
பாரதியாரின் கண்ணன் பாட்டு
பகுதி – 13, கண்ணன் – என் அரசன்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
பாடலின் தொடர்ச்சி. . .
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;
வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்வான். . … 8
காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
கணத்தி லேடதி தாக விளங்குவான்;
ஆல கால விடத்தினைப் போலவே,
அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். … 9
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
வெந்து போகப் பகைமை பொசுக்குவான்;
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்
பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். … 10
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ?
இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! . … 11
கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்;
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்
தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். … 12
நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். … 13
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!
அண்ண லின்னருள் வாடி ய நாடுதான்
அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! … 14
இனி பாடலின் பொருளைக் காணலாம்.
எங்கள் அரசன் இருக்கிறானே கண்ணன், அவன் என்ன செய்வான் தெரியுமா? எதிரிகளால் பகை முற்றி முதிர்ந்திடும் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பான்; எதற்கும் ஓர் புன்னைகை அவ்வளவுதான், இப்படியே நாட்களை, மாதங்களை, ஆண்டுகளை ஓட்டிக் கொண்டிருப்பான். இந்த கண்ணன் என்று பகைவர்களோடு போர் புரிவது, என்று எதிரிகளை அழிப்பது இது நடக்காத காரியம் என்று நாம் மனம் சோர்ந்து போவோம்.
இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் சோர்ந்து நாட்கள் யுகங்களாகக் கழிந்து போகும். எதிரிகளோடு போர் என்றால் படை வீரர்களைச் சேர்க்க வேண்டாமா? துணைவர்கள் ஏவலர்கள் இவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? போருக்கு அதிகமாக செலவு ஆகுமே, அதற்கு செல்வத்தைச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டாமா? இவற்றுக்கான எந்த வேலையையும் செய்யமாட்டான்.
மாடு மேய்ப்பவன் தானே, இவன் வீரமில்லாதவன், பயந்தாங்கொள்ளி என்று மற்றவர்கள் பேசும் ஏச்சுக்கெல்லாம் இவன் வெட்கப்படுவதே யில்லை. கண்ணனைக் கொல்ல பூதகியை அனுப்பிய இவனது மாமன் உல்லாசமாக செங்கோல் ஏந்தி இந்த பூவுலகை ஆளுகின்றபோது, இவன் ஆயர்குல பெண்டிரோடும், அவர்கள் ஆடுகின்ற ஆட்ட பாட்டங்களில் மனம் களித்து அதில் மனத்தைச் செலுத்திக்கொண்டு பொழுதைக் கழிப்பான்.
மழை வராதா என்று ஏங்கும் பயிர்கள் போல மக்கள் இவன் மனம் திருந்தி போருக்குத் தயாராக மாட்டானா என்று தவிக்கும்போது, இவனோ, சங்கீதம், தாளம், கூத்து, தனிமையில் அமர்ந்து குழலூதுதல் என்று இவற்றில் மனம் செலுத்துவான். அவன் காலைப் பிடித்துக்கொண்டு எங்களுக்கு ஒரு வழிகாட்டு என்று கெஞ்சினால், நாலில் ஒன்று பலித்திடும் பார் என்பான், இதற்கு என்ன பொருள் என்று எப்படி உணர்வது?
இதன் தொடர்ச்சியை நாளை காணலாம்.