“மேடம்! ப்ளீஸ். நாம் கூட போவோம் மேடம்!” என்றாள் விஜயா. சீதா சமையல் அறையில் வேலையாக இருந்தாள். சீதாவின் வீட்டின் பின் வீட்டில் தான் விஜயா பெற்றோருடன் வசிக்கிறாள்.
விஜயாவுக்கு கோதாவரி புஷ்கரம் பார்க்க வேண்டுமென்று ஆசை. ஆனால் அவள் பெற்றோர் தங்களால் அந்த கூட்டத்தில் வர இயலாது என்று மறுத்து விட்டனர். விஜயாவின் அண்ணனும் அண்ணியும் போய் ஸ்நானம் செய்து விட்டு வந்து விட்டனர். அதனால் தான் சீதாவிடம் ஓடி வந்தாள் விஜயா. ஆறு வருடங்கள் சீதாவின் மாணவியாக இருந்த விஜயாவுக்கு சீதா மேடம் என்றால் உயிர்.
“சொல்லுங்க மேடம்! லட்சக்கணக்கானோர் புஷ்கரம் சென்று குளித்து விட்டு வருகிறார்கள். நாம் போக வேண்டாமா?” என்றாள் விஜயா மீண்டும்.
சீதாவுக்கும் கோதாவரியில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்று தான் இருந்தது. ஆனால் அவள் கணவன் ரவீந்திரனுக்கு அதில் விருப்பமில்லை.
“சீதா! அந்த புண்ணிய நதியில் ஸ்நானம் செய்வதற்காக அந்த கூட்டத்தில் போய் வருவது ரொம்ப சிரமம். ஆனாலும் போகாதவங்களுக்காக, போய் குளிச்சுட்டு வந்தவங்க ஓர் பாட்டில்ல நதி நீர் கொண்டு வந்து தராங்களே! அதை எடுத்து தலையில் தெளிச்சுகிட்டா போச்சு” என்று எளிதாகக் கூறி விட்டான் ரவீந்திரன். சீதாவுக்கு அவன் கூறியது பிடிக்கவில்லை.
கணவனும் மனைவியின் சேர்ந்து நதியில் புஷ்கர ஸ்நானம் செய்ய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் புஷ்கரத்திற்கு போகாமல் எப்படி இருப்பது? சீதாவுக்கு ஒரே யோஜனையாக இருந்தது.
அப்போது எதிர் வீட்டுப் பையன் உள்ளே வந்தான். “ஆன்ட்டி! குழாயில் தண்ணி வருதான்னு அம்மா கேட்கச் சொன்னாங்க!” என்றான்.
“டேய்! சீனு! உங்கம்மா புஷ்கரத்துக்கு வருவாங்களான்னு கேட்டுச் சொல்றயா?” என்றாள் சீதா.
“எங்கம்மாவுக்கு ரொம்ப ஆசை போய் குளிக்கணும்னு. ஆனால் நாங்க தான் போக வேண்டாம்னு சொல்லிட்டோம்” என்றான் சீனு.
“நீங்க யாருப்பா போகாதேனு சொல்வதற்கு? நானும் உங்கம்மாவும் சேர்ந்து போகப் போறோம்” என்றாள் சீதா.
இது நடந்து நான்கு நாட்களாயிற்று. விஜயவாடாவிலிருந்து சீதாவின் அக்கா போன் செய்தாள்.
“சீதா! புஷ்கரத்துக்கு போகப் போகிறாயா? ஜாக்கிரதையாகப் போய் வா. நதியில் இறங்கி விடாதே. கரையிலிருந்தபடியே ரெண்டு சோம்பு நீர் மொண்டு தலையில் ஊற்றிக்கொண்டு வந்து விடு. தண்ணீர் கூட அதிகம் இல்லையாம். கேள்விப்பட்டேன். பஸ் இறங்கி ரொம்ப தூரம் நடக்கணுமாம். சொன்னாங்க..!” இன்னும் ஏதேதோ பயமுறுத்தினாள் சீதாவின் அக்கா. சீதா போனை வைத்து விட்டாள்.
ஆளாளுக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டாங்க. எப்படி யிருந்தாலும் புஷ்கர ஸ்நானத்துக்குப் போய்த் தான் தீர வேண்டும் என்று முடிவோடு இருந்தாள் சீதா.
“விஜயா! வா! நாம் ரெண்டு பெரும் போயிட்டு வருவோம். அங்கிளுக்குப் பிடிக்காதாம். வரா விட்டால் போகட்டும். நாம் எப்படிப் போவது? பஸ்ஸிலா?” என்று கேட்டாள் சீதா. சீ தா கலந்து எடுத்து வந்த காபியை ஆசிரியையும் மாணவியும்அமர்ந்து குடித்தனர்.
“என் சித்தப்பா கார்ல அழைச்சுட்டு போறேன்னு சொல்லியிருக்கார் மேடம்! நீங்க ரெடியாகுங்க. நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்பனும்னு கேட்டுச் சொல்றேன்” என்ற விஜயா உற்சாகத்தோடு எழுந்தாள்.
“அங்கிள்! நீங்களும் வாருங்களேன்!” என்றாள் ரவீந்திரனிடம்.
“அந்த புண்ணியத்துக்கெல்லாம் எனக்கு பிராப்தம் இல்லையம்மா. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்” என்றான் கிண்டலாக.
“விஜயா! அவர் அப்படித்தான் பேசுவாரு. நீ போ” என்றாள் சீதா.
கோதாவரி நதித் தாயை வணக்கும் பாக்கியம் தன் மாணவி விஜயாவால் தனக்கு கிடைக்கப் போகிறது என்று எண்ணி மகிழ்ந்தாள் சீதா. யாரோ கொண்டு வந்து தரும் பாட்டில் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொணடால் புண்ணிய நதியில் முங்கி குளித்தாற் போலாகுமா? நதியில் இறங்கி மூன்று முழுக்கு போட்டு விட்டு கூடியிருக்கும் கோடிக் கணக்கான ஜனத்திரளோடு சேர்ந்து நாமும் கோயில் தரிசனம் செய்து கொள்ளும் ஆனந்தம் எப்போதும் கிடைக்குமா என்ன?
“நீங்க அந்த செய்தித்தாளைப் படிச்சு கிட்டு அப்படியே உட்கார்ந்திருங்க. நானும் அந்தப் பொண்ணு விஜயாவும் நாளைக்கு கிளம்பறோம். நீங்களும் வரக் கூடாது? விஜயாவின் சித்தப்பா கார் எடுத்துக்கிட்டு வறாராம்” என்றாள் சீதா.
“எனக்கும் வரணும் போல் தான் இருக்கு சீதா. ஆனாலும் நான் வரவில்லை. என்ன விட்டு விடு” என்றான் ரவீந்திரன் புன்னகையோடு.
“உங்களுக்குப் பிடிவாதம் அதிகம்” என்று சொல்லி விட்டு பிரயாணத்துக்கான வேலைகளில் முனைந்தாள் சீதா.
இரவு பதினொன்று இருக்கும். வாயில் அழைப்பு மணி ஒலித்தது. “இந்த நேரத்துல யாருப்பா அது?” என்றாள் சீதா.
“நான் போய் பார்க்கிறேன்!” என்று ரவீந்திரன் கட்டிலிலிருந்து எழுந்தான்.
“டாடீ! மம்மி தூங்கறாங்களா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தாள் சீதாவின் பெண் சுதா.
இடுப்பில் ஒன்பது மாத பெண் குழந்தை. அருகில் மாப்பிள்ளை கிஷோர். மும்பையிலிருந்து பிளைட்டில் வந்து இப்போது தான் இறங்குகிறார்கள். கோதாவரி புஷ்கரத்திற்குச் செல்ல வேண்டுமென்ற ஆசையில் வந்துள்ளார்கள்.
“டாடீ! என்னை விட கிஷோருக்குத் தான் ரொம்ப விருப்பம். பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை வரும் புண்ணிய நதி புஷ்கரத்தில் ஸ்நானம் செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டே இருந்தார்” என்றாள் சுதா.
கண்களை விழித்துப் பார்த்த சீதாவால் நம்பவே முடியவில்லை. இவர்கள் வர போவதாக சொல்லவே இல்லையே!
“மம்மீ! முழிச்சுகிட்டியா? என்னை விட எங்க வீட்டுக்கார்தான் பிடிவாதமா கூட்டிக்கிட்டு வந்தார். அதோடு அங்கேயிருந்து அப்படியே அவங்க ஊருக்கும் போயிட்டு வரணும்னு பிளான். அவரோட அம்மா அப்பா தாத்தா எல்லோரையும் போய் பார்த்துட்டு வரலாம்னு இருக்கோம். எல்லாம் சேர்ந்து ரெண்டு நாள் தான்” என்றாள் சுதா.
“ரெண்டு நாள்ல என்னத்த பார்க்க முடியும்? உங்க ஊருக்குப் போனால் நாலு நாள் இருந்துட்டு வர வேண்டாமா? உன் மாமனார் தன் பேத்தியோடு ஆசை தீர விளையாடணும்னு நினைக்க மாட்டாரா?” என்றாள் சீதா.
“குழந்தையை அழைச்சுக்கிட்டு போகப் போவதில்லை அத்தை!” என்றான் கிஷோர்.
“ஏன்? பாப்பாவை அழைச்சுகிட்டு போகாட்டா எப்படி?” சீதாவுக்கு வியப்பாக இருந்தது.
“என்ன மம்மீ! இப்படி கேட்கிறாய்? புஷ்கரக் கூட்டத்தில் குழந்தையை எப்படி அழைத்துச் செல்வது? அங்கே ஏதாவது இன்பெக்ஷன் வந்திடுச்சுனா? ஒரு ரெண்டு நாள் நீயும் டாடியும் பாப்பாவை பார்த்துக்குவீங்கன்னு தான் இந்த பிளான் போட்டோம். அவள் பால் பாட்டில்ல பால் குடிச்சுக்குவா. கவலைப்படாதே! அழவே மாட்டாள். அவளோட டைபர், கவுன், பவுடர் எல்லாம் எந்த பெட்டியில் தனியா வெச்சிருக்கேன்” சுதா உற்சாகமாக கூறினாள்.
ஒரு நிமிடம் பேச்சற்று நின்று விட்டாள் சீதா. மகளும் மருமகனும் கோதாவரி புஷ்கரத்துக்கு போகப் போறாங்க. நான் பேத்தியைப் பார்த்துக்கிட்டு வீட்ல இருக்கணும். இது தானே அவுங்க பிளான்?
‘எனக்கு லீவு கிடைப்பதே கஷ்டமாயிடுச்சு அங்கிள். எப்படியும் இந்த புஷ்கரத்திற்கு வந்தே தீருவது என்று தீர்மானித்து விட்டேன்” என்று மாமனாரிடம் சொல்லிக் கொண்டிருந்தான் கிஷோர்.
சீதா சமையலறைக்குச் சென்று விட்டாள். குழந்தையைப் பார்த்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல முடியுமா என்ன? அல்லது பச்சை குழந்தையை புஷ்கரத்திற்கு தூக்கி கொண்டு போ என்று தான் சொல்ல முடியுமா? மேலும் மாப்பிள்ளையும் உடன் செல்வதால்…. என் பயணம் அவ்வளவுதான். எனக்கு புஷ்கர ஸ்நானம் செய்யும் பாக்கியம் இல்லை போலும். சீதாவின் மனம் வருந்தியது.
***
பொம்மைகளோடு விளையாடிக் கொண்டிருந்த பேத்தி முகம் பார்த்து சிரித்தாள். மடியில் வைத்துக் கொண்டு பால் பாட்டிலை குழந்தைக்கு கொடுத்தாள் சீதா. ‘பாவம் சீதா!’ என்று அவளைப் பார்த்து பரிதாபப்பட்டான் ரவீந்திரன்.
சமையலறையில் சீதாவின் அருகில் வந்த விஜயா விஷயத்தை அறிந்து வருத்தப்பட்டாள். “மேடம்! நீங்க வரலைன்னா நானும் போக மாட்டேன்” என்றாள்.
“அதற்காகத்தான் நான் ஆபீசுக்கு லீவு போட்டிருக்கேன்” என்றான் அங்கு வந்த ரவீந்திரன்.
“நீங்க லீவு போட்டுட்டு என்ன செய்யப் போறீங்க?”சீதா வினவினாள்.
“அது தான்…நேற்றே…லீவு” என்று தடுமாறிய கணவனைப் பார்த்து சீதாவுக்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.
“அப்படீன்னா நம்ம பொண்ணு மாப்பிளை வரப் போகும் செய்தி உங்களுக்கு முன்பே தெரியுமா?” சீதாவுக்கு அழுகை வந்தது. “டாடிக்கு மட்டும் போன் செய்து சொல்லியிருக்கிறாளா மகள்? நீங்களும் உடனே லீவு எழுதிக் கொடுத்துட்டு வந்திருக்கீங்க… என்னிடம் ஒரு வார்த்தை கூட இருவரும் சொல்லவில்லை. என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்” என்றாள் சீதா. அவள் குரல் தழுதழுத்தது.
ரவீந்திரன் பதில் எதுவும் சொல்லாமல் பேத்தியைத் தூக்கி எடுத்து கொஞ்சலானான்.
சீதா குளியலறைக்குச் சென்றாள். ‘கோதாவரி புஷ்கரத்திற்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு நதித் தாயை ஏமாற்றி விட்டேன். என்னை மன்னித்து விடு அம்மா! கோதாவரி!’ என்று சொல்லிக் கொண்டே கண்ணை மூடிக் கொண்டு மூன்று சொம்பு நீர் முகந்து தலையில் ஊற்றிக் கொண்டாள். “கங்கே ச யமுனே சைவ கோதாவரீ சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு!” என்ற மந்திரத்தைச் சொல்லி இது தான் என் புஷ்கர ஸ்நானம் என்று நினைத்துக் கொண்டாள்.
யாரோ “சீதா! சீதா!” என்று அழைப்பது போல் தோன்றியது. “யாரது?”
“அனைத்து ஜலங்களிலும் இருப்பது நானே! எங்கும் நிறைந்திருப்பது நானே! நீ இந்த பவசாகரத்திலிருந்து நீந்தி வர வேண்டுமென்பதற்காக நானே உன்னிடத்திற்கு வந்துள்ளேன். என் ஆசிகள் உனக்கு எப்போதும் உண்டு!”
இது யாருடைய குரல்? நிச்சயம் கோதாவரி அன்னை தான். சந்தேகமேயில்லை. சீதா தண்ணீர் நிரம்பிய வாளிக்குள் குனிந்து பார்த்தாள். தலை முடி அலை அலையாக நகர்ந்து தரிசனமளிப்பது கோதாவரி நதி அன்னையே தான். தன்னையறியாமல் அந்த நீரை கை கூப்பி வணங்கினாள் சீதா.
தலை முடியை ஆற்றிக் காய வைத்து நுனியில் முடிந்து கொண்டாள் சீதா. பேத்தியைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள். “நான் போகவில்லை என்று இப்போது சிறிதும் எனக்கு வருத்தமில்லை. என் புஷ்கர ஸ்நானம் நான்றாக முடிந்தது” என்று கூறிக் கொண்டே தன் முகம் பார்த்து சிரிக்கும் பேத்தியை நெஞ்சோடு அணைத்து முத்தமிட்டாள்.
“பார்த்தீர்களா? இந்தக் குட்டிப் பாப்பாவை பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். என்னைப் பார்த்துக் கொள்ள அந்த கோதாவரி அன்னை இருக்கிறாள்” என்றாள் கணவனிடம்.
ரவீந்திரனும் அவள் அருகில் வந்தமர்ந்து குழந்தையைக் கொஞ்சலானான்.
தெலுங்கில் -டாக்டர் முக்தேவி பாரதி
தமிழாக்கம் – ராஜி ரகுநாதன்




