விஸ்வ சம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பில் சிறந்த பத்திரிகையாளர்களை பெருமைப்படுத்தும் பொருட்டு ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா 17.06.2019 அன்று, திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது.
மூத்த பத்திரிகையாளர் பிரேமா நந்தகுமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ஆர்எஸ்எஸ் தென்மாநில செய்தி தொடர்பாளர் கிருஷ்ண முத்துசாமி அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர்.ராமசுப்பு தலைமை தாங்கி பேசினார். சிறந்த பத்திரிகையாளர்களுக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருதுகள் வழங்கி ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத ஊடகப் பொறுப்பாளர் அருண்குமார் சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தமிழக அரசியல் இதழ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் திரிசக்தி சுந்தர்ராமன் ( எ ) கார்கோடன், தினசரி டாட் காம் இணைய இதழ் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம், வலம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ் தென்பாரத செயலாளர் ராஜேந்திரன், திருச்சி கோட்ட தலைவர் செல்லதுரை, மூத்த பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஆர் ராமசுப்பு பேசியபோது… இந்த விழாவுக்கு ஏன் நாரதர் ஜெயந்தி விருது வழங்கும் விழா என்று பெயர் வைத்தார்கள் என சற்று புதிராகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. உலகின் முதல் பத்திரிக்கையாளர் நாரதர் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ பத்திரிக்கையாளர்களை பாராட்டி விருது வழங்க நாரதர் ஜெயந்தி என்று பெயர் வைத்திருப்பார்கள் என்று நான் கருதினேன்.
நாரதர் பணி மூவுலகையும் சுற்றி வந்து ஒருவர் குறித்த செய்திகளை மற்றொருவரிடம் கூறி கலகம் செய்து அதுவே நன்மையில் முடிவதாக புராணங்கள் கூறுகின்றன! அதுபோல் பத்திரிகைகளில் வரும் சர்ச்சையான பரபரப்பான விமர்சனத்திற்கு உள்ளான பல செய்திகள் கலகத்தில் தொடங்கினாலும் நன்மையில் முடிந்ததற்கு உதாரணங்கள் பல உண்டு!
இன்றைய பத்திரிகை மற்றும் ஊடக உலகம் தொழில்நுட்பரீதியாக மிகப்பெரும் பரிணாம வளர்ச்சியைக் கண்டுவருகிறது! குறிப்பாக மின்னணு ஊடகங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன! இந்த வளர்ச்சி வளமான வளர்ச்சியா அல்லது ஆபத்தான வளர்ச்சியா என்பது பெரும் புதிராக சந்தேகங்களை எழுப்புகிறது!
ஒரு காலத்தில் மிகப் பெரிய ஊடகமாகப் பார்க்கப்பட்ட அச்சு ஊடகம் பின்னாளில் காட்சி ஊடகமாக ஆன்லைன் ஊடகமாக சமூக ஊடகமாக மொபைல் ஊடகமாக என… புதிது புதிதாக அவதாரம் எடுத்து வருகிறது.
இதனால் மின்னணு ஊடகங்கள் அச்சு ஊடகங்களை போல் எதிர்காலத்தில் பொறுப்பாக நம்பகத்தன்மையுடன் இருக்குமா என்பதும் அச்சு ஊடகங்களை அழித்துவிடுமா என்ற சந்தேகமும் எழுகிறது
இன்றைய சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான்! ஒரு செய்தியை அல்லது கதையை கம்ப்யூட்டரில் படிப்பதைவிட புத்தகத்தில் படித்தால் எவ்வளவு சுகம் என்பது படித்து அனுபவித்தவர்களுக்கே புரியும் … என்று தனது கருத்தைப் பதிவு செய்தார் ஆர்.ராமசுப்பு!
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய ஊடகப் பொறுப்பாளர் அருண்குமார். அவர் தன்னுடைய பேச்சில், ஒரு நாட்டின் சமுதாயத்தை கெடுக்க வேண்டும் என்றால் அங்கு வாழும் மக்களின் பெருமைகளையும் வரலாற்றையும் மறக்கடிக்கச் செய்தாலே போதும்; அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது!
நாரதர் ஜெயந்தி விழா என்று கூறினால் இது என்ன ஆர்எஸ்எஸ் புதிதாக கண்டுபிடித்ததா என்று கேட்கிறார்கள்! நாட்டின் முதல் பத்திரிகை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது, நாரதர் பிறந்த நாளில்தான்! நாரதர் போல் நாட்டுக்கு நல்ல செய்திகளை தருவதே எங்கள் நோக்கம் என்ற அறிவிப்புடனேயே அந்த நாளிதழ் வெளியானது!
உத்தரப் பிரதேசத்தில் நாட்டின் முதல் செய்தி ஏஜென்சி தொடங்கப்பட்ட போது அந்த மாநில ஆளுநராக இருந்த சரோஜினி நாயுடு விடுத்த வாழ்த்துச் செய்தியில் உலகின் முதல் செய்தியாளரான நாரதர் வழிநின்று நாடு வளம் பெறும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்!
அந்த வரலாற்றை மறந்து விட்டு நாரதர் ஜெயந்தி விழா என்றவுடன் கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருக்கிறார்கள்! தர்மத்தின் அடிப்படையில் இந்த நாடு கட்டமைக்கப்பட்டுள்ளது! அதை மறக்கும்போது அடிப்படையை மறந்து விடுகிறோம்! தேசமே மாறிவிடுகிறது!

இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது! அந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை ஊடகங்கள் செய்ய வேண்டும்! மக்களிடம் பாரபட்சம் இல்லாமல் யாரையும் வெறுத்து ஒதுக்காமல் யாருக்கும் அஞ்சாமல் பழக வேண்டும்; செய்திகளை வெளியிட வேண்டும்!

பத்திரிகையாளர்கள் எளிமையானவர்களாக எவரும் எளிதில் அணுகக் கூடியவர்களாக இருக்க வேண்டும்! அத்தகையவர்களை தேர்வு செய்து நாரதர் ஜெயந்தி விழாவில் விருது வழங்கியது பாராட்டுக்குரியது என்றார் அருண் குமார்!

இந்த நிகழ்ச்சியில் விருதுகளைப் பெற்ற தமிழக அரசியல் இதழில் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் திரிசக்தி சுந்தர்ராமன், தினசரி டாட் காம் இணைய இதழ் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம், வலம் பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் ஹரன் பிரசன்னா ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர். விஸ்வ சம்வாத் கேந்திர தென் தமிழக பொறுப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார்.