‘யோகியின் பேனா’ – எழுத்துச் சித்தர் பாலகுமாரன்!

Published:

balakumaran1 - 2026

2000 ஆண்டு செப்டம்பர் மாத அந்த அழகிய அந்திவேளையை எப்போதும் மறக்க இயலாது.

விஜயபாரதம் தீபாவளி மலருக்காக பாலகுமாரனிடம் கட்டுரை வாங்கலாம் என முடிவான போது, அவர் மீது எனக்கு இருக்கும் தீவிர ஆர்வத்தை அறிந்துவைத்திருந்த செங்கோட்டை ஸ்ரீராம்ஜி என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார்.

யோகி ராம்சுரத்குமார் க்ருபா எனப் பெயரிடப்பட்ட அந்த இல்லத்தின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு நானும் ஸ்ரீராம்ஜியும் வாசலில் காத்திருந்த துளிப் பொழுதின் ஆர்வம், படபடப்பு எல்லாம் இன்னும் என்னுள் அப்படியே.

வாசல் திறந்தது. வைரமுத்து அந்த வீட்டிற்குள் வந்த நொடியில் இது அகமா? ஆலயமா? எனக் கேட்டது நினைவுக்கு வந்தது. அந்த மெல்லிய விளக்கொளியில் மிக அருகில் ஐயன் பாலகுமாரன். ஸ்ரீ ராமும் அவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

நான் வாய்மூடி கேட்டுக் கொண்டிருந்தேன். இல்லை…இல்லை பார்த்த விழி பார்த்தபடி பூத்துக் கிடந்தேன். காரணம், காத்திருந்த காட்சியது காணக்கிடைத்த சுகம்.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாலகுமாரன் பெயராய் அறிமுகமாகி, நாவலால் ஈர்க்கப்பட்டு, கதை மாந்தர்களின் உரையாடலாய் உள்ளே நுழைந்து, பாடம் நடத்தி, அப்ப்பா… எப்படி இப்படி உள்ளே… உள்ளே… உள்ளே என நுழைந்து யோசிக்கிறார் என வியந்த மனிதரை தொட்டுவிடும் தூரத்தில் அமர்ந்து பார்த்த போது அகம்மலர்ந்து கிடந்தேன்.

அன்று உருவான பந்தம். இன்று அந்த வீடு என்னையும் அவர்களுள் ஒருவனாய் அணைத்துக் கொண்டது.

கால ஓட்டத்தில் விஜயபாரதத்தில் இருந்து தினகரன் நாளிதழ், குங்குமம் வார இதழ் என நகர்ந்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் அவரது வழிகாட்டுதல் கிடைத்தது. குங்குமத்தில் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் புனித சரிதம் தொடராய் வந்து புத்தகமாய் உருக் கொண்டபோது, புத்தகத்தைப் படித்துவிட்டு மனம் குளிரப் பாராட்டினார்.

பாம்பன் சுவாமிகள் நூலைப் மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு தெரிந்தவருக்கெல்லாம் கொடுத்தார். செந்தில் நீ நாவல் எழுது . உனக்கு நல்லா வரும் என என் நெஞ்சில் தட்டிச் சொன்னார். அந்த பேரன்பில், அந்த தட்டலில், தவழும் தன் பிள்ளை மெல்ல நடக்கத் தொடங்கும் போது கைப் பிடித்து நடை பழக்கும் தந்தையின் காதல் உணர்ந்தேன்.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

அது பேரன்பு…பெருங்காதல்…
பாலகுமாரன் அப்படி என்ன உசத்தி?
ஆம் அவர் அவ்வளவு உசத்திதான்.

வெறும் வாசிப்பு அனுபவத்துக்கான எழுத்தாக மட்டும் இல்லாமல், பிழைப்புக்கான எழுத்தாக மட்டும் இல்லாமல் தனிமனிதன் – வீடு – உறவு – சமூகம் என அத்தனையும் ஒரு லயத்தில் தர்மத்தின் பாதையில் பயணிக்க அவரது எழுத்து வழிகாட்டியது.

அபிராமி பட்டரின் வாழ்க்கை, கண்மணி தாமரையாய்…அருணகிரிநாதரின் சரிதம், காதல் பெருமானாய்… ராஜராஜனின் ஆற்றல் உடையாராய் உயர்ந்து நிற்கும் எழுத்து ஐயனுடையது. பாலகுமாரனின் ஆன்மிக இலக்கிய சேவைக்கு ஒரு சோறு பதம் இது. இது போல நூற்றுக் கணக்கில் இருக்கிறது.

திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத் குமார் ஒருமுறை சொன்னார்: பாலகுமாரன் என் பேனா என்று. பாலகுமாரன் என்ற தனது பேனாவை கடந்த மே 15ம் தேதி மூடி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு ஜூலை 5ல் பிறந்த பாலகுமாரன், எழுத்துச் சித்தராய் உயர்ந்து சென்னை மயிலாப்பூரில் மே 15 அன்று இறையுடன் கலந்தார். அவரது எழுத்து என்றென்றும் சனாதன தர்மத்தை போதித்துக் கொண்டே இருக்கும்.

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

நன்றி: விஜயபாரதம். (15-6-2018)

Related articles

Recent articles

spot_img