- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.
காலச்சக்கரம் விரைவாக சுழல்கின்றது. ஆம்! 23 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் சேவாகிராம் சந்திப்பில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது. புதிய சூழ்நிலை, புது கலாச்சாரம், புது வாழ்வியல் முறை என அனைத்துமே புதுமையாய். நொடிகளை நகர்த்துவதே பெரிதாய் இருந்தது.
உள்ளூர் மொழியான மராட்டியும் வராது, இங்கு பரவலாக பேசப்படும் ஹிந்தியும் சரளமாக வராது.
என் வீட்டின் ஹாலில் பொருத்தியிருந்த தொலைபேசியில் அழைப்புகள் வரும் போதெல்லாம் நான் அடுத்த அறைக்கு படையெடுத்தேன். என் வீட்டிற்கு வருவோர்களின் ஹிந்தி தெரியுமா, ரொட்டி இட வருமா?,” – என்னும் இரண்டு அதிமுக்கிய கேள்விகளுக்கான என் பதில்கள் முறையே ‘ தோடா தோடா மாலும், தோடா தோடா ஆதா ஹை,’ என இருந்தன.
இதற்கிடையில் என் மராட்டிய சகி என்னை ஒரு மராட்டி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு ஒன்றும் விளங்க வில்லையென்றாலும் மராட்டியப் பெண்களின் உற்சாகம், கலகலப்பான சுபாவம், அவர்கள் செய்து கொண்ட ஸ்டைல் முதலியவற்றால் எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. நான் நான்கு சுவற்றில் இருந்து வெளியில் வந்ததே ஒரு திருப்தியாய் இருந்தது.
நாட்கள் கடந்தன. கடவுளின் அருளால் என் இரண்டு மகன்கள் பிறந்த பிறகு நான் என் நட்பு வட்டத்தின் விட்டத்தினை பெருக்கிக் கொள்ளத் தொடங்கினேன்.
என்னுடைய நட்பு வட்டத்தில் அனைவருமே இணைந்தனர். சிறார்கள் என் மொழிப் பிரச்சனையை, வார்த்தைகளின் உச்சரிப்பை திருத்தினர். என் வயதுடையோரோ பல விஷயங்களில் எனக்கு உதவினர். ஆண் நண்பர்களோ என்னை மராட்டியில் அவர்களுடன் பேச உற்சாகப்படுத்தினர். பெரியவர்களோ மராட்டிய – தமிழ் கலாச்சாரம் பற்றி நிறைய கலந்துரையாடினர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சில இடங்களில் வசித்ததிலும் அங்கெல்லாம் அருமையான தோழமை வட்டம் எனக்கு கிடைத்தது.
இவ்வாறு, எனக்கு அமைந்துள்ள நட்பினால் நான் இந்த நண்பர்களின் பூமியில் என் வாழ்க்கையை அருமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் வருங்காலத்திலும் இப்படியே தொடரும் என்று என் நண்பர்களின் பூமியே எனக்கு நம்பிக்கை அளிக்கின்றது.
‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ – என்ற நம் கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில் தான் எத்தனை வலிமை!! எத்தனை உண்மை!! வாழ்க நம் பாரத திருநாடு!!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்!