கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்.
மகிழ்ச்சிக்கு வித்தாகும் பண்டிகைகளே இந்திய மண்ணின் வாசம். ‘வேற்றுமையிலும் ஒற்றுமை’ என்பதை பறைசாற்றும் விதமாக பண்டிகைகள் பல்வேறு மக்களால் நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைகள் என்றாலே குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை உற்சாகத்துடன் கொண்டாடுவதை நாம் காண்கிறோம்.
தமிழ்நாட்டிலோ அடைமழை பொழியும் ஐப்பசி மாதத்திலும், வட இந்தியாவிலோ இளங்குளிரிலும் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது.
எங்கள் சிறுவயதில் தீபாவளி பலகாரங்களுக்கு மாவு அரைத்து வருவது முதல் செய்த பலகாரங்களை பாத்திரத்தில் அடுக்குவது வரை நாங்கள் பெரியவர்களுக்கு உதவுவோம். வாங்கிய பட்டாசுகளை வெயில் வரும்போதெல்லாம் வீட்டின் முற்றத்தில் வைப்பதும், கொஞ்சம் கருமேகம் கூடும் போது பட்டாசுகளை எடுப்பதுமாய் இருப்போம். ஒருமுறை கொஞ்சமும் வெயில் வராததால் எங்கள் அம்மா, பட்டாசுகளை ஒரு டின்னில் வைத்து கரி அடுப்பில் மிதமான தீயில் வைத்திருந்தார். பட்டாசுகளை வைத்ததையும் மறந்தும் போனார். சிறிது நேரத்தில் வீட்டுக் கூடத்திலேயே பட்டாசுகள் வெடித்தன. நல்ல வேளையாக, எங்கள் ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை.
வட இந்தியாவில் மதிய நேரங்களில் பட்டாசுகளை காய வைக்க போதுமான வெயில் இருப்பதால், அவ்வாறான பிரச்சனை வட மாநிலங்களில் பெரும்பாலும் இருப்பதில்லை.
தமிழ்நாட்டில் தீபாவளியன்று ( நரக சதுர்த்தியன்று) விடியற்காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து, வீட்டுப் பெரியவர்களின் கையினால் இளஞ்சூடான நல்லெண்ணெய்யை நம் தலையில் தேய்க்கப்படும் தருணமே, தீபாவளிக்காக ஏங்கும் தருணமாகும். வெந்த நீரில் குளித்து, புத்தாடை அணிந்து, தீபாவளி மருந்து, பலகாரங்கள் சாப்பிடும் போது ஏற்படும் மகிழ்ச்சியே அலாதியானது. ‘கங்கா ஸ்நானம்’ ஆச்சா? என்று ஒருவருக் கொருவர் கேட்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்வர். வீட்டு வாசல்களில் அருமையான கோலங்களால் அலங்கரிப்பர்.
வட இந்தியாவில் வண்ண வண்ண ரங்கோலிகளால் தீபாவளியை வரவேற்பர். மஹாராஷ்டிராவில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளின் முதல் நாளன்று பசுக்களையும் கன்றுக்குட்டிகளையும் வழிபடும் ‘வசுபாரஸ்’ பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இரண்டாம் நாள் ‘தந்தேரஸ்’ அன்று தன்வந்திரி பகவானையும், மாதா மஹாலட்சுமியையும், குபேரனையும் வழிபடுகின்றனர். மூன்றாம் நாளன்று முக்கிய பூஜையான ‘லட்சுமி பூஜை’ செய்கின்றனர்.
நான்காம் நாள் ‘கோவர்த்தன் பூஜா’ செய்கின்றனர். ஐந்தாம் நாள் ‘பாஊ பீஜ்’ ( Bhau Bheej) பண்டிகையில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகப் பிரார்த்தனை செயவர்.
வட இந்தியாவில் மக்கள் தங்கள் வீடுகளை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிப்பர்.
இன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றாக வாழ்வதால், அனைவரும் மகிழ்ச்சியுடன் தத்தம் பண்டிகைகளில் மற்றவர்களை அழைத்தும், மகிழ்ச்சியை பகிர்ந்தும், தத்தம் பண்பாட்டினை விளக்கியும், நம் நாட்டின் கலாச்சாரத்தின் சாரத்தை அனுபவித்தும், தமிழர்களின் தாரக மந்திரமான ‘ யாதும் ஊரே; யாவரும் கேளீர்’ என்பதில் உள்ள நிதர்சனத்தையும் உணர்ந்து வருகின்றனர்.
தீபாவளியன்று நாம் ஏற்றும் தீபங்களானது, நம் புற இருளை மட்டுமன்றி, அக இருளையும் நீக்கி, மனங்களை இணைப்பதாய், மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், நல்வாழ்வு என்னும் நான்கு அரியதுமான, அதே சமயத்தில் மனதிற்கு அடிப்படையானதாக கருதப்படும் குணங்களையும் தரும் தீபாவளியாக அமைய வேண்டும்.