spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைநம்பிக்கை இழக்காமல் இறங்குங்கள்

நம்பிக்கை இழக்காமல் இறங்குங்கள்

- Advertisement -

“ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே” என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்

இதோ அதற்கு ஓர் உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.

ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.

“”ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.

“செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்.

இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,” என்று நினைத்தான் மன்னன்.

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.

“”மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்.

உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்.

அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.

நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.

அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.

அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..

இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.”

மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.

காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.

ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.

மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.

மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.

அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.

முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.

நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.

சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.

ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.

இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.

பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.

சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.

மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.

பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.

ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.

மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான்.

அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.

“”இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.

அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.

சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.

அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.

அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.”

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்.

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது.

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்.

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.

மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.

இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.

அதன் உட்பொருள் இதுதான்.

ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன.

தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்

நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான்.

ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.

நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..

ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.

“ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே’ என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்.

அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.

விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும்.

அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.

இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை…

-எங்கோ படித்தது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe