8ஆம் ஆண்டில் நம் தமிழ் தினசரி தளம்!

Published:

pongal wishes - 2026

தமிழ் – தினசரி டாட் காம் – செய்தி இணையதளம் தொடங்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்…!

கடந்த 2015ஆம் வருடம் தை மாத முதல் நாளில் – பொங்கல் திருநாளில் தினசரி டாட் காம் இணைய வெளியில் முதலாகத் தம் நடையைத் தொடங்கியது.

தமிழகத்தில் இருந்து நடத்தப்பெறும், ஒரு நிறுவனமல்லாத | கட்சிப் பின்னணி இல்லாத | அரசியல் கட்சிகள் சார்ந்து அளிக்கப்படும் நிதி உதவி எதுவுமில்லாத | அரசியல்வாதிகள் எவரது உதவியும் கட்டளையுமில்லாத | நிறுவனங்களின் பின்னணி நிதி உதவி எதுவுமில்லாத | செய்திகளின் தரமறிந்து சுவையறிந்து இயங்கிய பத்திரிகையாளரான தனிநபரால், செய்தியாளர் குழு ஒன்று அமைக்கப்பட்டு, இணையவெளியில் இயங்கும் செய்தித் தளமாக 8 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட முயற்சி இது. 2014 டிசம்பர் 8ம் தேதி தினசரி டாட் காம், பதிவு செய்யப்பட்டது!

இம் முயற்சி இந்தத் தைப் பொங்கல் திருநாளுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

இடையில் எத்தனையோ சோதனைகள், தடங்கல்கள். நிதிச் சோர்வுகள் வாட்டிய போது, முழுநேரமும் இந்தத் தளத்துக்காக செலவிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு, இடையே இரண்டரை வருடங்கள் வேறு நிறுவனங்களில் இதழியல் பணியாற்றி விடை பெற்று, மீண்டும் கடந்த நான்கு வருடங்களாக… முழு நேரமாகவே தமிழ் தினசரி தளத்தை இயக்கி வருகிறேன்..!

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

நாட்டுப் பற்று, தேசிய சிந்தனை, தெய்வத் தமிழின் வீச்சு, நம் பாரம்பரியப் படைப்புகளை மீண்டும் வெளிக் கொணரல், தமிழின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் என நம் முன்னோர்கள் எப்படி இயங்கினார்களோ அவர்கள் வகுத்துத் தந்த தர்மத்தின் பாதையில் தற்கால அரசியல் சூழலுக்குத் தக்க தளத்தை இயக்கி வருகிறேன்.

இன்றளவும், நாம் தொடங்கப்பட்ட போது கொண்டிருந்த அதே நீதி நெறியின் பாற்பட்ட சிந்தனையில் இருந்து விலகாமல், தளத்தை இயக்கி வருகிறோம். எந்தக் கட்சியினரும், அமைப்பினரும், இம்மியளவும் நமக்கு எதுவும் ஈந்ததில்லை என்று அடித்துச் சொல்வேன்! அப்படி அடிமைப்படும் எண்ணமும் குணமும் நமக்கு இல்லை! நாம் யார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்! என்பதே நம் தாரக மந்திரமாகத் திகழட்டும்!

dhinasari pongal wishes1 - 2026

பலரும் என்னிடம் கேட்கும் கேள்வி… எப்படி சமாளிக்கிறாய் என்பதுதான்! தர்மதேவன் இதுவரை தொடர்ந்து ஏதோ … வழிநடத்தி வருகிறான் என்பேன்.

இந்த 7 வருட காலத்தில் நம் தளத்துக்காக எந்த எதிர்பார்ப்புமின்றி செய்திகளை, கட்டுரைகளை அனுப்பியும், தாமாகவே பதிவிட்டும், ஆதரவு அளித்துவரும் அந்த ஒரு சிலருக்காக, நம் தளத்தின் சார்பில் நினைவுப் பரிசுகள் அனுப்பி வைக்கப் படும். கடந்த வருடம், நம் தினசரி தளத்தின் 7ஆம் ஆண்டுத் தொடக்க விழாவும் சிறப்பாக சென்னையில் மயிலாப்பூரில் பொங்கல் திருநாளை ஒட்டி நடைபெற்றது. அப்போது நம் தளத்தின் சார்பில் 7 பேருக்கு ‘தெய்வத்தமிழர்’ விருதுகளை வழங்கினோம். முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர், பரணி தந்த செல்வர் தருவை திரு. டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையேற்று விருதுகளை அளித்தார். உடன், முன்னாள் டிஜிபி திரு. சதீஷ்குமார் டோக்ரா அவர்கள் கலந்து கொண்டு விருது வழங்கி வாழ்த்துரை அளித்தார்.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இந்த வருடமும் தினசரி தளத்தின் சார்பில் விழா நடத்தப்படும். திட்டமிட்டு வருகிறோம். கோவிட் தொற்று நெருக்கடி காலம் என்பதால், இணையவழியிலோ அல்லது, இந்த நெருக்கடி குறைந்த பின்னர் தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் சித்திரை மாதத்தில் நேரடி நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து வருகிறோம். இந்த முறை, திருச்சி அல்லது மதுரையில் வைத்து 8ஆம் ஆண்டு தொடக்க விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறோம்.

நெல்லைச் சீமை, பொருநைத் தமிழ் என தமிழன்னையின் புதல்வனாய்ப் பிறந்து தமிழ் படித்து வளர்ந்தவன் என்பதால், தமிழன்னையை முன்னிறுத்தியே தளம் அமைந்தது. எனவே தான் முகப்பில் தமிழன்னை வீற்றிருக்கிறாள். நம் தளத்துக்கென தனிச்சிறப்புடன் நம் நண்பர் ஓவியர் வேதா, அழகிய தமிழன்னையின் ஓவியத்தை வரைந்து கொடுத்து, இதையே பயன்படுத்துங்கள் என்றார். அவர் விருப்பத்தின் படி, அவரது ஓவியத்தையே நாம் நம் தளத்தின் இலச்சினையாக தனிச் சிறப்புடன் அமைத்திருக்கிறோம். அவருக்கு நம் நன்றி!

வழக்கம்போல் நம் செய்திகளை சமூகத்தளங்களில் பகிர்ந்து தமிழ் தினசரியின் வீச்சை உலகம் அறியும் படி செய்து உதவி வரும் நட்பு உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி!

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

dhinasarinews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கருத்தை அனுப்புங்கள்.

அன்பன்,

செங்கோட்டை ஸ்ரீராம்
(நிறுவுனர் ஆசிரியர், தமிழ் தினசரி தளம்)

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img