அந்த ஆளுயர மாலை
ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது.
பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள்
அதற்குள் புதைந்திருந்தன.
அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள்
வெளியே இறுக்கியிருந்தன.
ஈரமான வாழை நாரினால் மாலையின் முதுகெலும்பு
அடியாழ மையத்தில் நெளிந்து சிரசுக்கு ஏறியது.
என் தோளை, என் கழுத்தை எந்த இடத்திலும் தொடவிடாமல்
அவர்களே தங்களுக்குச் சூடுவதாக
மாலை என்னைவிட்டு விலகிநின்றது.
நாலைந்து வெளிச்சம் என் முகத்தில் விழும் வரை
என் சிரிப்பு காமெராவை நோக்கி உறைந்திருந்தது.
அவர்கள் என்னை விட அதிகம் சிரித்து,
என் முகத்தை விட அவர்களின் முகங்களைப் பதிந்து கொண்டார்கள்.
ஒரு நிர்ணயிக்கப்பட்ட கச்சிதத்துடன் ,
என் மேல் படாமல் அந்த ஆளுயர மாலையை அகற்ற
அவர்களுக்குத் தெரிந்திருந்தது..
என் உச்சியில்,
என் முழங்கை வியர்வையில்,
என் மடியில் ,
என் பாதங்களின் பக்கம் உதிர்ந்து கிடந்த இதழ்கள்
மாலையை விட அழகானவை.
ஒரே ஒரு ரோஜா இதழைக் குனிந்து எடுத்து முகர்ந்த தோற்றத்தில்
என்னைப் படம் எடுத்த
அந்தத் தாடிக்கார இளைஞனின் ஆளுயரம்
எனக்குப் பிடித்திருந்தது.
- வண்ணதாசன்




