திருப்பதி ஏழுமலையான் கோயிலை தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு அலறுகிறார். திடீரென இந்தச் சத்தம் ஏன் வந்தது என்று பார்த்தால், பின்னணியில் இந்தியாவையே அவ்வப்போது அலற வைக்கும் சுப்பிரமணிய சுவாமி இருக்கிறார்.
அப்படி என்னதான் நடந்தது? யோசித்தால் தெரிகிறது விடை!
கடந்த மாதம், திருப்பதி ஆலய பிரதான அர்ச்சகர் ரமண தீட்சிதலு உள்ளிட்ட அர்ச்சகர்கள் சிலர் ஆந்திரத்தை அடுத்து, தமிழகத்தின் சென்னையிலும் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார்கள். அப்போது, திருப்பதி கோயிலில் நடைபெற்று வரும் முறைகேடுகளை பகிரங்கமாக வெளியில் சொன்னார்கள். பொதுவாக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் சொத்துகள் கொள்ளை அடிக்கப் படுதல், ஆகம மீறல்கள், நகை, ஆபரணங்கள் கொள்ளை போவது என்று பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகள், ஆந்திரத்தை அலறடித்தது. தமிழகத்தில் அதன் விபரீதங்கள் எதுவும் ஊடகங்களால் வெளிப்படுத்தப் படாமல் பிசுபிசுத்துப் போனது.
ஆண்டாண்டு காலமாக தாங்கள் பணியாற்றி வரும் கோயிலில், பெருமாளுக்கு நிவேதனம் செய்ய பிரசாதம் தயார் செய்யும் மடைப்பள்ளியை எவரும் இதுவரை திருப்பணி செய்வதாகக் கூறி கைவைத்ததில்லை. காரணம், சீனிவாசப் பெருமாளுக்கு நிவேதன உணவு செய்வித்தவர் பகுளாம்பா என்ற தாயார். அவரின் அம்சமாக இன்றளவும் அவரே நிவேதனத்தை செய்து வருவதாகக் கருதுபவர்கள் பலர். ஆனால் தற்போது, எத்தனையோ விதமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மடைப்பள்ளியை இடித்து நவீனப் படுத்துவதாகக் கூறி, சில வேலைகளைச் செய்துள்ளனர். அப்போது, கிருஷ்ண தேவராயர் காலத்து புதையல்களை அங்கிருந்து எவருக்கும் தெரியாமல், சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவர்கள் எடுத்துச் சென்றதாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் திருமலையில் எதிரொலிக்கின்றன.
அதுபோல், பெருமாளுக்கான நகைகள், ஆபரணங்களை, கடந்த கால் நூற்றாண்டாக தாங்கள் பார்க்கவில்லை என்றும், அன்பர்கள் அளிக்கும் புதிய நகைகளே பெருமாளுக்கு அணிவிக்க தேவஸ்தானத்தின் தரப்பில் எடுத்துத் தரப்படுவதாகவும், பழைய நகைகள் எங்கே போயின என்பது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும், அர்ச்சகர்கள் குற்றம் சாட்டினர். பழைய நகைகளைக் கண்டு மதிப்பீடு செய்யும் எவரும் அண்மைக் காலத்தில் நியமிக்கப் பட்டு அவை குறித்த தகவல்கள் எவருக்கும் பகிரப் பட வில்லை என்பது, அர்ச்சகர்களின் குற்றச்சாட்டு!
இன்னும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள் குறித்து, அர்ச்சகர்கள் பகிரங்கப் படுத்தியதால், அவர்களைப் பழிவாங்க முயன்றது நிர்வாகம். இதை அடுத்து, அவர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. ஆனால், தாங்கள் பரம்பரை அர்ச்சகர்கள் என்றும் தங்களை அவ்வாறு பணி நீக்கம் செய்யவோ, ஆலயத்துக்குள் நுழைவதைத் தடுக்கவோ, திருப்பதி தேவஸ்தானத்துக்கோ, மாநில அரசுக்கோ எந்த வித உரிமையும் முகாந்திரமும் கிடையாது என்று அவர்கள் வாதிட்டனர்.
திடுக்கிட வைக்கும் திருப்பதி தேவஸ்தான முறைகேடுகள்: அம்பலப் படுத்திய அர்ச்சகர்களுக்கு நோட்டீஸ்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானாச ஆகம பரம்பரையை சேர்ந்த 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பரம்பரை அர்ச்சகர்களாக இருந்து வருகின்றனர். தலைமை அர்ச்சகராக கொல்லப்பள்ளி குடும்பத்தை சேர்ந்த ரமண தீட்சிதலு இருந்தார்.
இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து தலைமை அர்ச்சகர் ரமண தீட்சிதலு மற்றும் சீனிவாசா தீட்சிதலு, நாராயணா தீட்சிதலு, நரசிம்மா தீட்சிதலு ஆகிய அர்ச்சகர்களுக்கு வயது வரம்பை காரணம் காட்டி கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இது குறித்துக் கூறிய தலைமை அர்ச்சகர், தேவஸ்தான முறைகேடுகளை நான் வெளியில் கூறியதால், அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்ச வரம்பை 65 வயதுக்கு நிர்ணயித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் ஏற்படுத்திய சட்டப் பிரிவின்படி தேவஸ்தான அர்ச்சகர்களுக்கு ஓய்வு பெறும் வயது உச்சவரம்பை நிர்ணயிக்க கூடாது. எனவே இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வேன் என்றார்.
இதனிடையே, இந்த விவகாரம் உடனடியாக பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமியிடம் கொண்டு செல்லப் பட, அவர் இதற்காக தாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகக் கூறினார். கோடைக்கால விடுமுறை முடிந்து, நீதிமன்றம இயங்கத் தொடங்கியதும், இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில், தாம் வழக்கு போடுவதாகக் கூறியிருந்த சுப்பிரமணியம் சுவாமி, நேற்று பூரி சங்கராச்சாரியாரைச் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட போது, தாம் திருமலை திருப்பதி கோயிலை சந்திரபாபு நாயுடு கும்பலிடம் இருந்து விடுவித்த பின்னர், புரி ஜகந்நாதர் ஆலயத்தை அரசின் பிடியில் இருந்து விடுவித்துக் கொடுப்பேன் என்று சங்கராச்சார்ய சுவாமியிடம் கூறினாராம்.
Dr @Swamy39 spent an hour wid Pujya Jagadguru Shankaracharya of Puri & got his blessing 2 Complete Ram Temple Case Successfully before Deepavali
After Freeing Tirumala Balaji Temple frm CBN clutches Dr Swamy told him He wil take up freeing Jagannath Puri temple frm Govt control pic.twitter.com/yzZhMncyEr
— Sanatan Dharma (@HinduDharma1) June 9, 2018
1. பரம்பரை அர்ச்சகர்களை மீண்டும் சந்நிதி பணியில் அமர்த்த வேண்டும்.
2. சிபிஐ விசாரணை வேண்டும். ஆபரணங்கள், சொத்துகளை கணக்கெடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.
3. அரசியல் சாசனப் படி, மதசார்பற்ற ஒரு நாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாயிலாக கோயிலை அரசு நேரடியாக நிர்வாகம் செய்வது நிறுத்தப் படவேண்டும். டி.டி.தேவஸ்தானம் சாது சந்நியாசிகள் கொண்ட மத ரீதியான அமைப்பின் மூலம் நிர்வகிக்கப் பட வேண்டும்…
– ஆகிய மூன்றையும் வலியுறுத்தி, சுப்பிரமணிய சுவாமி அடுத்த வாரம், அல்லது 3வது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவுள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அறிந்த சந்திரபாபு நாயுடு அழாத குறையாக, மத்திய அரசு திருப்பதி கோயிலை எடுக்க சதி செய்வதாக வெளிப்படையாகப் பேசி வருகிறார்.
சித்தூர் மாவட்டம், மதனப் பள்ளியில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலை தாரை வார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது.
ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்றத் தவறி விட்டார் என்று பேசினார்.
ஆனால், திருப்பதி கோயிலில் கை வைத்துதான் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திருப்பதி மலைத் தொடர் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். திருப்பதி கோயிலும் ஆந்திர அரசியலும் பிரிக்க முடியாத அங்கமாகிவிட்டன. ஆந்திரத்தில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்கள் ஆதிக்கத்தை டி.டி.தேவஸ்தானத்திலும் உள்புகுத்தி பலவித முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில், திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் தொல்லியல் துறைக்கு திருப்பதி கோயிலை அளிக்க முடியாது என எதிர்ப்புகள் எழுந்தன. இதை அடுத்து அந்த முடிவை மத்திய அரசின் தொல்லியல் துறை திரும்பப் பெற்றது.
இதனிடையே, சுப்பிரமணிய சுவாமியின் அதிரடி அரசியலால் கலங்கிப் போயுள்ளார் சந்திரபாபு நாயுடு. ஏற்கெனவே, மாநில அரசியலில் பாஜக.,வின் தலையீட்டைத் தவிர்க்கத்தான் தன் மகனுக்காக பாஜக., கூட்டணியை உதறித்தள்ளினார் சந்திரபாபு நாயுடு. இப்போது, திருப்பதி ரூபத்தில் சு.சுவாமியின் வடிவில் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட கலக்கத்தில், ஜெகன் மோகன் ரெட்டியையும் பாஜக.,வையும் இணைத்து சதிகாரர்களாக சித்திரித்து ஓர் அரசியல் நாடகத்தை நடத்தி வருகிறார்.






