கோயில்களில் பக்தர்களுக்கு வாரம் மூன்று நாள் தரிசனத்துக்கு தடை தொடரும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பிலிருந்து 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப் படுவதாகவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தற்போது நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நவம்பர் 1-ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது மன அழுத்தத்தையும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுனர்கள், பெற்றோர் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் பள்ளிகளை திறக்க அரசு அனுமதித்துள்ளது.
அதே போன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் நடத்தவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
சமுதாயம், அரசியல், கலாச்சார நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும், குடமுழுக்கு, திருவிழா உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு விதித்த தடை தொடர்வதாகவும் தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. .