
- மீ.விசுவநாதன்
தேஜஸ் பௌண்டேஷன் அமைப்பு சென்னை, மயிலாப்பூர் YMIA அரங்கில் கந்தஷட்டி விழாவை முன்னிட்டு நேற்று மாலை ஐந்தரை மணிமுதல் எட்டு மணி வரை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
முதலில் வேத கோஷத்துடன் வேல் பூஜையை செய்தபின் முறையான வரவேற்பு. அதன் பிறகு கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியனின் சிற்றுரைக்குப் பிறகு கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் திருப்புகழ் உரை துவங்கி சரியாக ஏழு நாற்பதுக்கு நிறைவுற்றது.
கவிமாமணி மதிவண்ணன் அவர்களுடன் அடியேனுக்கு 1974 ஆம் வருடம் முதலே நட்புண்டு. அவர் தனது கவிதைகளை “பாரதி கலைக்கழகக் கவியரங்கங்களில் படிக்கும் முறையே அழகாக இருக்கும். பாரதி சுராஜ், பேராசிரியர் நாகநந்தி, கவிமாமணிகள் நா.சீ. வரதராஜன், வ.வே.சு., புதுவயல் செல்லப்பன், ஐயாரப்பன், இளையவன், இளந்தேவன், அமரசிகாமணி போன்ற கவிஞர்களும் மகிழ்ச்சி பொங்கக் கைகளைத் தட்டி ரசித்த பொற்காலத்தை மீண்டும் நேற்று நினைத்துக் கொண்டேன்.
உரையின் நடுவில் கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜ. அவர்களை வரகவி என்றும், ஒரு கவியரங்க நிகழ்ச்சியில் கையில் ஒரு குறிப்பும் இல்லாமலே கொடுத்த தலைப்புக்கு அருவிபோலக் கவிமழை பொழிந்ததாகவும் சொன்னபோது மகிழ்ந்தேன்.
இப்படி ஒருவர் புகழை மற்றவர் சொல்லிக் கேட்கத்தான் பெருமையாக இருக்கிறது .
முருகனின் பெருமையை எத்துணையோ பெரியோர்கள் வியந்து, பணிந்து, விநயமுடன் பாடிப் பரவசம் கொண்ட வரலாற்றை வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்கள் எங்கள் ஊர் கல்லிடைகுறிச்சியில் கந்தப்புரம் தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் கந்தபுராணச் சொற்பொழிவில் பக்தித் தேன் சொட்டச் சொட்டச் சொன்னது இன்றும் இனிக்கத்தான் செய்கிறது. கி.வா.ஜ. உரையை முடித்ததும் அவர்க்கு ஊர்ப் பெரியவர்கள் ஸ்ரீ முருகன் கோவில் பிரசாதங்கள் தந்து மரியாதை செய்தனர். பிறகு நன்றியுரை கூறச் சென்ற பெரியவரிடம்,” நீங்கள் முருகனின் பெருமையை மட்டும் கூறுங்கள். .என்னைப் பற்றிய புகழுரைகள் வேண்டாம்” என்று காதோரம் சொன்னதை அந்தப் பெரியவர் என்னிடம் பகிர்ந்து கொண்டு,” நிறைகுடம்…அவருக்கு அவருடைய குருநாதர் உ.வெ.சா. மற்றும் முருகனின் பெருமைகளைப் பேசவும், கேட்கவுமே பிடிக்கும் என்றார். அது அன்று நான் கொண்ட கொள்முதல்.
கவிமாமணி மதிவண்ணன் அவர்களின் நேற்றைய திருப்புகழ் உரையில் இருந்து அடியேன் கொண்ட கொள்முதல்கள் இரண்டு:
1) காலம் பொன் போன்றது; போனால் வராது என்பார்கள். இல்லை. பொன் போனால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். காலம் போனால் போனது தான். அதனால் காலம் உயிர் போன்றது என்று “காலத்தின் பெருமையை” உணர்த்தினார்.
2) வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் அவர்களது ஆழ்ந்த கல்வியையும், கவிச்சிறப்பையும் விளக்கி, அவரிடம் இருந்த தனடக்கத்தையும், அதற்குக் காரணம் முருகனின் திருப்புகழை மட்டுமே அவர் வாய்மணக்கப் பேசி தற்புகழை மறுத்தார் என்பதும் தான்.
நிகழ்ச்சியை கவித்துவமாக மிக அழகாகத் தொகுத்து வழங்கிய கவிஞர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் சி.வி.சந்திரமோகனுக்குப் பாராட்டுகள்.
எழுத்தாளர் இந்திரநீலன் சுரேஷ் கச்சிதமான நன்றியுரையுடன் நிகழ்ச்சி “கற்றதும், பெற்றதுமாக” நிறைவு பெற்றது.
வந்திருந்த அனைவருக்கும் பூஜை செய்த வேல், கைக்கும் அடக்கமான கந்தஷட்டி கவச நூல் ஒன்றும் தந்து மகிழ்வித்தனர்.