எதிர்காலப்பிரகாசம் ஆரவல்லி மலைத்தொடரின் புதர்களுக்கு நடுவில் இருந்த குடிசையில் மிகுந்த கவலையுடன் மீனாள் அமர்ந்து இருந்தாள். கடந்த ஒரு வருடத்தில் நடந்தது அனைத்தும் நினைத்த அவள் நெஞ்சம் அவளது தாயை எண்ணிக் கலங்கியது. அவள் மனது விக்கிரமனை காப்பாற்றி விட்டோம் என்று சற்று மகிழ்ந்தாலும், மேவாரின் நிலையை எண்ணி வருந்தியது. வெகு தூரத்திலிருக்கும் தனது தாயையும் எண்ணியது. அவள் கண்களில் கண்ணீர் வந்தது. இரண்டு நாட்களும் மீனாள் விக்கிரமனை நன்றாகக் கவனித்துக் கொண்டாள். மூன்றாவது நாள் விக்கிரமனுக்கு நன்றாக குணமாகியது. கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு எல்லாம் விளங்கியது. “மகாராஜா என்னவானார்? என்று தெரியவில்லை. யுத்தம் என்னவாகியது? என்றும் தெரியவில்லை. மேவார் ராஜபுத்திரன் இப்படி இருப்பது சரியல்ல” என்றவன், “எனது நீலப்புரவி? என்றான். மீனாளுக்கு புரவியைப் பற்றிக் கவலை வந்தது. ஆனால் நீலப்புரவி அவர்களுக்குக் கவலை அதிகம் கொடுக்கவில்லை. புரவிகளுக்குத் தனது எஜமானின் வாடை தெரியுமோ என்னவோ? மூன்றாவது நாள் நீலப்புரவி குடிசையின் வாசலில் நின்றது. “மீனா, நான் போக வேண்டும்” என்றான் புரவியைப் பார்த்து அதைத் தட்டி கொடுத்தவன். “நானும் வருகிறேன். நல்லவேளையாக புரவிக்கு ஒன்றும் ஆகவில்லை” இருவரும் புரவியில் ஏறினார்கள். “எங்கு போக?” “மீனா எனக்கு மகாராஜா மறைந்து இருக்குமிடம் தெரியும். கவலைப்படாதே, நான் அழைத்துச் செல்கிறேன்” என்றான் விக்கிரமன். புரவி விரைந்தது. விக்கிரமனும் மீனாளும் சென்ற புரவி ஆரவல்லி மலை இடுக்குகளில் சென்று கொண்டிருந்தது. விக்கிரமனுக்குத்தான் கவலை அதிகமாக இருந்தது. ராணாவை எங்கும் காணவில்லை. இன்னும் கடைசியாக ஒரிடம் இருக்கிறது. அந்த இடம் அவனுக்கும் மகாராணா பிரதாப்சிங்குக்கும் மட்டும் தான் தெரியும். அங்கேதான் இருக்க வேண்டும். விக்கிரமன் புரவியை வேகமாகச் செலுத்தினான். அங்கு ஒரு நீலப்புரவி நின்று கொண்டிருந்தது. அந்த நீலப்புரவி யாருடையது? தனது புரவி போல இருக்கிறதே! என்று விக்கிரமன் யோசனையுடன் புரவி நின்ற இடத்துக்கு செலுத்தினான். புரவியில் யாருமில்லை? ஆனால் புரவி வெகுதூரம் வந்ததற்கு அடையாளம் தெரிந்தது. இந்த இடத்துக்கு மகாராணா பிரதாப்சிங்கைத் தவிர யாரும் வர முடியாதே. இங்கு வந்தவர் எங்கு போயிருப்பார் என்று கலங்கினான். இருவரும் புரவியிலிருந்து இறங்கினார்கள். அந்த நீலப்புரவியைத் தட்டிக் கொடுத்தவன் நாலா பக்கமும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ஆகாயத்தில் வல்லூறு ஒன்று பறந்து சென்றது. வெகு தொலைவில் தானி தெரிந்தது “வா மீனா பார்ப்போம்” என்று அவளின் கைகளைப் பற்றியபடி மெல்ல விக்கிரமன் பாறைகளில் ஏறினான். ஆகாயச் சூரியன் அன்று கருணை கொஞ்சமும் காட்டவில்லை. வெயில் தலையைப் பிளந்துவிடும் போலிருந்தது. பாறையைத் தாண்டி அவர்கள் சென்றார்கள். தூரத்தில் நீர்நிலை போலத் தெரிந்தது. கானல் நீரோ என்று விக்கிரமன் எண்ணினான். இல்லை இருக்க முடியாது. நீர்நிலையைச் சுற்றி இரண்டொரு மரங்கள் தெரிந்தன. மரத்தின் அடியில் யார்? மகாராணா பிரதாப்சிங் போலத் தெரிந்தது. ஆனால் அவர் மரத்தடியில் படுத்திருந்தது போல தெரிந்தது. இருவரும் ஓடினார்கள். மகாராஜாதான். ஆனால் அவர் மயங்கி இருந்தாற் போல இருந்தது. விக்கிரமன் கூப்பிட்டுப் பார்த்தான். மீனாள் தான் முதலில் பார்த்தாள். “அவரது காலைப் பாருங்கள்” விக்கிரமன் பார்த்தான். முட்டியில் இரண்டு இடத்தில் பற்கள் பதிந்த மாதிரி தெரிந்தது. “மீனா அங்கே பாரு” என்றாள். சற்றுதொலைவில் ராஜநாகம் ஒன்று நீர்நிலையை ஒட்டியபடி சென்று கொண்டிருந்தது. மீனாள் புரிந்த கொண்டு பாறையின் வில்போல் ஓடினாள். அதற்குள் தனது கைகளில் இருந்த வாளால் கடிபட்ட இடத்தைச் சற்று சுத்தம் செய்தான். அதற்குள் மீனாள் ஓடி வந்தாள். “இதை உடனே தடவுங்கள். இப்பொழுதுதான் கடித்திருக்க வேண்டும்” என்றாள். “இது என்ன?” “வைத்தியர் கொடுத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்திருந்தேன். சரியான நேரத்தில் உதவுகிறது” “ராஜாநாகம் எங்கே? இந்த வாளால் வெட்ட வேண்டும்” “அது தனது வேலையை செய்துவிட்டது. நாம் நமது வேலையைப் பார்ப்போம்” “ராஜாநாகக்கடிக்கு ஒரு மூலிகை உண்டு, சிறியவயதில் எனது அன்னையார் சொல்லித் தந்திருக்கிறார்கள். பார்த்து வருகிறேன்” சற்று நேரத்தில் திரும்ப வந்தான். கிடைக்கவில்லை என்றவனைக் கவனித்துப் பார்த்தாள். “களிம்மைதான் போட்டு விட்டோமே? குணமாகிவிடும்” என்றாள் மீனாள். “மீனா, சரியான நேரத்தில் கொடுத்தாய். மேவார் உனக்குக் கடைமைப் பட்டிருக்கிறது” என்ற விக்கிரமன், அவளது கைகளைப் பிடித்துக் கொண்டான். சற்றுநேரத்தில் மகாராஜா எழுந்து உட்கார்ந்தார். விக்கிரமனையும் மீனாளையும் பார்த்த அவரின் முகத்தில், கவலை குறைந்து, மேவாரின் எதிர்காலப்பிரகாசம் தெரிந்தது. நிறைவு பெற்றது தங்களின் மேலான கருத்துகளை ஆவலுடன் எதிர் பார்க்கும் உங்கள் அன்பன் டாக்டர் எல். கைலாசம் தொடர்புக்கு 09495650600
Popular Categories



