வழிபடு வழிபடு வெற்றியை வழிபடு நித்தமும் வழிபடு சக்தியை வழிபடு வெற்றியைத் தந்திடும் விஜய தசமியில் சற்றே நினைந்திடு சக்தியின் வெற்றியை! ஒருமுக மனதாய் ஒன்பது இரவுகள் திருமகள் கலைமகள் மலைமகள் வணங்கி முப்பெரும் சக்தியை முழுதாய் உணர்ந்தோம் அப்பெரும் சக்தியே வெற்றியைத் தந்திடும்! செய்யும் தொழிலே தெய்வம் என்றிடும் மெய்யன் பர்பல் லாயிரம் இங்கே ஆயுள் முழுதும் சோறிடும் தொழிலை பயபக் தியுடன் வணங்குவர் இந்நாள்! வெற்றிக் கனியைத் தந்திடும் கதைகள் பாரத பூமியில் பலப்பல உண்டு அதிலும் குறிப்பாய் வெற்றியைப் பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! மாபா ரதமும் ராமா யணமும் பாமர னுக்கும் பாடம் சொல்லும் இவ்விரு கதையிலும் வெற்றியை பெறுவது வெற்றித் திருநாள் விஜய தசமியில்! பெண்ணெனும் சக்தியே வெற்றியின் உருவெனும் உண்மையை உணரா மாந்தர் அரக்கர் மண்ணும் பெண்ணும் மகிழ்ச்சிக் குரிதாய் எண்ணிய அனைவரும் வீழ்ந்தழிந் தொழிந்தார் பத்துத் தலைகள் படைத்த ராவணன் செத்துப் போகவே சீதையைக் கொணர்ந்தான் வெற்றித் திருநாள் விஜய தசமியில் பத்துத் தலையையும் கொய்தனன் ராமன்! அண்ணன் செய்தான் அரும்பெருந் தவறு மண்ணை இழந்தான் மனிதம் இழந்தான் தன்னை இழந்தான் தம்பியர் இழந்தான் ஆண்மை கெடவே அனைத்தும் இழந்தான் தன்னைச் சேர்ந்த பொருளாய் எண்ணி பெண்ணையும் இழந்தான் பெருந்தவ றிழைத்தான் பெண்ணைப் பொருளாய் எண்ணிய தவறால் தண்டனை பன்னிரண் டாண்டுகள் பெற்றான் அஞ்ஞாத வாசமாய் ஓர்வரு டம்தனை பாண்டவர் ஐவரும் அடிமையில் கழித்தனர் ஆண்மையை இழந்து அலிவே டத்தில் மாண்டவன் போலே அர்ச்சுனன் வாழ்ந்தனன் நற்தவம் செய்தே சக்தியை வேண்டி பெற்றனன் மீண்டும் வெற்றியின் சக்தி! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வில்லினை மீட்டான் விஜயன் ஆனான்! பக்திப் பெருக்கால் நாம்கேட் டிருக்கும் இக்கதை கூறிடும் நீதியும் என்ன? கருமதி அறிவும் நிறைமதி போலே ஓங்கச் செய்வது சக்தியின் அருளே! வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியைக் கண்டனர் வேலையைத் தொடங்கி! ஐயமும் நீங்கியே அவ்வழி ஏற்று நயமுடன் வெற்றியை நாமும் பெறுவோம்! தோல்வியே படிகள் துயர்களே ஏணி வெல்வதே வாழ்வின் லட்சியம் கொண்டோம் வெற்றித் திருநாள் விஜய தசமியில் வெற்றியெனும் விரதம் பூணுவோம் வேங்கையரே! (14 வருடம் முன்பு எழுதிய கவிக் கிறுக்கல்! 14 வருட வனவாசம் முடிந்து இப்போது வான்வசம் வந்திருக்கிறது! முதிர்ச்சியற்ற மொழிநடை; ஆனாலும் சிறு வயதில் என் சிந்தனை அப்போது எப்படி இருந்தது என்பதை வெளிக்காட்ட… இங்கே மறு வாசிப்பு)
வெற்றித் திருநாள் விஜயதசமி
Popular Categories



