திருப்புகழ்க் கதைகள் 159
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆறுமுகம் ஆறுமுகம்– பழநி
திருநீறு
அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றிப்பதிநான்காவது திருப்புகழ் ‘ஆறுமுகம் ஆறுமுகம்’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “அடியார்க்கு அடியாரைப் பணிந்து, முருகனைத் துதிக்கும் ஏழைகள் துன்பம் நீங்க”அருணகிரிநாதர் முருகப் பெருமானிடம் இப்பாடலில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் …… என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
யார்கள்பத மேதுணைய …… தென்றுநாளும்
ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
ஈசஎன மானமுன …… தென்றுமோதும்
ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
யேவர்புகழ் வார்மறையு …… மென்சொலாதோ
நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
நீலமயில் வாகவுமை …… தந்தவேளே
நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
நீடுதனி வேல்விடும …… டங்கல்வேலா
சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
தேவர்துணை வாசிகரி …… அண்டகூடஞ்
சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
தேவர்வர தாமுருக …… தம்பிரானே.
இத்திருப்புகழின் பொருளாவது – திருநீறு பூசிய பொன்போன்ற திருமேனியரே, வேலாயுதரே, அழகிய நீலமயில் வாகனரே, உமாதேவியின் திருப்புதல்வரே, கொடிய அசுரர்களுடன் அடியேனுடைய தீவினைகள் முழுதும் அழிந்து போக, நிகர் அற்ற நெடிய வேற்படையை விட்டருளிய, ஊழித்தீயைப் போல் உக்ரமுடைய வேற்படையை உடையவரே, பகைகொண்டு சினத்துடன் வந்த கஜமுகாசுரனது ஆவியைப் போக்கிய கரிமுகக் கடவுளாம் கணபதியின் சகோதரரே, கோபுரங்கள் அண்ட கூடம் வரை ஓங்கி அழகு செய்யும் பழநி மலையின்மேல் உறைகின்ற குமாரக் கடவுளே, பிரமாதி தேவர்களுக்கு வரத்தைக் கொடுக்கும் வரதராஜரே, முருகப் பெருமானே, எப்பொருட்குந் தலைவரே,
ஆறுமுகம் ஆறுமுகம் என்று ஆறு முறை ஓதி திருநீற்றை அன்புடன் உடம்பில் அணிந்து கொள்ளும் மாதவர்களுடைய அடியார்களது பாதமலரே உற்ற துணை என்று நம்பி, “ஏறுமயில் வாகனனே, குகா, சரவணா, ஈசா, என்னுடைய மானம் உம்முடையதே” என்று உம்மிடம் நாள்தோறும் மோதிக் கொள்கின்ற ஏழைகளுடைய துன்பத்தைக் கண்டு, ‘உமக்கு யாது துன்பம்?’ என்று வினவாது இருந்தால், அடியார்க்கு எளியன் என்றும் அருளாகரன் என்றும் யார் தாம் புகழ்வார்கள்? (உம்மையே பரம் என்று முழங்கிக் கூறும்) வேதந்தான் என்ன சொல்லும்? (உலகோர் உம்மை நிந்திக்காமலிருக்கும் பொருட்டும் வேதம் உம்மை வேறுவகையாகக் கூறாதிருக்கும் பொருட்டுமாவது அடியேனைக் காத்தருள்வீர்) – என்பதாகும்.
நெற்றியில் தங்கள் மதத்திற்கேற்ப (சைவ, வைணவ, சாக்த மதங்களுக்கேற்ப) திருநீறு அல்லது திருமண், அல்லது குங்குமம் அணிவது நம்மில் பலருக்கு வழக்கம். சைவ மதத்தில் பெண்களும் திரிபுண்டரமாக அதாவது மூன்று கோடுகளாக திருநீறு அணிந்து அதன்மேல் குங்குமம் அணிவர். ஆனால் கடந்த சில வருடங்களாக திருநீறு அல்லது திருமண் அல்லது குங்குமம் அணிவது மூடத்தனம் என பலரால் சொல்லப்பட்டு வருகிறது.
மக்கள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களை எல்லாம் நீறச் செய்து (வலுவிழக்கச் செய்து) வாழ்வில் உயர்நிலை அடையச் செய்வதால் திருநீறு என்று அழைக்கப்படுகிறது. திருநீறு நம்மால் விபூதி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. இது சிவபெருமானின் அருட்சின்னமாகக் கருதப்படுகிறது. இது எல்லா நலன்களையும் வழங்கக் கூடியது. இது சிவனடியார்களால் அணிந்து கொள்ளப்படும் புனிதப்பொருளாகும். திருநீறினை நம் நெற்றியில் அணிந்து கொள்ளும் பொருட்டு இறைவன் நெற்றியை உரோமம் இல்லாமல் படைத்திருப்பதாக சாத்திரங்கள் கூறுகின்றன.
நீறு இல்லாத நெற்றி பாழ், சிவலிங்கம் இல்லாத ஊர் பாழ் என்பது திருநீறு பற்றிய பழமொழி ஆகும். திருநீறினை அணியாமல், சிவாலய வழிபாடு செய்யாமல் போகும் பிறவி வீணானது. எனவே திருநீறினை அணிந்து சிவாலய வழிபாடு செய்து வரவேண்டும். திருநீறினை பூசிய உடல் சிவாலயத்திற்கு சமமானது.
படை கொண்ட அரசரும் இறுதியில் பிடிசாம்பல் தான் என்பது பழமொழி. இந்த உலகத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகின்றன. ஆதலால் அறவழியில் நல்ல சிந்தனையோடு தூய்மையான வாழ்வு வாழ வேண்டும். இதனை உணர்த்தவே நாம் நெற்றியில் திருநீறு அணிகின்றோம். திருநீறானது விபூதி, பஸ்மம், பசிதம், சாரம், இரட்சை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.
எனவே நம்முடைய குல வழக்கப்படி நாம் நெற்றியில் திருநீறு அணிவதற்குத் தயங்கக்கூடாது. காலையில் துயிலெழுந்ததும், காலைக் கடங்கள் முடித்து, முகம் கழுவிப் பின்னர் நெற்றி முழுவதும் இலங்க நீறு அணிய வேண்டும். அதன் பின்னர் எப்போதெல்லாம் முகம் கழுவுகிறோமோ அப்போதெல்லாம் திருநீறு அணியவேண்டும். இப்போதெல்லாம் நாம் கடைகளில் விற்கும் விபூதியை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் விபூதி தயாரிக்கவென ஒரு முறை இருக்கிறது. அம்முறையை நாளை காணலாம்.