spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇலக்கியம்உங்களோடு ஒரு வார்த்தைவாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!

வாதம் – விதண்டாவாதம்; தர்க்கம் – குதர்க்கம்!

செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு… அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து…
என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க சொல்லு..! என்றார்.
சார் நான் உங்களப் பாக்க வரேனே.. வீட்டுக்கு என்றேன்.
அதன்படி, நேற்று மாலை நந்தனம் செனடாப் சாலையில் உள்ள அவரது அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றேன் நண்பர் ராஜனுடன்!
சிறிது நேரம் கல்லூரி, சற்று நேரம் பேராசிரியர்கள், சற்று நேரம் பேஸ்புக் என்று பேச்சினூடே கல கலவெனச் சென்றது. அது யார் ஶ்ரீராம் உன்னோட நண்பர் பட்டியல்ல இருக்கற ஒருத்தர்… ஶ்ரீரங்கம் கோயில் பத்தி அவ்ளோ அக்குவேறா ஆணிவேறா தைரியமா புட்டு புட்டு வைக்கிறார் என்று கேட்கவும் செய்தார்…
ஊழல் பேர்வழிகளை இனங்காட்டுபவர்கள் எப்போதுமே  அதிகார பலத்தால் அடக்கப்பட்டு விடுகிறார்கள், அல்லது உயிர் எடுக்கப்பட்டு விடுகிறார்கள். பேஸ்புக் போராளிகளையே இனங்கண்டு தூக்கி விடுகிறார்கள் அரசியல்வாதிகள்.
அதுவும் பத்திரிகைத் துறை என்றால் கேட்கவே வேண்டாம். ஊரெல்லாம் ஊழல் என்று வாய்கிழியக் கத்துவார்கள், எழுதுவார்கள்… தங்கள் நிறுவனத்திலோ, தலைமையிடத்திலோ ஊழல் என்றால் வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு பத்திரிகையாளருக்கே உரிய சுதந்திர உணர்வுடன் வீராவேசம் பொங்கி அமிழ்ந்துவிட… ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், அதையும் மீறி வாட்டர்கேட் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியவர்கள் குறித்தும், அந்தக் கால இண்டியன் எக்ஸ்பிரஸின் தைரியமான அணுகுமுறை குறித்தும் பேச்சு வளர்ந்தது. எல்லாம் வெறும் பேச்சாகவே இனி நீடித்திருக்கப் போகிறது. காரணம்… தமிழ்நாட்டின் ஊடகவியல் உருக்குலைந்து போய் ஆண்டுகள் பலவாயிற்று!
***

அடுத்து, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த நாட்களுக்கு நினைவுகள் சென்றன…
கணித வகுப்பு சுவாரஸ்யமானது. நல்ல பேராசிரியர்கள். அவர்களில் ஶ்ரீனிவாசன் என்று ஒருவர். வகுப்பில் என்னை அடிக்கடி முறைத்தபடியே பாடம் எடுப்பார். அதனாலோ என்னவோ… அவர் வகுப்பில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினேன். கல்லூரியை விட்டு வெளிவந்த சில நாட்கள் கழித்துதான் உறவினர் ஒருவர் மூலம், அவரும் அடியேனுக்கு தூரத்து உறவினர் என்பதை அறிந்தேன்…
ஓரிருவர் சிடுமுகங்கள்தான். ஒரு வேளை கணிதப் பேராசிரியர் என்பதால் அப்படி கடுகடு என்று இருக்கிறார்களோ என்று தோன்றும். ஆனால் அடிப்படையில் நான் கலகல பேர்வழி. கிண்டல் கேலி அதிகம். சிலேடை பாணி நகைச்சுவையும் அதிகம் உண்டு. ஆகவே.. நண்பர் குழாம் எப்போதும் உடன் இருக்கும். சொல்ல வரும் விஷயத்தை நகைச்சுவை உணர்வுடனேயே சுட்டிக் காட்டுவேன். ஆகவே கடு கடு கணிதத்துக்கும் நம் கல கல இயல்புக்கும் ஒத்துவராதோ என்றுகூட சில நேரம் தோன்றும்.
அவர்களில் ஒரு பேராசிரியரை மட்டும் அடியேனால் மறக்க இயலாது. அவர் ஜெயகர் / ஜெயகுமார் என்று நினைவு. கர்ம வீரர் அவர். வகுப்பில் மாணவர்கள் எத்தனை பேர், யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு தன் பாடமே முக்கியம்.  வகுப்புக்கு வருவார். கரும்பலகையில் அந்த அந்தப் பகுதி கணக்குகளை எழுதுவார். சொல்லிக் கொண்டே செல்வார். நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுவிடுவார். சிரிப்பு, கடுப்பு,  சிடுமுகம், கலகல முகம் எதுவும் கிடையாது. எவ்வித உணர்ச்சியையும் கொட்டாத அமைதிப் பேர்வழி. பல நேரங்களில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி நகர்ந்து செல்வார். பிறர் அழைப்பையோ, சூழலையோகூட கண்டுகொள்ளாத ஒரு விதமான சிந்தனாவாதி…
1990 களில் கணினித் துறையில் பாஸ்கல், கோபால், சி-பிளஸ் என… சில மொழிகள் உலா வந்தன. டேடாபேஸ் என பாக்ஸ்ப்ரோ, டிபேஸ் 3 ப்ளஸ் என இருந்தது. அடியேனுக்கு கணிதப் பாடத்தினூடே, கணினி மொழி ஏதேனும் கற்க விருப்பம் இருந்தது. எனவே சிறப்பு வகுப்பு சென்றேன். யுனிக்ஸ் இன் சி. ஞாயிற்றுக் கிழமை வகுப்பு. ஞாயிறுகளில் கல்லூரி விடுமுறை தினம் என்பதால், பேராசிரியர்கள் வரமாட்டார்கள்…
அத்தகைய ஒரு ஞாயிறு நாளில்…
கட்டிய கைலியுடன் அவரின் ஸ்கூட்டரில் வந்தார் கல்லூரி வளாகத்துக்குள். ஆச்சரியத்துடன் பார்த்தேன்… ஸ்கூட்டரில் பின்னப்பட்ட ஒயர்கூடை இருந்தது. ஆகவே புரிந்து கொண்டேன். ஸ்கூட்டரை நிறுத்தியவரிடம் சென்று.. சார்… என்ன சார்… ஞாயித்துக்கிழமை இந்தப் பக்கம்…? – பவ்யமாகக் கேட்டேன்.
அட.. ம் .. ஒன்றுமில்லை என்று சற்று நேரம் நின்றவர், பிறகு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.  குமரன் நகர் பகுதியில் இருந்து வருபவர். கல்லூரியைக் கடந்து புத்தூர் நால் ரோடு சென்று, சந்தைக்குச் செல்ல வேண்டியவர், வழக்கமான நினைவில் கல்லூரிக்குள் புகுந்துவிட்டார்.
இப்படி மிகச் சில முறை அடியேனுக்கும் நேர்ந்திருக்கிறது. மனத்தில் ஏதோ எண்ணம் ஓடும். கணக்குகளோ, கணக்கீடுகளோ… எதுவோ என்று வைத்துக் கொள்ளுங்கள். குறுக்கீடுகள் அற்ற நிலை என்றால், செயல்கள் தடங்கல் இன்றி செயலின் போக்கில் போய்க் கொண்டிருக்கும். மனத்தின் திட்டமிடல் வேறாக இருக்கும். என்ன இது என்று விழிப்பு வந்த பின் தோன்றும்… மனத்தை வசப்படுத்தாமல், நினைவின் வசத்தில் உடல் இயக்கம் இருப்பது சற்று அபாயகரமானதுதான்!
கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயணப் பிள்ளை வாழ்வில் இதுபோன்றதொரு சம்பவம் உண்டு. ஒரு முறை அவர் பண்பொழி திருமலைக்கோவில் திருமலைக்குமார சுவாமி சந்நிதியில் பூஜை முடிந்த பிறகும் தன்னை மறந்த நிலையில் ஆலய மணியை அடித்துக் கொண்டே இருந்தாராம். கண்கள் மூடியிருக்க மனத்தில் ஏதோ புதிர். கை மட்டும் மணியின் கயிறை இழுத்து அடித்துக்  கொண்டே இருந்ததாம்!
***

கணித  மேதைகள் பலர் இப்படி இருந்துள்ளனர். பல நேரங்களில் கணக்கு புதிர்களே அவர்களை / அவர்களின் செயல்களைக் கட்டுப் படுத்தியிருக்கின்றன.  தத்துவவாதிகள், சிந்தனாவாதிகள், குதர்க்கவாதிகள் இப்படிப் பலர். கணித தர்க்கங்களையே வாழ்வில் முதன்மை எனக் கையாண்ட சிலர், தர்க்கவாதிகளாகவே இருந்து கொடி நாட்டியுள்ளனர்.
பிரெஞ்ச் கணிதமேதை ஆய்லர் (Euler) விசித்திரப் பேர்வழி. நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
ஒரு முறை சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு காத்தரீன் (II) அரசியார் அழைப்பின் பேரில் ஆய்லர் சென்றிருந்தார். அங்கே கணிதத் துறையில் ஆராய்ச்சியும் பணியும் இருந்தது. அதே நேரம், அப்போதைய பிரெஞ்ச் தத்துவ அறிஞரும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான டெனிஸ் டிடேராட்டும் ஒரு நூலகம் தொடர்பான பணிக்காக அங்கே இருந்தார். அவர் தன் வேலையுடன், அரசியாரின் அவையில் இருந்த பலரை கடவுள் மறுப்புக் கொள்கைத் தத்துவத்தின் பால் இழுத்துக் கொண்டிருந்தார். அவையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவருடன் ஒத்தூதினர். வயதிற் பெரியோர் மனம் வருந்தி அரசியாரிடம் முறையிட்டனர். அரசிக்கு, அத்தகைய அறிஞரை அவமதிக்கவோ, திருப்பி அனுப்பவோ எண்ணம் எழவில்லை. ஆனால், இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது என்று யோசித்தார்.
அந்நேரம் ஆய்லர் நினைவுக்கு வந்தார். இருவரும் மோதுவதே சரி என்று சொல்லி, ஆய்லரிடம் டிடேரட்டை சமாளிக்குமாறு கோரி ஒதுங்கிக் கொண்டார்.
அவையில் ஒரு நாள்… டிடேராட்டிடம் ஆய்லர் ஒரு தர்க்கத்தை முன்வைத்தார்.
“ஐயா… (a+b^n)/n=x; எனவே கடவுள் இருக்கிறார்; பதில் கூறுங்கள்” என்றார்.
டிடேராட் .. என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார். அவருக்கு கடவுள் உண்டு; இல்லை என காரிய காரணங்களைக் கூறி தர்க்கம் செய்து பழக்கம். அதே வகை தத்துவ தர்க்கத்தை இங்கேயும் எதிர்பார்த்தார். ஆனால் இந்தக் கணித வழிமுறை…?
அவரின் திரு திரு விழிப்பும், மௌனமும், அவையில் பலரை வாய்விட்டுச் சிரிக்கச் செய்துவிட்டது.  தன் தோல்வியை ஒப்புக்  கொண்டு, தான் நாடு திரும்புவதாகச் சொல்லி வெளியேறினார் டிடேராட்.
***

உண்மையில் இது ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் மாதிரியான, ஒரு குப்பை புதிர்தான். இது ஒரு குப்பை என்று புறந்தள்ளியிருக்க டிடேராட்டால் முடியும். ஆனால், ஆய்லர் சொன்னது சரி என்றால், கடவுள் இருக்கிறார் என்பதை அவரே ஒப்புக் கொண்டதாகிவிடும். சப்பை மேட்டரான (a+b^n)/n=x என்பதை,  நம் இஸ்கூல் மாணவர் போல்… a+b^2=2x என்றோ, இன்னும் இடது வலது மாற்றி மாற்றி ஏதோ ஒரு விடையைக் கொண்டு வர ஒரு சப்பை அணுகுமுறையை அவரும் கையாண்டிருக்கலாம். ஆனால், அதற்கான வழிமுறைக்கும் தர்க்கத்துக்கும் தொடர்பில்லாத நகைச்சுவை அணுகுமுறை ஆய்லருடையது. மேலும், இந்த சமன்பாடு பொய் என்றும் நிரூபிக்க இயலாதது. அதற்கான வழிமுறைக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். கடவுள் பொய் என்பதை நிரூபிப்பதற்காக, பொய்யாகாத ஒரு எளிய புதிரை பொய்யாக்க முடியுமா என்ன..? ஆகவே டிடேராட்…சரி சரி இது போதும் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டார்.
மேலும் தர்க்கம் செய்யும் இருவரில், இருவரும் புரிந்த மொழியில் தர்க்கம் செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒன்று தெரிந்து, மற்றவருக்கு அதன் அடிப்படை தெரியாமல் போய்… அப்போது தர்க்கம் நிகழ்ந்தால் அந்த வாதம் விதண்டாவாதத்தில் முடியும்.
***
இப்படித்தான் இன்று பல தர்க்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. டி.வி.க்களிலும், சமூக வலைத்தளங்களிலும்!
இவை உண்மையில் தர்க்கங்களே இல்லை… குதர்க்கங்கள்!
உண்மையில் அறிஞர்களாக இருந்தால்… டிடேராட்டைப் போல் சூழ்நிலையைப் பொறுத்து.. அமைதியாக இருப்பார்கள்.
மற்றவர்கள் அவையில் உள்ளோர் போல் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்! அவ்வளவே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe