கவிதை: கோபால்தாசன்
வெளிச்சப் புள்ளிகளுக்குள்
ஒரு ராக்கெட்
ஏறி இறங்கும்
மலைநாட்டு
மக்கள் போன்று
இலை தழைகளை
கட்டியபடி
சில
சரவெடிகள்
சுற்றி வந்து
கும்மியடிக்கும்
உலை வைப்பதற்காய்
எடுத்துவந்த
அரிசியை
வைத்துக்கொண்டு
வேடிக்கையில் மூழ்கும்
மனதை
திட்டி ஞாபகப்படுத்தும்
தரை சக்கரங்கள்
எங்கோ
கொளுத்தி ரசிக்கும்
சமத்துவ தீபத்தின்
வெளிச்சத் துளிகள்
பூமியை நிரப்பி
வடிவமைக்கும்
வாழ்க்கை இன்னும்
அழகாய்த்தான் இருக்கிறது
உற்றுப் பார்த்துவிட்டு
செல்லும் புத்தாடை யின் அணிவகுப்புகள்
ஒவ்வொரு பட்டாசும்
வெவ்வேறு
பாஷைகளில் பேசினாலும்
அது
மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை
உள்வாங்கி குதூகலிக்கும்
சின்னஞ்சிறுசுகள்
நரகாசுரனை
கொன்ற தீபம்
இனி
கொரனோ எனும்
அரக்கனை கொன்றதாக
வரலாறு எழுதட்டும்!