பாரத தேசக் கொடி : சுதந்திர தின சிந்தனை!

“பாரத தேசக் கொடி”

(கவிஞர் மீ.விசுவநாதன்)

பாரத தேசக் கொடிபாரீர் ! – அது
பறக்கும் அழகின் கதைகேளீர் !

மாரத வீரர் தியாகிகளும் – ஒளி
மங்காத் தவசி, ஞானிகளும்

தாரக மந்தி ரமாய்த்தினமும் – வீர
சங்கம் முழங்கி வருகின்ற

பூரண சக்தித் தோற்றமது – அதை
பூமிக் குணர்த்தும் காட்சியிது.

காவிரி துங்கை வைகையுடன் – சிவ
கங்கை யமுனை கிருஷ்ணாவும்

தாவிடும் பிரும்ம புத்ராவும் – நல்ல
தன்மை கொண்ட சரஸ்வதியும்

தாமிர பரணி இலக்கியமும் – அறம்
தவறாப் புண்ய நர்மதையும்

ஆயிரம் ஆண்டு சரித்திரமாய் – இங்கு
ஆளும் கதையைச் சொல்கிறது.

காமனை வென்ற பரமேசன் – ஒளி
காட்சி தந்தே அணைக்கின்ற

மாமலை அந்தக் கைலாசம் – எழில்
மான சரோவர் குளிர்நீரும்

பூமழைப் பனியின் பொழிவோடு – தவ
யோக நிலைக்கே அழைத்திடுமாம்

ஓமென எங்கும் ஒலிகேட்க – அந்த
உயர்ந்த உணர்வில் பறக்கிறது.

தேசமே மூச்சாய் இருக்கின்ற – நல்
தீரர் தியாக நிறங்கொண்டும்

ஆசைகள் விட்ட அறவோர்கள் – மன
அடக்க வெண்மைக் குணத்தோடும்

மாசினை நீக்கும் பசுமைத்தாய் – குலம்
வாழ்த்தும் பச்சை சுகத்தோடும்

காசினி தர்மச் சக்கரமாய் – பல
காலம் சுழலும் வகைபாடும்.

இளைஞரும் கல்விச் சிறப்பாலே – புவி
எங்கும் புகழில் முதலிருப்பர்

வளைஞரும் காதல் இணையோடு – தூய
மனத்தால் பணிகள் செய்திடுவர்

முளையிலே தோன்றும் திறத்தாலே -பலர்
முத்தைப் போல மின்னிடுவர்

விளைகிற வித்து வீணின்றி – ஞால
மேன்மைக் கொடியும் பறக்கிறது.

சாத்திரம் கற்ற பெரியோர்கள் – நாடு
சரியாய் நடக்க வழிகாட்ட

ஆத்திரம் கோபம் அழித்தபடி – அருள்
அன்பால் இணைந்தே களித்திடுவோம்

பூத்திடும் நாள்கள் பொழுதெல்லாம் – இறை
புரிதல் கொண்டே தினம்வாழ

மாத்திறம் பெற்ற மனிதத்தால் – தினம்
வாழக் கொடியைப் பணிந்திடுவோம்.

(பாரத தேசத்தின் சுதந்திரத் திருநாள் 15.08.2019)“தியாகம் படும் பாடு”

(சுதந்திர தினச் சிந்தனை: கவிஞர் மீ. விசுவநாதன்)

நாடு சுதந்திரம் பெற பாடுபட்டு,
சிறைவாழ்கையில்
செக்கிழுத்த செம்மல்களுக்கு
தியாகிப் பட்டமும்
தாமரைப் பட்டயமும்
மாதம் ஆயிரம் ரூபாயும்
தருவோம்

ரயில் தண்டவாளத்தில்
ரயில் வராதபோது தலைவைத்து
உடனேயே தொண்டர்களை வைத்துத்
தூக்கி எழுப்பச் சொன்னவர்களுக்கு
தன்மானச் சிங்கமே
எழுந்து வாவென்று மணிமண்டபம் கட்டுவோம்

தங்களின் வெள்ளை ஆடைகள் அழுக்கேற
தேசத் தொண்டு செய்தவர்களைத்
திரும்பிக் கூட பார்க்கமாட்டோம்

வெள்ளை வெளேர் வேட்டி கட்டி
அழகாக ஆங்கிலமும், செம்மொழியும் பேசி
தேசத்தைக் கொள்ளை அடிக்கும்
பொய்ம்முகங்கள் முன்பு
நாங்கள் மண்டியிட்டு,

ஆணையிடு தலைவா
ஆணையிடு என்று கூவி
இருநூறு ரூபாயும், பிரியாணிப்
பொட்டலமும் வாங்கி விடைபெறுகிறோம்.

வாசமிகுந்த மனோரஞ்சிதப் பூவும்
செண்பகமும் இருந்தாலும்
இந்த வாசமில்லாத
வண்ண வண்ணக் காகித மலர்களே
பாமரக் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...