விஜி என்கிற விஜயபாஸ்கர பட்டர்!

Published:

viji battar horz - 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் நம் ஆப்தராயிருந்த விஜி பட்டர் என்கிற விஜயபாஸ்கர பட்டர் இன்று காலை பரமபதித்தார் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். மனதுக்கு மிகவும் வலி தந்த செய்தியாயிருந்தது. அவரின் ஐம்பத்தியோராம் அகவையில் அரங்கன் அழைத்துக் கொண்டான்!

எப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றாலும், அவருடைய இல்லம் சென்று, அவரைப் பார்க்காமல் வந்ததில்லை. இருபது வருடங்களுக்கும் மேல் பழக்கம்! ஆண்டாள் ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவர். ஸ்ரீநிதி பிரஸ் என வைத்துக் கொண்டு, பெருமாள், ஆண்டாள், ரங்கநாதர் படங்களை அழகாக அச்சிட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை திருவரங்கம் நம்பெருமாளின் அதே அளவு படத்தைக் கொடுத்தார். நம்பெருமாள், தாயாரின் அருமையான சேம் சைஸ் படம் அது. வெகு ஆசையுடன் வாங்கி வந்து பிரேம் போட்டு இல்லத்தில் பிரதானமாக மாட்டி வைத்தேன். அதுகுறித்து பேஸ்புக்கிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் பொழுது விடியும் போதும், அந்த அரங்கன் முகத்தில்தான் அந்தரங்கப் பார்வை பதியும். அப்படியே, படத்தைக் கொடுத்த புண்ணியவாளர் விஜி பட்டரும் நினைவுக்கு வந்துவிடுவார்.

ஆண்டாள் கோயில் குறித்த கட்டுரை, படங்கள் அவரிடமிருந்து கேட்டுப்பெற்று, மஞ்சரி, சக்திவிகடன், தினமணி வெள்ளிமணி, தீபம் இதழ்களில் ஆசையுடன் பிரசுரித்திருக்கிறேன். ஆண்டாள் ஆலயத்துக்கு யாராவது செல்வதாக அடியேனிடம் சொல்லி, யாராச்சும் தெரிந்தவர் இருக்கிறார்களா என்று கேட்டால், உடனே விஜி பட்டர் எண் கொடுத்து, பாருங்கோ என்பேன். அடியேன் பெயர் சொல்லிக் கொண்டு செல்பவர்களுக்கு நன்கு ஸேவை செய்து வைப்பார். இனி யாராவது கேட்டால், அந்த ரங்கமன்னாருக்குதான் அடியேன் சிபாரிசு ஓலை எழுதிக் கொடுத்தாக வேண்டும்!

ALSO READ:  தாமிரபரணிக் கரை ஆலயத்தில்... வழிபாட்டில் திருவள்ளுவர்!

அடியேனை விட பத்து வயது மூத்தவர் என்றாலும், அண்ணா என்றே வாய் மலர விளிப்பார். அந்தக் குரல் வெகு வசீகரமாயிருக்கும்! அண்மைக் காலத்தில் அவருக்கும் பத்திரிகை தனியாகச் செய்ய வேண்டுமெனும் ஆசை வந்துவிட்டது..

விசாரித்தார். ஆர்.என்.ஐ.யில் பத்திரிகை பதிவு செய்வது, தலைப்பு கொடுப்பது என வழிகாட்டினேன். அவர் பத்திரிகைக்காக கொடுத்த தலைப்பில் ஏற்கெனவே யாரோ பதிவு செய்திருந்ததால், அவர் விரும்பிய ஆயன் – டைட்டிலை விட மனசில்லை அவருக்கு! தனிச்சுற்றுக்கு மட்டும் என்று சொல்லி ஓர் இதழை அச்சிட்டார். அதுவும் கடந்த ஏப்ரலில்தான்! பிடிஎஃப் வடிவை அனுப்பி வைத்தார். கட்டுரைகள் எப்படிப் போடவேண்டும், லே அவுட் இத்யாதிகளை சொன்னேன். சரிண்ணா.. பண்றேன் என்றார்.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னமேயே மஞ்சள் காமாலை கண்டு நோய் வாய்ப் பட்டார் என்று இன்றுதான் அடியேனுக்கும் தெரிந்தது. செங்கோட்டை சுந்தர்ராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர், இளவல் ரங்கராஜன் வருத்தத்துடன் சொன்னான்… இரு மாதங்களாக இருந்து, மதுரை அப்பல்லோவில் காட்டி, பின் சரியாகாதுபோய், சென்னை அப்பல்லோவுக்கு இருபது தினங்களுக்கு முன்னர் வந்து, இன்று காலை பரமபதித்தார் என்று தெரியவந்தது. சென்னையில் இருந்த தகவல் தெரிந்திருந்தால் ஓடிப்போய்ப் பார்த்திருப்பேன்…! அந்த சந்தர்ப்பத்தை ரங்கமன்னனார் அடியேனுக்கு வழங்கவில்லை!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூராள் சொல்லி வைத்தாள்…
எத்தனை முறை எழுதினும் களைத்திராது நம் கரங்கள்!
இந்த
ஆயனுக்காக இவ்வண்ணா கண்ட கனா என்னவோ
ஓயாமல் ஒழியாமல் ஓர் இதழுடன் ஒடுங்கிப் போனான்!
மாயன் ஏனிந்த மாயம் புரிந்தானோ!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img