உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத் தொகையாக ரூ.255 கோடி கிடைத்துள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள குரோசியா அணிக்கு ரூ.188 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்டிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும், குரோஷிய அணி ரசிகர்கள் மனதில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளது.
முதலில் குரோஷியா நாட்டின் வரலாற்றைப் பார்த்தால் அதன் வெற்றிக்கான முக்கியத்துவம் புரியும். யுகோஸ்லோவியாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது 1991-ம் ஆண்டு பிரிந்து சென்று தனி நாடாக உதித்தது குரோஷியா. மொத்தம் 41 லட்சம் மக்கள் தொகையை கொண்டது குரோஷியா. இவ்வளவு சிறிய நாடு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறி உலகில் உள்ள ஒவ்வொரு ரசிகரையும், தன் பக்கம் ஈர்த்துள்ளது.
இந்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கால்பந்தை உயிர்மூச்சாக சுவாசிப்பதே இதற்கு காரணம். 1998 உலகக் கோப்பையில், அரையிறுதி வரை முன்னேறி, குரோஷியா என்ற நாடு உதயமானதை எடுத்துரைத்தது. ரஷ்யாவில் நடைபெற்ற தொடரின், இறுதி போட்டியில் தோல்வியடைந்தாலும், உலகில் உள்ள ஒவ்வொரு கால்பந்து ரசிகர் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது- இதற்கெல்லாம் காரணம் குரோஷியாவின் கேப்டன் மோட்ரிச்.
உள்நாட்டுப் போரால் அகதியான மோட்ரிச் சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டு மீது தீரா காதல் கொண்டவர். ஸ்ட்ரீட் பிளேயராக இருந்த மோட்ரிச், விடா முயற்சியாலும் அசாத்திய திறமையாலும் குரோஷிய அணியை வழிநடத்தும் அளவுக்கு உயர்ந்தார். இறுதிப் போட்டி வரை அணியை அழைத்துச் சென்ற இவர். நடப்பு உலகக் கோப்பை தொடரில் மட்டும் 72 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடி 523 பாஸ்கள் செய்து அசத்தியுள்ளார். மோட்ரிச்சுக்கு பக்கபலமாக அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் செயல்பட்டனர். மற்றொரு நடுகள வீரர் ராக்கிடிச் மைதானத்தில் பம்பரமாக சுழன்று அணிக்கு தூணாக திகழ்ந்தார்.
குரோஷிய அணி ஒருவரை மட்டுமே நம்பியில்லாமல் ஒட்டுமொத்த வீரர்களின் திறமையையும் மூலதனமாக வைத்து இந்த சாதனையை எட்டிப்பிடித்துள்ளது. குரோஷிய அணியில் 8 வீரர்கள் கோல் அடித்துள்ளதே இதற்கு சிறந்த உதாரணம்.
அணியின் பயிற்சியாளர் தாலிக் சலாக்கோ, 1998ஆம் ஆண்டு தனது அணிக்காக விளையாடியவர். அவரே அணிக்கு பயிற்சியாளராக கிடைத்தது கூடுதல் பலமாக அமைந்தது. அவர் வகுத்த ஒவ்வொரு வியூகங்களும் இந்த போட்டியில் குரோஷியாவை தலை நிமிரச்செய்துள்ளது. போட்டியின் போது, ஆரம்பத்தில் கோல் வாங்கினாலும் வீரர்கள் சோர்வடையாமல் கடுமையாக போராடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே குரோஷியாவின் பலமாக பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த ரகசியத்தை இறுதி போட்டியில் மறந்ததே அந்த அணி தோல்வியடைய காரணமாக அமைந்தது. இருப்பினும் குரோஷிய வீரர்கள் தனது அசாத்திய திறமையால் உலகில் உள்ள ஒவ்வொரு ரசிகர்களையும் தங்கள் அணியின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளனர். குரோஷிய அதிபரின் நேரடியான பாராட்டே அதைச் சொல்லும்!
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பும் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.