சென்ற ஜூலை 4ஆம் தேதி இரவு 9 மணியளவில் காலமான மூத்த பத்திரிக்கை யாளரும், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் டிரஸ்டியாக இருந்தவரும், ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட பல கல்விப்பணி அமைப்புகளில் பங்களித்தவரும், மேடை நாடக நடிகரும், தேசியவாதியுமான திரு. பஹுஸ்ருதம் ராமமூர்த்தி ஹரன் என்ற B R ஹரன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள சத்யா மஹாலில் நடைபெற்றது.
ஒத்த கருத்துடைய நண்பர்களின் சார்பில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் முன்னெடுத்த இந்த நிகழ்வில் சமுதாயத்தில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஞாயிறு மதியம் 3 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி 6 மணிக்கு நிறைவுற்றது.
மறைந்த ஹரன் அவர்களின் நண்பர்கள், பள்ளித்தோழர்கள், உறவினர்கள், இணைய எழுத்தாளர் திரு. ராம்குமார், பாடகர் திரு. விஜய் சிவா, இசைக்கவி ரமணன், SB Creations நாடகக் குழுவின் இயக்குநர் திரு. ராமன், தமிழ்ஹிந்து தளத்தின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு ஜடாயு, வலம் இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவரான திரு. ஹரன் பிரசன்னா, பிராமின் டுடே இதழின் ஆசிரியர் திரு. S S வாசன். விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த திரு. பாலசுப்பிரமணியன், சுதேசி இதழின் ஆசிரியை திருமதி பத்மினி ரவிச்சந்திரன், சமூக-பண்பாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு. டி.கே ஹரி, பாரதி-யார் நாடகத்தில் முக்கியப் பாத்திரமேற்று நடிக்கும் நாடக நடிகர் திரு விட்டல் ராவ், ஆலிண்டிய ரேடியோவில் பணிபுரியும் திரு.ராமஸ்வாமி சுதர்ஸன், சமூக வலைத்தளச் செயல்பாட்டாளர் அருண்பிரபு, மறைந்த ஹரன் அவர்களின் அண்ணன் திரு. பி.ஆர் ஸ்ரீதரன், அவரது ச்கோதரி திருமதி விஜி ஆகியோர் ம்றைந்த ஹரன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஹரன் அவர்களின் நண்பரும் அமெரிக்காவில் பணியாற்றுபவருமான ஜெயக்குமாரின் தாயார் கலந்து கொண்டு தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி சார்பிலும், ஹரன் அவர்களின் பள்ளித்தோழர்கள் சார்பில் திரு நாராயணன் அவர்களும், அவரது பணிக்கால நண்பர்கள் சிலரும் கண்ணீருடன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவன இயக்குநர் திரு.பால கௌதமன், பாஜக தலைவர்கள் திரு.ஓமாம்புலியூர் ஜெயராமன், திரு.குட்டி கணேசன், திரு.டால்ஃபின் ஸ்ரீதரன், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான தில்லியைச் சேர்ந்த ராஜேஷ் ராவ், சாரதா இன்ஃபோடெக் நிறுவனத்தின் தலைவர் வெங்கடாத்ரி, ஓராசிரியர் பள்ளி அமைப்பிலும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்திலும் பங்காற்றும் திருமதி பிரியா வெங்கட், நாகர்கோவிலைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் திரு. பாலகிருஷ்ணய்யர் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசியச் செயலாளர் திரு.ஹெச். ராஜா அவர்கள் ஆலய வழிபடுவோர் நலனுக்கும் ஆலயங்களின் பெயரில் உள்ள நிலம் மற்றும் நீர் நிலைகள் மீட்பு, கோவில் சொத்துக்கள் பராமரிப்பு குறித்த விவகாரங்கள், வழக்குகள் இவற்றில் ஹரன் அவர்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைத்தார்.
விஜயவானி, நியூஸ் டுடே, யுவ பாரதி உள்ளிட்ட பல பத்திரிகைகளின் நிருபர், உதவி ஆசிரியர் திரு. பி.ஆர்.ஹரன் அவர்கள் கடந்த 4ம் தேதி அகால மரணமடைந்தது நம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. Temple worshipers society யின் நிறுவன உருப்பினராகவும் சிறந்த இந்துத்துவா சிந்தனையாளராக திகழ்ந்தார். அவரது மறைவு தேசிய சக்திகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஒவ்வொரு இந்து கோவில்களுக்கும் பக்தர்கள் குழு நியமித்து கோவில்களின் மரபும், சொத்துக்களும் காக்கப்பட நடவடிக்கை எடுப்பதே நாம் அவருக்கு செலுத்தும் சரியான அஞ்சலி ஆகும்.
– ஹெச்.ராஜா
மேலும் தமிழகத்தில் தேய்ந்துவரும் தேசிய சிந்தனையை மீட்டெடுக்க ஹரன் அவர்கள் ஆற்றிய அரும்பணிகள் குறித்தும் அடுத்த தலைமுறை குறித்த அவரது கருத்துக்கள் குறித்தும் பேசி, ஹரனது எண்ணங்களை ஒட்டி அவரது செயல்பாடுகளை முன்னெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவேண்டும். அவர்கள் மூலம் சமூக மாற்றத்துக்கு பாடுபடவேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஹரன் பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு தேசியம், தர்மம், கோவில்கள், விலங்குகள் பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவும் கருத்து முன்மொழியப்பட்டது.
பலரும் இந்தச் செயல்பாடுகளில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்தனர். பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
தகவல்: – அருண்பிரபு ஹரிஹரன்







A great loss to our nation.He sacrificed his life for Hindu unity. We have to follow his writings and actions for a brighter India.