
இந்திர ஏகாதசி
ஐப்பசி மாதமென்பது சூரியன் புதன் பகவானுக்குரிய கன்னி ராசியிலிருந்து, சுக்கிர பகவானுக்குரிய துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் ஒரு காலமாகும்.
மனிதர்களுக்கு அனைத்து விதமான சுக போகங்களை அளிக்கின்ற நவகிரக நாயகனாக சுக்கிர பகவான் இருக்கின்றார்.
எனவே தான் இந்த ஐப்பசி மாதத்தில் மட்டும் சுப காரியங்கள் அதிகளவில் விரும்பி செய்யப்படுகின்றன. புராணங்களில் தேவலோக அதிபதியாக இந்திரன் கூறப்படுகிறார்.
இந்திர தேவனும் அனைத்து சுகபோகங்களுக்கு அதிபதியாக இருக்கிறார். எனவே இந்த ஐப்பசி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு திருமாலின் அம்சம் நிறைந்த இந்திர தேவரின் அருட்கடாட்சம் கிடைக்கப்பெற்று, வாழ்வில் அனைத்து விதமான இன்பங்களையும் பெறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் வாக்காக உள்ளது.
ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, இந்திர ஏகாதசி என்று அழைப்பார்கள். இந்த ஏகாதசியை நாரதர் வெளிப்படுத்தினார்.
மாஹிஷ்மதி என்ற நகரை இந்திரசேனன் என்ற மன்னன் நல்ல முறையில் ஆட்சி செய்து வந்தான். ஒரு நாள் அவனுடைய அரசவைக்கு நாரத முனிவர் வந்தார். மாமுனியைப் பார்த்ததும், இந்திரசேனன் மிகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்று உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமரச் செய்தான்.
பின்னர் நாரதர் வந்ததின் நோக்கத்தை மன்னன் கேட்டான். அப்போது நாரதர், ‘மன்னா! நான் இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கு உன் தந்தை நரகத்தில் கடுந்துயரை அனுபவித்து வருகிறார்.
அவர், ‘என் மகனிடம் சொல்லி, இந்திர ஏகாதசி விரதத்தைச் செய்ய சொல்லுங்கள். அவன் பூலோகத்தில் இந்த விரதத்தைக் கடைபிடித்தால், நான் இங்கு நரகத்தில் இருந்து விடுதலை பெறுவேன். என்னை கரையேற்றும்படி என் பிள்ளையிடம் சொல்லுங்கள்’ என்று என்னிடம் சொல்லி அனுப்பினார். அதைச் சொல்வதற்காகவே தற்போது நான் வந்தேன்’ என்று கூறி முடித்தார் நாரதர்.
தன் தந்தை நரகத்தில் படும் துயரைக் கேட்டு இந்திரசேனன் மனம் வருந்தினான். இருப்பினும் தந்தை விடுதலைப் பெறுவதற்கு ஒரு வழி இருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தான்.
இந்திர ஏகாதசியை கடைபிடிக்கும் வழிமுறையையும் நாரதரிடம் கேட்டறிந்தான். அவர் கூறியபடியே விரதத்தை செய்து முடித்தான். அதன் பலனாக இந்திரசேனனின் தந்தை நரகத்தில் இருந்து விடுதலை ஆகி, சொர்க்கத்தை சென்றடைந்தார்.
இந்த விரதத்தை நிகழ்த்தும் நபரின் 7 வது தலைமுறை வரை மூதாதையர்கள் அந்த நபருடன் சேர்ந்து இரட்சிப்பை அடைகிறார்கள்.
இன்னும் பல குடும்பங்களில் ஓரளவுக்கு வசதிகள் இருந்தும், குடும்பத்தில் நிம்மதி இல்லாத தன்மை நிலவுகிறது. இதுபற்றி விவரம் அறிந்த ஜோதிடர்களிடம் போய் கேட்டால், ‘பித்ருக்களின் சாபமே இதற்குக் காரணம்’ என்று கூறுவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் இந்த விரதத்தை கடைபிடித்தால், நரகத்தில் இடர்படும் நமது முன்னோர்களும் விடுதலையாகி நலம் பெறுவார்கள்; நாமும் நலம் அடையலாம் என்பது உறுதி.
இந்திர ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் மறைந்த அவர்களின் பல தலைமுறை முன்னோர்கள் நற்கதி பெற்று, அவர்களின் ஆசிகள் கிடைக்கப்பெற்று நாம் ஈடுபடுகின்ற அனைத்து காரியங்களிலும் மகத்தான வெற்றிகளை பெற உதவும்.
நாராயணனாகிய பெருமாள் மற்றும் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்.
ஜாதகத்தில் பித்ரு சாபம் பெற்றவர்களாக கூறப்படுகின்ற நபர்கள் இந்த விரதத்தை மேற்கொள்வதால் பித்ரு சாபங்கள் நீங்கி குடும்ப வாழ்க்கையில் சுபிட்சங்களும், நிம்மதியும் உண்டாகும்.
இந்திர ஏகாதசி தினத்தில் விரதம் மேற்கொண்டு பூஜைகள் மட்டும் வழிபாடு செய்த பிறகு உங்கள் சக்திக்கேற்ப அன்னதானம் செய்வது மிகுதியான புண்ணிய பலன்களை கொடுக்கும்.