மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மிக கனமழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் ஜான் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருக்கிறார்.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனத்த மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளார் பிரதீப் ஜான். தமிழகத்தின் சில இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால் இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மழை குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி பதிவு செய்து வரும் ப்ரதீப்ஜான், அடுத்த 2 நாட்களுக்கு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடுமையாக மழை பெய்யும் என்றும், வால்பாறை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனத்த மழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு பேய் மழை கொட்டித் தீர்க்கும் வாய்ப்பு உள்ளதால், சுற்றுலா செல்பவர்கள் தங்களது பயணதிட்டத்தை தள்ளிப் போடும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சோலையாறு, பில்லூர், பெரியாறு, பாபநாசம் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் நிரம்பும். இன்று காலை வரையிலான நிலவரப் படி எங்கெங்கே எவ்வளவு மழை பெய்துள்ளதுஎன்பது குறித்தும் அவர் தனது பதிவில் தெரிவித்திருக்கிறார்.




