ஐப்பசி உத்திரட்டாதி.. இன்று என் தாயாரின் ஜன்ம நட்சத்திரம்! அடியேனும் உத்திரட்டாதிதான்! மாசி உத்திரட்டாதி!
என் தாயார் காலை வேளையில் சமையலறையில் சிலவற்றை உரக்கச் சொல்லிக் கொண்டே சமைப்பதை சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அப்படிப் பதிந்தவைதான் ஞானசாரம், பிரமேயசாரம், ஸப்தகாதை எல்லாம்! விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளை லோகாச்சாரியார் திருவடிகளே சரணம் என முடிப்பார்.
அப்போது பொருள் புரிந்தெல்லாம் அவை ஏறவில்லை… ஆனால் பொருள் புரிந்த போது, வேறெதுவும் ஏறவில்லை!
ஒரு வெண்பா…
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தம் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவம்என்னும் வாழ்வுக்குச் சேர்ந்த நெறிகாட்டும்
அவனன்றோ ஆசா ரியன்.
வெண்பா இலக்கணமெல்லாம் உள் புகுந்த பின்னாளில், எல்லாமே வெண்பாவாகப் பதிந்தது. பொருள்..? மிக அருமை!
மேற்கண்ட பாடலின் பொருள்… “அந்த ரங்கனுக்கும், இந்த ஜீவனுக்குமுள்ள அந்தரங்க சம்பந்தத்தைக் காட்டி, இந்த ஜீவன் அந்த மாயனை அடையாதிருக்கும் தடையைக் காட்டி, தடை தகர்த்து இந்த ஜீவன் அந்த தேவனைச் சேரும் வாழ்க்கையைக் காட்டும் அவன் அன்றோ நம் ஆசாரியன்..!”
இப்பேர்ப்பட்ட ஏழு ரத்தினங்களாகிய ஸப்தகாதையை அளித்தருளியவர் விளாஞ்சோலைப் பிள்ளை!
14ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ரத்தினம்.. குலத்தாழ்ச்சி எனும் விஷம், அனந்தையிற் கண் வளரும் அமுதை அடையத் தடையாய் நின்றது இவருக்கு! ஆட்சி அதிகாரத்திற் கைக்கொண்டோர் திருவனந்தையிற் தடையாயிருந்தாலும், ஆசாரியனாகிற பிள்ளை லோகாசாரியர் அன்னாரை அரவணைத்தார். அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் அருகழைத்து உபதேசம் நல்கினார்.
அந்த பந்தம், அழகாய் இந்த ஏழு காதையாய் உருப் பெற்றது! ஆசார்யனாகிற விளாஞ்சோலைப் பிள்ளையின் திருநட்சத்திரமாகிற இன்றைக்கு அடியேன் தெண்டனிடுகிறேன்… இவ்வாசார்யனுடைய தனியனையும் தமிழையும் இச்செவியில் புகுத்திட்ட அடியேன் அன்னையின் திருவடிக்கும் சேர்த்தே!
ஸப்தகாதை: ஏழு வெண்பாக்கள்!
(பொருளே தேவைப்படாத அழகுத் தமிழ்ப் பா… காலம் கடந்தும் நம் கையிற் தவழும் தமிழ்… அதுதான் சீரிளமைச் செந்தமிழ் !
அம்பொன் அரங்கர்க்கும் ஆவிக்கும் அந்தரங்க
சம்பந்தங் காட்டித் தடைகாட்டி – உம்பர்
திவமென்னும் வாழ்வுக்குச் சேர்ந்தநெறி காட்டும்
அவனன்றோ ஆசாரியன்.
*
அஞ்சு பொருளும் அளித்தவன் பால் அன்பிலார்
நஞ்சில் மிகக்கொடியர் நாம் சொன்னோம் – நஞ்சுதான்
ஊனை முடிக்கும துயிர் முடிக்கும் என்று
ஈனமிலார் சொன்னார் இவை
*
பார்த்த குருவின் அளவில் பரிவின்றிச்
சீர்த்தமிகு ஞானம் எல்லாம் சேர்ந்தாலும் – கார்த்தகடல்
மண்ணின்மேல் துன்புற்றும் அங்குமே தேங்காமல்
நண்ணுமே கீழா நரகு.
*
தன்னை இறையைத் தடையைச் சரநெறியை
மன்னு பெருவாழ்வை ஒரு மந்திரத்தின் – இன்னருளால்
அஞ்சிலுங் கேடோட ளித்தவன் பாலன்பிலார்
நஞ்சிலும் கேடு என்றிருப்பன் நான்*
*
என் பக்கல் ஓதினார் இன்னார் எனும் இயல்வும்
என்பக்கல் நன்மை எனும் இயல்வும் – மன்பக்கல்
சேவிப்பார்க் கன்புடையோர் சன்ம நிரூபனமும்
ஆவிக்கு நேரே அழுக்கு.
*
அழுக்கென்று இவை அறிந்தேன் அம்பொன் அரங்கா
ஒழித்தருளாய் உள்ளில் வினையைப் – பழிப்பிலா
என்னா ரியர்க்காக எம்பெரு மானார்க்காக
உன்ன ருட்க்காக உற்று.
*
தீங்கேது மில்லாத தேசிகன் தன் சிந்தைக்குப்
பாங்காக நேரே பரிவுடையோர் – ஓங்காரத்
தேரின்மேல் ஏறிச் செழுங்கதிரின் ஊடுபோய்
சேருவரே அந்தாமந் தான்.
விளாஞ்சோலைப் பிள்ளை – குறித்த சுஜாதா தேசிகன் – சமூக வலைத்தள பதிவு கீழே…
ஸ்ரீ வைஷ்ணவப் பெயர்களில் பல தகவல்கள் பொதிந்துள்ளது. அவை பெரும்பாலும் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களுடன் சம்பந்தம் பெற்றிருக்கும்.
குலசேகர ஆழ்வார் “கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே” என்று ஆசைப்படுகிறார். கோனேரி என்பது திருவேங்கடத்தில் உள்ள திருக்குளத்தின்(ஏரி) பெயர். திருக்கோட்டியூர் நம்பிகள் சிஷ்யை ’திருக்கோனேரி தாஸ்யை’ என்ற திருநாமத்துடன் விளங்கினார். இந்த அடியார் ’திருவாய்மொழி வாசகமாலை’ என்ற நூலை நமக்குக் கொடுத்துள்ளார்.
“குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்” என்ற பாசுரம் பலருக்குத் தெரிந்திருக்கும். திவ்ய பிரபந்தத்தில் பல இடங்களில் “குன்றம் ஏந்தி” என்ற சொல் வருகிறது, இது ஆச்சரியம் இல்லை, ஆனால் “குன்றம் ஏந்தி பாகவதர்” என்று ஒருவரின் பெயர் இருந்திருக்கிறது.
”’குன்றம் ஏந்தி’ என்ற பெயரா ? என்று நமக்குத் தோன்றும். உயர்ந்த கட்டிடங்கள் மேல் சாதாரணக் கம்பிக்கு ‘இடி தாங்கி’ என்று பெயர் இருக்கும் போது உயர்ந்த பாகவதருக்கு ’குன்றம் ஏந்தி’ என்று இருப்பதில் என்ன வியப்பு ?
பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யர் ஒருவரின் பெயர் ’விளாஞ்சோலைப் பிள்ளை’. அவருடைய கதை தான் இன்று பார்க்க போகிறோம்.
விளாம் சோலை நிறைந்த தோட்டத்தில் வசித்து வந்ததால் இவருக்கு இந்த பெயர். இவர் கேரளாவில் திருவனந்தபுரம் பக்கம் ஆறனூர் என்ற கிராமத்தில் ஈழவர் என்ற தாழ்ந்த குலத்தில் பிறந்தவர். தாழ்ந்த குலம் என்பதால் பத்மநாப பெருமாளை சேவிக்க ( திருப்பாணாழ்வார் காவிரிக்கரையில் இருந்தே சேவித்தது போல ) இவர் கோயிலுக்குள் செல்லாமல், விளா மரங்கள் நிறைந்த சோலையில் இருந்த ஓர் உயர்ந்த தென்னை மரம் மீது தினமும் ஏறி அங்கிருந்து அனந்தபத்மநாபனின் விமானம் தெரிய அதைத் தரிசனம் செய்வது வழக்கம்.
ஸ்ரீ வைஷ்ணவ நெறியை ஏற்க குலப்பிறப்பு தடை இல்லை. இவர் திருவரங்கம் வந்து பிள்ளைலோகாசாரியாரிடம் அடிபணிந்தார். இவருக்குப் பிள்ளைலோகாசாரியார் ’நலம் திகழ் நாராயண தாஸர்’ என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
‘விளாம் சோலை பிள்ளை’ சேர தேசத்தவர்(கேரளா). குலசேகர ஆழ்வாரும் அதே தேசம் அதனால் பெருமாள் திருமொழியில் வரும் “நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்ணுவாரே” என்ற பாசுர வரிகளில் வரும் பெயரையே அவருக்குச் சூட்டினார் என்று நினைக்கிறேன். இதில் என்ன வியப்பு என்றால் அந்த பாசுரத்தின் பொருள் அப்படியே நிறைவேறியது.
எப்படி என்று சொல்லுகிறேன்.
நலம் திகழ் நாராயண தாஸர் பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யராக அவருடைய காலஷேப கோஷ்டியில் இடம்பெற்று, அவர் உபதேசித்த ஸ்ரீ வசனப் பூஷணத்துக்கு இவர் ஒருவரே அதிகாரியாகவும் ஆனார்.
பிள்ளைலோகாசாரியார் துலுக்க படையிடமிருந்து நம்பெருமாளைக் காத்து ஜ்யோதிஷ்குடிக்கு சென்று அங்கே பரம பதிக்கும் முன் ஸ்ரீ வசனப் பூஷணத்தைத் திருவாய்மொழி பிள்ளைக்குப் பிற்காலத்தில் உபதேசிக்குமாறு பணித்தார்.
ஆசாரியரின் ஆசையை நிறைவேற்றுவது தானே சிஷ்யரின் கடமை. மீண்டும் சேர நாட்டுக்குச் சென்று திருவாய்மொழி பிள்ளையின் வருகைக்குப் பல காலம் அங்கே விளம் சோலையில் காத்துக்கொண்டு இருந்தார்.
பல காலம் கழித்து திருவாய்மொழிப் பிள்ளை திருவனந்தபுரத்துக்கு அனந்தபத்மநாபனைச் சேவித்து, விளாஞ்சோலைப் பிள்ளையின் திருவடி தொழ அவரை தேடிக்கொண்டு சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை வியக்கச் செய்தது.
விளாஞ்சோலை பிள்ளை தன் ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரை தன் மனத்தில் நிறுத்தித் தியானித்துக்கொண்டு இருக்க, அவருடைய திருமேனியில் சிலந்திகள் வலை பின்னி சமாதி நிலையில் காட்சி கொடுத்தார்.
திருவாய்மொழிப் பிள்ளை அவர் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்துக் கைகூப்பி எதிரே நின்றார். விளாஞ்சோலைப் பிள்ளை கண்களைத் திறந்த போது அவருடைய கடாக்ஷத்துடன் மனதில் வீற்றிருந்த பிள்ளை லோகாசாரியர் கடாக்ஷமும் திருவாய்மொழிப் பிள்ளைக்குக் கிடைத்தது.
வெகுகாலமாக திருவாய்மொழிப் பிள்ளையின் வருகைக்காகக் காத்துக்கொண்டு விளாஞ்சோலை பிள்ளை உள்ளம் பூரித்து அவருக்கு ஸ்ரீவசன பூஷணத்தின் அர்த்த விசேஷங்களை உபதேசித்து அருளினார். ஞான பரிமாற்றத்துக்குக் குலம் தடை இல்லை என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலை “கொடுமின் கொண்மின்” என்ற பாசுர விளக்கம் அங்கே நடந்தேறியது.
இராமானுச நூற்றந்தாதியில் அமுதனார் கூறும் வஞ்ச முக்குறும்பு பிராமணர்களுக்கு ஓர் இடராக இருக்கிறது. இவை சிறிதும் இல்லாத தம்மைத் தாழ்ந்தவர்களாக நினைத்துக்கொள்பவர்கள் உயர்ந்த பிறப்பினர் என்பதற்கு ஆழ்வார்களில் திருப்பாணாழ்வாரும், ஆசாரியர்களில் விளாஞ்சோலைப் பிள்ளை, மாற நேரி நம்பியும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உபதேசம் பெற்று அவரிடம் விடைபெற்றுக்கொண்டு திருவாய்மொழிப் பிள்ளை ஆழ்வார் திருநகரியை அடைந்து தன் பிள்ளைலோகாசாரியாரின் ஆசைகளை நிறைவேற்றினார்.
அதே சமயம் திருவனந்தபுரத்தில் ஓர் அதிசயம் நடந்தது. ஒரு நாள் நம்பூதிரிமார்கள் அனந்தபத்மநாபனுக்குத் திருவாராதனம் செய்துகொண்டு இருக்க, விளாஞ்சோலைப் பிள்ளை கோபுரம் வாசல் வழியாக உள்ளே நுழைந்து பெருமாள் கர்பகிரஹத்தில் இருக்கும் மூன்று வாசலில், திருவடிக்கு முன் இருக்கும் வாசல் பக்கம் வந்து நின்றார்.
இதைக் கண்ட நம்பூதிரிகள், ஒரு தாழ்ந்த குலத்தவர் கோயில் உள்ளே வந்துவிட்டார் என்று அந்த கால வழக்கப்படி சந்நிதி கதவுகளைத் தாழிட்டு கோவிலைப் பூட்டிவிட்டு வெளியே வந்தார்கள்.
கோயில் வாசலில் விளாஞ்சோலைப் பிள்ளை சிஷ்யர்கள் சிலர் காத்துக்கொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் விளாஞ்சோலைப் பிள்ளை பிள்ளைலோகாசாரியாரின் திருவடியில் சேர்ந்துவிட்டார். அவருடைய சரமத் திருமேனிக்குக் கோயில் மாலை திருப்பரிவட்டம் வேண்டி நின்று கொண்டு இருந்தார்கள்.
இதைக் கண்ட நம்பூதிரிகளுக்கு வியப்பு. சற்றுமுன் கோயிலில் உள்ளே நடந்த அதிசயத்தை விவரித்தார்கள். திருவரங்கம் பெரியபெருமாள் திருவடியில் திருப்பாணாழ்வார் சேர்ந்தது போல, அனந்தபத்மநாபனின் திருவடியில் ‘நலம் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவரே!’ என்ற குலசேகரரின் திருவாக்கு ஆசாரியரான பிள்ளைலோகாசாரியாரின் அருளால் நிறைவேறியது!
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திருவாய்மொழிப் பிள்ளை விளாஞ்சோலைப் பிள்ளைக்குச் சரமக் கைங்கரியங்களைப் பெரியநம்பி எப்படி மாற நேரி நம்பிக்கு நிறைவேற்றினாரோ அது போல நிறைவேற்றினார்.
இன்று ஐப்பசியில் உத்திரட்டாதி விளாஞ்சோலைப் பிள்ளை திருநட்சத்திரம்.