
குறிப்பிட வேண்டிய மனிதர் – எழுத்தாளர் நரசய்யா… அற்புதமான மனிதர். அவருடைய கதைகள், கடலோடி வந்து, காரோடி தட்டி, மனதோடி ஒட்டும்.
2015 நவ.1ம் தேதி இதே நாளில் நான் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு. நிகழ்ச்சி இதுதான்…
நம் நண்பர் விருபா இணையதளத்தை நடத்தி வரும் குமரேசனுக்கு தமிழக அரசின் விருது அளிக்கப்பட்டது. ஏற்கெனவே அவரின் நிகண்டு குறித்து நான் எழுதியிருக்கிறேன். நிகண்டு மிக அருமையாக, அவருடைய இணையதளத்தில் டேடாபேஸ் வடிவில் அமர்ந்திருக்கிறது.
இதற்காக தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. அதை ஒட்டி அவருக்கு ஒரு பாராட்டு விழா நண்பர்கள் சிலர் கலந்து கொள்ள மயிலாப்பூரில் நண்பர் ஆடிட்டர் ஜே.பாலசுப்ரமணியன் இல்லத்தில் உள்ள சிறிய அரங்கில் நடந்தது!
நிகழ்ச்சியில் நரசய்யாவின் கணினி தொடர்பான சில தகவல்கள் பிரமிப்பாக இருந்தன.
நல்ல கதாசிரியர் அவர். முன்னர் ஒரு முறை தன் மனத்தாங்கலை வெளியிட்டிருக்கிறார்… குறிப்பாக, விகடனில் இருந்து ஒருமுறை பஸ் டிக்கெட் கதை ஒன்று எழுதித் தாருங்கள் என்று அவரிடம் கேட்கப்பட்ட விதம்!
டிடி.,யில் பேட்டி எடுத்த ஒருவர், ஒரு பக்கக் கதை குறித்து எடுத்தவுடனே முதல் கேள்வி கேட்டது… இத்தனைக்கும் நான் எழுதிய கதைகள், என் தரப்பு பற்றி மட்டுமே கேளுங்க என்று முன்னதாகவே சொல்லியிருந்தும்!
இன்று மனிதர் பேசும்போது ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். அதை கட்டாயம் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியதால்… இது!
சிட்டி பெ.கோ.சுந்தர்ராஜன். சென்ற நூற்றாண்டின் சிறந்த இலக்கியவாதி. கதாசிரியர். வானொலியில் பணி செய்தவர்.
இவர் இதழ்களில் எழுதும் விறுவிறுப்பான கதைகளைப் படித்து பிரமித்தார் ஜெமினி எஸ்.எஸ்.வாசன்.
ஒரு நாள் சிட்டி.,யைக் கூப்பிட்டு, ஏம்ப்பா நீ நல்லா எழுதறே. பேசாம நம்ம ஜெமினி கதை இலாகாவில் சேர்ந்துடேன்… அங்க உனக்கு எவ்ளோ கொடுக்கறான்… என்று கேட்டிருக்கிறார்.
மாசம் ரூ.275 – என்று சிட்டி சொல்லியிருக்கிறார்.
ப்பூ… இவ்ளோதானா? நான் 400 குடுக்கறேன். இங்க வந்துடு – என்று எஸ்.எஸ்.வாசன் சொல்லியிருக்கிறார்.
அதற்கு சிட்டியின் பதில்… “அவன் குடுத்துண்டே இருப்பானே!”