யாதுமாகி நின்றாய் காளி: சிங்கப்பூரில் சொற்பொழிவு

சிங்கப்பூர் டெப்போ ரோடு அருள்மிகு ருத்ரகாளியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் நேற்று மாலை கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள்”யாதுமாகி நின்றாய் காளி..” என்ற தலைப்பில் சுமார் ஒன்றேகால் மணி நேரம் அருமையான சொற்பொழிவினை வழங்கினார் .

கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் கீழாம்பூர் அவர்களைப்பற்றி அறிமுகம் செய்து வைக்க மாலை 7.30 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 8.45 வரை இனிது நிகழ்ந்தது .

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னர் காஞ்சி மகாபெரியவர் அவர்களை தாம் கண்ட பேட்டியில் இருந்து காளி குறித்த தகவல் களை சொல்ல ஆரம்பித்தவர்

பத்திரிகையாளர்கள் என்றால் திருநெல்வேலி என்றும் எழுத்தாளர்கள் என்றால் கும்பகோணம் என்றும் ஆதாரம் காட்டி பேசியபோது அரங்கு கைதட்டல்களால் அதிர்ந்ததற்கு காரணம் ஆரம்பத்திலேயே அறிமுக உரை நிகழ்த்திய கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்களும் கீழாம்பூர் அவர்களும் நெல்லைச்சீமை என்பதால் தான்.

பத்ரகாளி என்று நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு இன்றைய அர்தத்ததை கேட்ட பெண்கள் எல்லோரும் இனி தங்களை யாராவது அப்படி சொன்னால் சந்தோஷப்படுவார்கள்.

காளியின் அருள் இருந்தால் யார் வேண்டுமானாலும் காளிதாசன் மாதிரி புகழ் பெறலாம் என்றும் எல்லோரையும் காக்கும் கடவுள் காளி என்பதையும் பேசிய விதம் அருமை.

வில்லுப்பாட்டு என்று நாம் சொல்லும் வில்லிசை தோன்றிய வரலாற்றை சொன்னது வந்திருந்தோர் இதுவரை கேட்டிராத புதிய தகவல் .

இத்தகைய அருமையான பேச்சை நாம் தவற விட்டு விட்டோமே என்று நீங்கள் எண்ணினால் கவலை வேண்டாம் இன்று மாலை மூன்று மணியளவில் பூன்கெங் எம் ஆர் டி அருகில் உள்ள காலாங் கம்யூனிட்டி கிளப்பில் கவிஞர் ஏ.கே.வரதராஜன் அவர்கள் ஏற்பாட்டில் “கம்பன் எனும் பத்திரிக்கையாளன்” என்ற தலைப்பில் கீழாம்பூர் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற உள்ளது வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு இலக்கிய இன்பம் பெறலாம் !

இந்த நிகழ்ச்சியில் பேராசிரியர் சுப திண்ணப்பன் /முனைவர் இரத்தின வெங்கடேசன் /தினமலர் வெ.புருஷோத்தமன்/மூத்த எழுத்தாளர் ஏ.பி.ராமன்/தொழிலதிபர் ஜோதி மாணிக்க வாசகம்/கவிஞர் ஏ.கே.வரதராஜன் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தது மேலும் சிறப்பு.

செய்தி: கீழை. ஏ. கதிர்வேல்