
தென்காசி திருவள்ளுவர் கழக செயலராக இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயா தம் 93வது வயதில் ஜூன் 8ம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை காலமானதாக தகவல் வந்தது. அன்னாருக்கு நம் சிரத்தாஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திராவிட மாயை நூல் எழுதிய சுப்பு அவர்கள் 2015இல் செங்கோட்டைக்கு அடியேன் இல்லத்துக்கு வந்திருந்த போது, அவரை அழைத்துக் கொண்டு ஐந்தருவி சங்கராஸ்ரமம் சென்றேன். அதன் பொறுப்பில் இருந்த சிவராமகிருஷ்ணன் ஐயாவைப் பார்த்தோம். சித்த வித்யை குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சேலத்தில் தாமும் சித்தவித்யை கற்ற தகவலைச் சொன்னார் சுப்பு.
சிவராமகிருஷ்ணன் ஐயா தான் தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலாளராக 65 ஆண்டுகளுக்கும் மேல் துடிப்புடன் செயலாற்றியவர். இலக்கிய தாகம் நிறைந்தவர். திருக்குறள் முற்றோதுதல் தொடங்கியவர். திருவள்ளுவர் கழக நூலகத்தைத் தொடங்கி செம்மையாக நடத்தியவர்.
இங்கே வைத்துதான் 32 வருடங்களுக்கு முன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனராக இருந்த எங்களூரான வீரகேரளம்புதூரைச் சேர்ந்த – தமிழூர் – ச.வே.சுப்பிரமணியன் ஐயாவை ஒருமுறை பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனது நூல் இரண்டைக் கொடுத்து படிக்க பரிசளித்தார். அது எனது பள்ளிப் பருவக் காலம்.
இதே தென்காசி திருவள்ளுவர் கழகம் தான் இன்றைய எனது மைக் பிடித்த மேடைப் பேச்சுக்களுக்கெல்லாம் பிள்ளையார் சுழி போட்டு, மேடை அச்சத்தைப் போக்கிய தளம். என் பள்ளிப் பருவத்திலேயே மேடை அமைத்து ‘மைக்’கும் கொடுத்த இடம்!
என் தந்தையாருடன் நல்ல நட்பில் இருந்தவர் சிவராமகிருஷ்ணன் ஐயா. தென்காசியில் 91ல் ஆர்.டி.ஓ.,வாக இருந்தவர் (பெயர் சரியாக நினைவில்லை) சிறந்த தமிழ் பற்றாளர். என் தந்தையார் அங்கே பணியில் இருந்ததால், கோட்டாட்சியருடன் அடிக்கடி பேசுவேன். பிரபந்தப் பாசுரங்கள் சொல்லச் சொல்லிக் கேட்பார். தமிழ்ப் பேச்சை ரசித்துக் கேட்பார். அவருக்கும் திருவள்ளுவர் கழகம்தான் இணைப்புப் பாலமாக இருந்தது. அந்த வகையில் இங்கே பணி செய்ய வரும் அரசு உயர் அதிகாரிகள் பலருக்கும் திருவள்ளுவர் கழகம் ஒரு தமிழ்க் கேந்திரம்.
எங்களது பக்கத்து வீட்டில் இருந்த செங்கோட்டை வி.ஜனார்த்தனன் ஐயாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சிவராமகிருஷ்ணன் ஐயா. அவரும் ஐந்தருவி ஆஸ்ரமம் அடிக்கடி சென்று வருவார். சங்கராஸ்ரமம் பலரை இப்படி இணைத்திருக்கிறது.
இரு தினங்களுக்கு முன்னர் திருவள்ளுவர் கழகத்து நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது சிவராமகிருஷ்ணன் ஐயாவைத்தான் முதலில் கண்கள் தேடின. சித்தவித்யை கற்ற மூத்தவர் என்பதால் குறளுருவாய் இந்தக் குவலயத்தில் நம்முடனிருப்பார்….!