கம்பனைப் பாடுவேன்!

Published:

kamban poem - 2026
பள்ளிப் பருவத்தில் கவிதை என்ற பெயரில் கிறுக்கியதை எல்லாம் இப்போது எடுத்துப் படித்தால்… சிரிப்புத்தான் வருகிறது. அன்றைய அறிவுத் திறன் அப்படி.! தவறுகள் செய்து திருத்திக் கொண்டு பின்னர்தானே ஒரு பக்குவ நிலை அடையும் எழுத்தும்! வாழ்க்கையும்!
இப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்த புதிதில் எழுதிய எழுத்துகள் எல்லாம் கால மாற்றத்தில் உற்று நோக்கின், அதன் வெகுளித்தனமும் குழந்தைத்தனமும் புலப்படும்.
இந்தக் கவிதையும் அப்படித்தான் தோன்றுகிறது. 12 வருடங்களுக்கு முன்னர்… நண்பர் ஒருவருடன் காஞ்சி கம்பன் கழக நிகழ்ச்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். திடீரென நிகழ்ச்சியின் முடிவில் ஏதாவது கவிதை வாசியேன் என்றார் நண்பர். அடுத்த அரை மணியில் ஏதோ கிறுக்கி, கம்பனைக் குறித்த ஒரு கவிதையை வாசித்தேன். 

இதில் உள்ள முதிர்ச்சியற்ற தன்மை இப்போது எனக்குப் புரிகிறது… இருந்தாலும் நம் அறியாமையை இப்போதும் எண்ணிப் பார்த்தால்… ம்ம்ம்… ஒரு சுவாரஸ்யம்தான்!!!


கம்பனைப் பாடுவேன்!

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

கம்பநாட் டாரே கவிதயின் வேந்தே
எம்மவர் எளியவர் எவருமே போற்றும்
பாரதப் புகழைப் பறைசாற் றிடும்ஓர்
வீரத் திருமகன் வீரிய வித்தகன்
பார்முழு தேத்தும் பாரதப் புதல்வன்
பார்ப்பதற் கெளியன் பரதனின் தமயன்
எம்குல இறைவன் ராமனின்
வாழ்வை வளமாய் வழங்கிய தேவே!

வெண்ணெய் நல்லூர் வள்ளல் தயவால்
மண்ணது சிலிர்க்கும் மகிமைக் கதையால்
தெய்வத் தீந்தமிழ் தேனாய்ப் பாய்ந்திட
உய்வு பெற்றே உயர்ந்ததும் தமிழே!
கலைமகள் அருளைக் கவிவழி பெற்றே
சிலைபோல் சமைந்த சிறியரும் தமிழ்க்கவித்
திறத்தில் சிறந்து தழைக்க
சரஸ்வதி அந்தாதி தந்த தேவே!

கம்பன் என்றால் கற்பனைக் களஞ்சியம்
நம்போல் பலரும் நவில்வது கேளீர்
முப்பெரும் வேந்தரும் முழுதாய் விரும்பும்
ஒப்பிலா வித்தகர் ஒளிர்வது கவியில்!
அன்றலர் மலர்க்கு அண்ணல் விழிதனை
சொன்னதே போதும் சோற்றுக் கொருபதம்
காவிரிப் பெருக்கு அடங்க
பாவிரித் தருளிப் பாடிய தேவே!

ராமனின் கதையை ரங்க நாதனின்
தாமரை விழியாள் சந்நிதி முன்னே
அரங்கேற் றிடும்முன் அற்புதக் கவியாய்
அரவில் துயிலும் அரங்கன் சொல்லால்
நம்மாழ் வாரை நயமுடன் போற்றி
அம்பாய் வந்தது அந்தா தியுமே!
கம்பநின் ராம பக்தியில்
எம்மவர்க் கொருதுளி தந்திடும் தேவே!!
========================================
இதுவும் 2001ம் ஆண்டு டைரியில் எழுதிவைத்ததுதான்!

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img