தமிழமுதம்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

tamilannai copy1z - 2026

1. கண்ணன் பாட்டைப் படித்தென் விழிகளில்
கண்ணீர் சுரக்கிறது – அந்தக்
கவிஞன் பாரதி தமிழில் ஏதோ
மாயம் இருக்கிறது!
கிண்ணம் முழுதும் தேனை நிரப்பிக்
கம்பன் தரும்போது – அந்தக்
காவிய வரிகளைப் படித்தவர் நெஞ்சம்
மற்றதை விரும்பாது!

2. சங்கப் பாடலின் தங்கத் தமிழில்
உணர்ச்சி பறக்கிறது – எழில்
சிந்தாமணியின் விருத்தப் பாவில்
வருத்தம் மறக்கிறது!
பொங்கும் நீதிக் களஞ்சியக் குறளில்
தீமை மறைகிறது – எங்கள்
பாரதி தாசன் தமிழில் உள்ளம்
பாகாய்க் கரைகிறது!

3. அடிகள் பாடிய அடிகள் சிலம்பில்
நம்மை அழைக்கிறது – அவர்
ஆற்றிய தொண்டால் அன்றோ உலகில்
தர்மம் தழைக்கிறது!
இடைக்காலத்தின் பக்தித் தமிழில்
உணர்வு மகிழ்கிறது – அவர்
எப்படிப் பாடினர் என்றறியாது
உருகி நெகிழ்கிறது!

4. பல்சுவைக் காவியத் தேம்பா வணியில்
இதயம் தோய்கிறது – அந்தப்
பரமன் ஏசுவின் போதனை கேட்டால்
வன்முறை மாய்கிறது!
அல்லா புகழினைச் சொல்லும் சீறாப்
புராணம் ருசிக்கிறது – நன்மை
அல்லாச் செயலில் செல்லா மனம்தான்
அதனை ரசிக்கிறது!

5. மார்கழித் திங்கள் ஆண்டாள் பாடலை
உதடு இசைக்கிறது! – கவி
மாணிக்க வாசகர் திருவெம் பாவை
மனதை அசைக்கிறது!
தேரினில் ஏறித் தமிழ்த்தாய் என்னும்
தெய்வம் வருகிறது – அது
தன்னைப் பயிலும் மானிடர்க் கெல்லாம்
இன்பம் அருள்கிறது!

  • திருப்பூர் கிருஷ்ணன்
ALSO READ:  ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img