October 23, 2021, 9:10 pm
More

  ARTICLE - SECTIONS

  சிறுகதை: ‘வசந்த காலக் குயில்கள்’

  பக்கத்துப் பக்கம் நிறைய மெஸ்கள் அறுசுவை வாசனையுடன் வாவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் சைடோஜி மெஸ் சாப்பாடு சொர்கலோகம்தான்.

  parrot
  parrot

  வசந்த காலக் குயில்கள்
  – மீ.விசுவநாதன் –


  திருவல்லிக்கேணி ப்ரும்மச்சாரிகளின் கோட்டை. அவர்கள் தங்குவதற்கு நிறைய மேன்ஷன்கள் அங்கே உண்டு. வாடகை ஒன்றும் அதிகம் கிடையாது. பக்கத்துப் பக்கம் நிறைய மெஸ்கள் அறுசுவை வாசனையுடன் வாவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும். அதுவும் சைடோஜி மெஸ் சாப்பாடு சொர்கலோகம்தான்.

  கண்ணனும், அவனது நண்பர்கள் ரகு, சுரேஷ், ஜெமினி, சாத்து, கல்யாணம் என்ற கல்யாண சுந்தரம், சேகர் இன்னும் அவனது ஊர் நண்பர்கள் அனைவரும் “ஐஸ்ஹவுஸ்” போலீஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள வசந்தா மேன்ஷனின் உள்ள ஒரு அறையில்தான் தங்கி இருந்தனர். அவர்களைப் பார்க்க சிங்கம்பட்டி நண்பன் கசமுத்துவும் வருவான்.

  மொத்தம் முப்பது அறைகளுக்கு மேல் இருந்தன. அந்த அறையில் நுழைந்தவுடன் உள்ள இடத்தில் வலதும், இடதுமாக இரண்டு இரும்புக் கட்டிலும், ஒரு மேஜையும், நாற்காலியும் போட்டிருப்பார்கள். அதேபோல உட்பகுதியிலும் உண்டு. அதையும் தாண்டி உள்ளே குளியலறையும், கழிவறையும் இருந்தது. அந்த நான்கு கட்டிலுக்கும் நண்பர்கள் இருந்தனர்.

  ஒருவருக்கு மாத வாடகை ரூபாய் முப்பது. அதிகப்படியாக நண்பர்கள் தங்குவதற்கு வந்தால் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் என்று கணக்குச் சொல்லுவார் மேன்ஷன் மேனேஜர் இராமலிங்கம் பிள்ளை. இது 1977ஆம் வருடக் கணக்கு.

  அறையில் ஒரு மண் பானையில் தண்ணீர் பிடித்து வைத்து, அறையையும் சுத்தம் செய்ய ஒரு வயாதான பெண்மணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவளுக்கு உணவே வெற்றிலை, பாக்குதான். காவி ஏற்றிய பற்களுடன்தான் அவள் காலை வேளையில் அந்த அறைவாசிகளுக்கு தரிசனம் தருவாள்.

  அவள் வந்து கதவைத் தட்டும் பொழுதே உள்ளே கட்டிலில் படுத்திருக்கும் ப்ரும்மச்சாரிகள் தங்களது வேட்டியையும், லுங்கியையும் வாரிச்சுருட்டிக் கொண்டு படுத்து விடுவார்கள். அனேகமாக ஜெமினிதான் அரைகுறையாக விழித்துக் கொண்டு,” எல்லாப் பயலும் நல்லாப் போத்தி மூடிண்டு கள்ளத் தூக்கம் போடறாங்க… நான்தான் இளிச்சவாயன்” என்று திட்டிய படியே கதவைத் திறப்பான்.

  “தூங்கறேங்களா..சரி அப்பறம் வாறேன்” என்று அவள் திரும்பிவிடுவாள். “இதுக்குத்தான் ரொம்ப அவசரமா வந்தையோ” என்று முணுமுணுத்தபடியே கட்டிலில் படுக்கப் போகும் போது, மீண்டும் கதவு தட்டப்படும்.

  “எவன்டாது.. ஞாயித்துக் கெழமைல கூட தூங்க விட மாட்டேங்கரானே” என்று மீண்டும் கதவைத் திறந்தால், “சார்..மோட்டார் ரிப்பேர்…ஒருமணி நேரம் தண்ணி வராது.. கொஞ்சம் அஜஸ்ட் பண்ணிக்குங்கோ” என்று மேனேஜர் ராமலிங்கம் பிள்ளை சொல்லிச் செல்வார்.

  ” டேய்…யாரும் எழுந்திருக்காதேங்கோ…மோட்டார் ரிப்பேராம்…தண்ணிவர எட்டு மணியாகுமாம்” என்று தான் தன் காலைக் கடன்களை சுகமாக முடித்துக் கொண்டு அனைவர் காதிலும் விழும்படி அறிக்கை விடுவான் ஜெமினி.

  அவன் அப்படிச் சொல்லும் பொழுது குளியலறை தண்ணீர்க் குழாயில் காற்று வீசிக் கொண்டிருக்கும். “டேய்…மொதல்லயே சொல்லக் கூடாது…நீ மட்டும் எல்லாம் முடிச்சுட்டாய்” என்று கண்ணன் கத்துவான். அவசரத்துக்கு அந்த வயதான பெண்மணி இரண்டு வாளிகளில் தண்ணீர் கொண்டு வைத்து விட்டுப் போவாள்.

  “எழுந்திருங்கடா…முகத்த அலம்பிண்டு ஒரு காபி குடிச்சுட்டு வரலாம்”

  “வேண்டாம் ….எட்டுமணிக்கு மேல இந்துப் பேப்பர் படிச்சுட்டுப் போலாம்”

  “ஒனக்குக் காபி…ஒனக்கு இந்துப் பேப்பர்…அதிசயமான வயிறுடா ஒங்களுக்கு” என்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டே வாசலை நோக்கி நடப்பான் ஜெமினி.

  காலையில் பத்து மணிக்கு அனைவரும் ஆலங்காத்தாபிள்ளைத் தெருவில் உள்ள மாமி மெஸ்க்குப் படையெடுப்பார்கள். மாமிக்கு சொந்தஊர் ஆழ்வார்குறிச்சி. மொத்த திருநெல்வேலி ப்ரும்மச்சாரிகளையும் மாமி மெஸ்ல பார்க்கலாம்.

  ஞாயிறு அன்று ஸ்பெஷல் சாப்பாடு. பாயசம், வடை என்று அமர்க்களப்படும். அன்று மட்டும் ஒரு சாப்பாடு இரண்டே முக்கால் ரூபாய். மற்ற நாட்களில் இரண்டு ரூபாய். ஞாயிறு அன்று மாமி மெஸ் நிரம்பி வழியும். “கொஞ்சம் இருங்கோ.. எல்லாருக்கும் சாப்பாடு போடறேன்” என்று அந்த மாமியே வெளியில் வரிசையாக நின்று மொண்டிருக்கும் எங்களிடம் சொல்லிச் செல்வாள்.

  “இலை போட்டு எல்லாம் பரிமாரறோம்…அப்பறமாச் சாபிடுங்கோ… போட்டுட்டுத் திரும்பறத்துக்குள்ள காலி பண்ணாதேங்கோ… கீழெல்லாம் சிந்தாமச் சாப்புடுங்கோ.. நெறையப் போடறேன்… தண்ணிய எச்சில் பண்ணிக் குடிக்காதேங்கோ.. ஒசத்திக் குடிங்கோ “மாமி இப்படிச் சொல்லிக்கொண்டே பரிமாறுவாள்.

  “ஊர்ல எங்க பாட்டி இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் மெட்ராசுக்கு ஓடிவந்தோம். இங்க வந்தும் எங்க கலிதீரலையே” “சீக்கிரமா ஒரு பொண்ணப் பாத்துக் கல்யாணம் பண்ணிக்கோ.. கலி தீரும்”

  மாமிக்குச் சரியாக வேடிக்கையாகப் பேசுவார் எங்கள் பக்கத்து அறையில் குடியிருக்கும் தூத்துக்குடிக்கார நண்பர் ஆடிட்டர் சங்கரநாராயணன்.

  “மாமி இன்னிக்கு பாயாசத்துல கொஞ்சம் உப்பு கலந்துருத்தோ”
  “இல்லையேடா…நன்னாத்தானே இருக்கு”

  “எனக்குப் புருஞ்சுடுத்து மாமி…நீங்க அந்த பாயச ஆப்பையால இடுப்பு, கையெல்லாம் சொரிஞ்சிண்டேளே…அந்த வேர்வை உப்புதான்”

  “நீ..தூத்துக்குடிக் காரனாசே…ஒனக்கு உப்பு மட்டுமில்லை, கொழுப்பும் அதிகம்” என்று சொல்லிச் சிரிப்பாள் மாமி.
  வெளியில் வைத்திருக்கும் வாளித் தண்ணீரில் கைகால்களைக் கழுவிய பின்பு சாப்பாட்டுக்குப் பணத்தை வாங்கிக்கொள்வாள்

  “கைகால்களை நன்னா அலம்புங்கோ….எச்சுக்கையோட பணத்தத் தராதேங்கோ.. “சில்லறையா இல்லைனா அப்பறம் வாங்கிக்கறேன்..சாப்பாடுதானே போட்டிருக்கு..எங்க ஓடிப் போகப் போறேள்” என்று அன்பாகச் சொல்லுவாள் மாமி.
  கிராமத்து அன்பு. வயிறு நிரம்பச் சாப்பிட்ட களைப்பு.

  அறைக்குச் சென்று ஒரு குட்டி அரட்டை. பிறகு கட்டிலில் மல்லாக்கப் படுத்தபடி மதியம் இரண்டு மணிவரை தூக்கம். சிலநேரம் அனந்தநாராயணன் அறைக்குச் சென்று பேசிக் கொண்டிருப்போம். பாரதியையும், கண்ணதாசனின் கவிதைகளையும் ஒப்பிட்டு அவர் சொல்வது மிக அழகாக இருக்கும். நேரம் போவதே தெரியாது.

  கண்ணன் அஞ்சல் வழியில் B. Com படித்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். கதைகள், கவிதைகள் என்று படிப்பனே தவிர பாடம் படிப்பது அவனுக்கு வேப்பெண்ணை. மறுநாள் தேர்வு இருக்கும்.

  தல்நாள் இரவுக் காட்சிக்கு மிட்லண்டு தியேட்டரில் ராஜபார்வை சினிமாப் பார்க்க சேகர், சுரேஷ், ஜெமினியுடன் போனான். படம் முடிந்து இரவு ஒருமணிக்கு மேல் “டீ” குடித்து விட்டு சேகர் கண்ணனுக்கு “அக்கொண்டன்சி”யும், ஜெமினி ” ஸ்டாடிஸ்டிக்ஸ்” பாடமும் அதிகாலை ஆறுமணிவரை சொல்லிக் கொடுத்துத் தேர்வுக்குத் தயார் செய்தனர். கண்ணனும் தேர்வு எழுதி அவர்களின் மானத்தைக் காப்பாற்றினான்.

  நண்பன் கல்யாணசுந்தரம் இந்தியன் வங்கியில் வேலை செய்து வந்தான். சிறந்த ஐயப்ப பக்தன். சபரிமலைக்கு மாலை போட்டுக் கொண்டால் சரியாக விரதம் இருந்து, அறையிலேயே அதிகாலை நாலரை மணிக்குக் குளித்து விட்டு பூஜை செய்வான்.

  அவனது கட்டிலுக்கு அருகிலேயும், முன்னறையிலேயும் படுத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், பூஜை மணிச்சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் உட்கார்ந்தபடி ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் தங்களின் போர்வைக்குள் புகுந்து விடுவார்கள்.

  ஆறு, ஆறரை மணிக்கு பூஜை முடிந்ததும், முகம் கழுவி பல் தேய்த்தவர்களுக்கு தீர்த்தமும், கல்கண்டு, திராட்ஷையும் பிரசாதமாகத் தருவான்.

  அதைப் பெற்றுக் கொண்ட ரகு, “கல்யாணம் இனிமே சீக்கிரம் பூஜை பண்ணிக்கோ.. ஆபீஸ்க்கும் நேரம் ஆகாது ” என்றதும், “அஷ்டோத்திரம் மந்திரங்கள் எல்லாம் சொல்லரதுனால நேரமயிடறது” என்று கல்யாணம் சொன்னான். “சட்டுப்புட்டாய நமஹான்னு சொல்லிடு” அவ்வளவுதானே என்று நகைச்சு வைத்தான் ரகு.

  திருவல்லிக்கேணியில் கல்யாணசுந்தரத்திற்குத் தெரிந்த ஐயப்ப பக்தர்கள் வீட்டில் பூஜை நடக்கும் பொழுது,” எல்லாரும் பூஜைக்கு வராட்டாலும் அன்னதானம் உண்டு. அதுக்காவது வாங்கோடா..” என்று அழைப்பான். சரியாக அனைவரும் கூட்டமாக ஆஜாராகி விடுவோம்.

  பூஜை முடிந்து வரும் பொழுது,” அண்ணா…இன்னிக்கு சாந்தித் தியேட்டர்ல வசந்தமாளிகை போட்டிருக்கான். போஸ்டரப் பார்தேளா…போவோமா” என்று கண்ணன் கேட்பான்.

  “எனக்கு விரத பங்கம் வரணும்னே இந்த போஸ்டர்லாம் காட்டுவையே” என்று சிரிப்பான் கல்யாணம். இருவரும் சிவாஜி ரசிகர்கள்.

  அந்த அறையில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் “ரிசர்வ் பேங்க்” சுரேஷ்தான். கையில் உள்ள பணத்தை செலவு செய்த கண்ணன்,”சுரேஷ் ஒரு நூறு ருபாய் வேண்டும்” என்பான். இல்லை என்று சொல்லாமல் தருவான் சுரேஷ். வாரக் கடேசியில் வாங்கிய கடனை அடைப்பான்.

  திங்கட் கிழமை நண்பர்களுடன் சாப்பாடு, சினிமா, புஸ்தகம் என்று செலவு செய்து விட்டு மீண்டும் சுரேஷ். கபடம் இல்லாத நண்பன் சுரேஷ்.

  ஒவ்வொரு நாளும் இரவுச் சாப்பாடு அநேகமாக சைடோஜி மெஸ்தான். அனைவரும் ஒன்றாகச் செல்வதுதான் பழக்கம். அதுவும் வெள்ளிக் கிழமை இரவுச் சாப்பாட்டுக்கு சைடோஜி மெஸ்தான். காரணம் சின்ன வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு காரக்கறி, பௌர்ணமிச் சந்திரன் போல பெரிய அப்பளம், எலுமிச்சம்பழ ரசம், கட்டித் தயிறு. போறுமே. சோறு கண்ட இடம் சொர்க்கம் அல்லவா. வாங்கும் காசுக்கு வஞ்சனை இல்லாமல் வயிறு நிறையப் போடுவார். ஆனால் சுத்தம் பார்ப்பார். இல்லை போடும் பொழுதே ஒரு பெரிய எவர்சில்வர் டம்ளரில் தண்ணீரை ஒருவர் ஊற்றிக் கொண்டே செல்வார்.

  “இலைல எல்லாம் பரிமாறின அப்பறம்தான் சாப்பிட ஆரம்பிக்கணும். தண்ணீரை ஒசத்திக் குடிக்கணும், வயிறாரச் சாப்பிடுங்கோ, சாப்பிடும் பொழுது பேசக் கூடாது. இதுக்கு ஒத்துக்கரவா சாப்பிட வரலாம் ” என்று அதன் உரிமையாளர் கைலாசம் ஐயர் உரக்கச் சொல்லுவார்.

  இரவில் சாப்பிட்டு வரும்வழியில் பெரிய தெருவில் ஆளுக்கு ஒரு மசாலாப் பால் ஆடையுடன். சில நாட்களில் நாயர் கடையில் நேந்திரம் பழமும், மசாலாப் பாலும்.

  நல்ல புஷ்டியான இரவுகள். திருவல்லிக்கேணி கடற்கரையும், வரும் வழியில் நடைபாதையில் பரத்தி இருக்கும் புத்தகங்களும், பாரதியார் வாழ்ந்த இல்லமும் (அப்பொழுது நினைவில்லாமாக அறிவிக்கவில்லை), பார்த்த சாரதி கோவிலும், சாப்பாட்டு இடங்களும், நண்பர்களும், நாயர்கடைப் பாலும் அவ்வளவு எளிதாக நினைவை விட்டு விலகிப் போகுமா என்ன?

  நாற்பது வருடங்களுக்குப் பிறகு அந்த வசந்தகாலக் குயில்கள் தங்களின் கைகளைக் கோர்த்தபடி மீண்டும் அங்கெல்லாம் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பிய நேரம் உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு.

  குயில்களின் குரல்கள் மாத்திரம் கூட்டுக்குள் இருந்து இடைவெளி விட்டு வெளியில் வந்து கொண்டே இருக்கிறது விடுதலை நாளை நினைத்தபடி…

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  368FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-