இந்த நாளில் எமனை வழிபட சொன்னார்கள்.
இன்னொரு வகையில் பார்த்தால் மஹாளய பட்சத்தில் பூமிக்கு வந்த மூதாதையர்கள், பித்ருக்கள் மீண்டும் எமலோகம் செல்லும் நாள் இது என்பதால் அவர்களுக்கும் சேர்த்து பிரார்த்தித்து எமனிடம் வேண்டும் நாளும் இந்த நாள்தான்.
அந்த எமதீபம் ஏற்ற சில வழிமுறைகள் உண்டு – மாலை ஆறுமணிக்கு பின் வீட்டின் உயரமான பகுதியில் நல்லெண்ணையால் புதிய அகல் விளக்கில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும்.
வீட்டில் உள்ளோர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஏற்றுதல் வேண்டும். விளக்கு எமதிசையான தென் திசையை நோக்கி எரிதல் அவசியம். விளக்கேற்றி அந்த விளக்கின் முன்பு அமர்ந்து முன்னோரை நினைந்து இந்த துதிகளை பாடலாம்
“யமாய நம
தர்ம ராஜாய நம
ம்ருத்யவே நம
அந்தகாய நம
வைவஸ்தாய நம
காலாய நம
ஸர்வ பூத க்ஷயாய நம
ஓளதும்பராய நம
தத்னாய நம
நீலாய நம
பரமேஷ்டினே நம
வ்ருகோதராய நம
சித்ராய நம
சித்ரகுப்தாய நம
சித்ரகுப்தா வை ஓம் நம இதி”
இந்த ஸ்லோகத்தையும் –
”கார்திகஸ் யாஸிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் நிசாமுகே
யம தீபம் பஹிர் தத்யாத் அப ம்ருத்யுர் விநஸ்யதி”’ எனவும்,
“மம சர்வாரிஷ்ட நிவ்ருத்தி பூர்வகம் அபம்ருத்யு நிவாரண த்வாரா
யம ராஜ ப்ரீத்யர்த்தம் தீப தாநம் கரிஷ்யே
” ம்ருத்யுநா பாச தண்டாப்யாம் காலேந ச்யாமயா ஸஹ
த்ரயோதஸ்யாம் தீப தாநாத் ஸூர்யஜ: ப்ரீயதாம் மம” எனவும் வழிபடலாம்.
இப்படி சொல்லி வழிபட்டால், தன்னை வழிபடுவோரை நோக்கி யம தர்மன் “தீர்காயுஷ்மான் பவ/தீர்க ஸுமங்கலீ பவ” என ஆசீர்வதிப்பார்.
யம வழிபாடு என்பது கர்ம பாவங்களை ஒழிக்கும், தர்மநெறியில் நடக்க வைக்கும், கர்மத்தை சரியாக செய்ய வைக்கும், மரண பயத்தை அகற்றும், மரண பயம் அகன்றவனுக்கு தொட்டதெல்லாம் துலங்கும், எதுவும் அவனை தடுக்காது, கர்மத்தை தர்மமாக அவன் சிறக்க செய்வான், எங்கும் கலங்கமாட்டான், குழம்பமாட்டான், அவன் பிறப்பு சரியாக நிறைவடைந்து பிறப்பற்ற நிலையினை அந்த ஆத்மா அடையும்.
அந்த வரத்தை எமதர்மன் ஞான குருவாய் நின்று அருள்வார். அவரவர் கர்மத்தை தர்மத்தை ஒவ்வொருவரும் உணரும் போது வீடு துலங்கும், வீடு துலங்கினால் எல்லாம் ஒவ்வொன்றாக துலங்கி நாடே மிகபெரிய அளவில் உலகிற்கு தர்மம் போதித்து ஒளிவீசும்.
அந்த தர்மத்தை அந்த வரத்தை யமதர்மன் அருளட்டும், எல்லா வித பயமும் அச்சமும் விலகட்டும், அதிகம் பிரார்த்திக்க முடியாதவர்கள், நல்லெண்ணெய் விளக்கேற்றி தெற்கு பக்கமாக வைத்து, யம காயத்திரியினை 27 முறை சொன்னால் நிச்சயம் பலன் உண்டு.
“ஓம் சூர்ய புத்ராய வித்மஹே
மஹாகாளயே தீமஹி
தன்னோ யம ப்ரசோதயாத்.”
(எள்ளின் நல்லெண்ணெயில் ஏற்றும் திரியிட்ட விளக்குத்தான், மண்ணில் செய்யபட்ட அகல் விளக்குத்தான் யம தீபத்துக்கு உகந்தது, சூட்சும பலன்கள் அதில்தான் முழுமையாக கிடைக்கும் என்பதால் அதை தவிர வேறேதும் சரியான தேர்வாக இருக்க முடியாது)
வாணவேடிக்கை என்பது பாரம்பரிய சின்னமாக கோவில்களில் கடைப்பிடித்து வருகிற ஒரு நிகழ்ச்சி, இன்றளவும் கேரளாவில் உள்ள கோவில்களில் வெடி வழிபாடு என்று ஒன்று இருக்கிறது. அறுபதுகளில் நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களில் வாணவேடிக்கை சுவாமி புறப்பாட்டின் போது நடக்கும் சப்பரத்திற்கு முன்பாக முப்பது நாற்பது அடி இடைவெளியில் நடக்கும்.
இப்போது தான் ராக்கெட் பாம் வந்திருக்கு, ஆனால் முன்பெல்லாம் ஒரு பெரிய மூங்கில் குச்சியில் சணல் கயிறை கட்டி அதற்குள் வெடி மருந்தை திணித்து அதில் நெருப்பைப் பற்ற வைத்து மேல் நோக்கி எறிய அது அந்த மருந்தின் வேகத்தில் மேலே சென்று வெடிக்கும். வாணவேடிக்கை நிகழ்த்துபவரில் ஒருவர் கையில் ஆறு ஏழடி மூங்கில் கம்பு வைத்து இருப்பார். அதன் மேல் முனையில் ஒரு சின்னக் கிண்ணம் மாதிரி இருக்கும். அதில் ஒரு பூங்கொத்தி புஸ்வானத்தை ஏற்றி வைத்து உயரே காட்டுவார். அது மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், வெள்ளை என்று தனித்தனிக் கலரில் இருக்கும். இப்போது 10000,100000 லட்சம் வெடிகள் இருக்கிறது அல்லவா அது மாதிரி ஆட்டம் பாம், சீனிவெடி, சரவெடி என்று கோவில் திருவிழா களைகட்டும்.





