ரயில் பயணங்களில்…
கடந்த செவ்வாய் அன்று திருச்சியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தேன். அன்று 2.25க்கு வரவேண்டிய மயிலாடுதுறை விரைவு வண்டி 3.40க்கு திருச்சி வந்து, இரவு 9.15க்கு செங்கோட்டை சேர்ந்தது. வழக்கமாக ராஜபாளையம் ரயில் நிலையத்தில் பொதிகை கிராஸிங்க்காக காத்திருக்கும் நேரம் மிச்சம். அனேகமாக ரயில்வே துறை இந்த நேரத்தையே இந்த வண்டிக்கு நிரந்தரமாக்கலாம். காத்திருப்பு அலுப்பு இல்லாமல் இருக்கும். மதுரையில் 6.15க்கு எடுப்பதால் அலுவலகம் சென்று திரும்புபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
நிற்க..
ரயிலில், என் எதிரில் வயதான பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மதுரை வரை கூட்ட நெரிசல். எதுவும் பேசவில்லை. மதுரையில் இரு பெண்மணிகள், ஒரு பெண்ணின் மகன், மகள் என நால்வர் அருகில் அமர்ந்தார்கள். சங்கரன்கோயிலில் இறங்க வேண்டிய அந்த வயதான பெண்மணி என்னிடம் பேச்சுக் கொடுத்தார்.
இது நல்ல ருத்ராட்சமா என்று கையில் இருந்த ஒரு மாலையைக் காட்டி கேள்வி எழுப்பினார். அவருக்கு ருத்ராட்ச மாலைகள் குறித்த தகவல்களைச் சொன்னேன். பிறகு பேச்சு மகாளயம் பற்றி வந்தது. தாம் சைவப் பிள்ளை வகுப்பைச் சேர்ந்தவர் என்று சொல்லிவிட்டு, கடந்த மூன்று வருடங்களாக தமது கணவரின் நினைவாக கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவில் எள் வைத்து நீர் இறைத்து, கணவர் பேரைச் சொல்லி தர்ப்பணம் செய்து வருவதாகவும், மேலும் என்ன செய்தால் சிறப்பு என்றும் கேள்வி கேட்டார். அப்படியே பேச்சு வளர்ந்து கொண்டே போனது.
“ஏன் உங்களுக்கு மகன்கள் இல்லையா?”
“இருக்கிறார்கள். இரண்டு பேர். ஆனால் அவர்களுக்கு நேரம் கிடையாது… சாப்பாடும் ஏதாவது சாப்பிட்டு விடுவான் அதனால் அவனை கட்டாயப்படுத்த முடியாது எனவே நானே என் கணவருக்கு தர்ப்பணம் கொடுக்கிறேன். அப்படி கொடுக்கலாம் இல்லையா?
ஓ! இப்படி நீங்கள் தர்ப்பணம் கொடுக்கலாம் என்று யார் உங்களுக்கு சொன்னார்கள்? உங்கள் குடும்ப புரோகிதர் அல்லது கோயிலில் யாராவது ஒரு வைதீக அந்தணரிடம் கேட்டால் சொல்லுவாரே யார் உங்களுக்கு சொன்னது ?
நான் யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டேன். தேச மங்கையர்க்கரசி இது பற்றி சொல்லியிருக்கிறார் பெண்களும் தர்ப்பை வைத்து கட்டைவிரல் வழியாக எள்ளும் தண்ணீரும் விடலாம் என்று சொன்னதை கேட்டு தான் செய்கிறேன்…
ஆனால் அம்மா… இப்படி எல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. உங்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தான் செய்ய வேண்டும். மகன்கள் இருக்க உங்கள் கணவருக்கு நீங்கள் செய்யக்கூடாது. பித்ரு கடன், மகாளய பட்சம் என்பதெல்லாம் மரபு வழி உறவை காட்டும், தந்தை மகன் கடமையைச் சொல்லும் ஒரு ஏற்பாடு. கட்டாயம் இந்த மகாலய பட்சத்தில் உங்கள் கணவருக்கு நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் இந்த 15 நாளில், உங்கள் கணவர் காலமான திதி வரக்கூடிய நாள் அல்லது ஏதாவது ஒரு நாள் உங்கள் மகனை காலை நேரம் விரதம் இருக்கச் செய்து இவ்வாறு தர்ப்பணம் செய்யலாம். வருடம் தோறும் நீங்கள் படையலிடும் திதியைப் போன்று ஒரு நாள் படையலும் செய்யலாம் அது உங்கள் மனசைப் பொருத்தது…
அப்படி என்றால் நான் அவ்வாறு செய்யவே கூடாதா? என் கணவரை நினைத்துக் கொண்டு தர்ப்பணம் செய்து, காகத்துக்கு சாதம் வைப்பேன். அப்படி செய்வது தவறா?
வேண்டுமானால் நீங்கள் நாளை அதே சங்கரன்கோயில் கோவிலுக்கு செல்லுங்கள் அங்கிருக்கும் பூஜாரிகள் எவரிடமாவது இந்த விஷயத்தை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு அதன் பிறகு செய்யுங்கள்…. நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால்…
இல்லை… நீங்களே சொல்லி விட்டீர்கள் அதன் பிறகு நான் யோசிக்கவில்லை.
நீங்கள் ஒரு நாள் படையல் போடும்போது உங்கள் கணவரை நினைத்துக் கொண்டு அவருக்கு விருப்பமானதை சமைத்துக் கொடுக்கலாம் அது அவசியம் மனைவிகள் தான் சமைக்க வேண்டும்
ஆனால் என் மருமகள் அன்று சமையல் கட்டுக்குள் விடமாட்டாளே…
பரவாயில்லை அவரிடம் கேட்டு கொஞ்சம் கெஞ்சிக் கூத்தாடி… இந்த ஒரு பதார்த்தத்தை மட்டுமாவது நான் செய்கிறேனே என்று மாமியார் மருமகள் சண்டை எதுவும் வந்துவிடாமல் அமைதியாக கேட்டு நீங்கள் செய்யுங்கள் அது உங்களுக்கு மன திருப்தியை அளிக்கும் அல்லவா?!
இல்லை என் மருமகள் சண்டை போட மாட்டாள் என்றாலும் தானே அனைத்தையும் சமைப்பேன் என்று அடம் பிடிப்பாள் அதனால் தான் சொன்னேன்….
பரவாயில்லை சமைப்பது, காகத்துக்கு சாதம் இடுவது, உங்கள் மகன்கள் சரியாக இந்த கடமையை செய்கிறார்களா என்பதை கவனித்து வழிப்படுத்துவது, அவர்களது இந்த பித்ரு கடனுக்கு கூட இருந்து உதவி செய்வது … இதுதான் உங்கள் பணியாகவும் பொறுப்பாகவும் இருக்க முடியும். அதை விட்டு யாரெல்லாமோ யூட்யூபில் சொல்கிறார்கள் என்பதைக் கேட்டு குடும்ப வழக்கத்தை மாற்றாதீர்கள்… என்று சொல்லி வைத்தேன்..!
செங்கோட்டை ஶ்ரீராம்