நெல்லை மாவட்டத்திலுள்ள 33 லட்சம் மக்கள் தொகையில் 86 சதவிகிதத்தினருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது என ஆட்சியர் கருணாகரன் தெரிவித்தார். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் கருணாகரன் தலைமையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் குறித்து கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கருணாகரன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியம், பணமாற்று ஆணை மூலம் வட்டார வளர்ச்சி அலுவலர்களால் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் அறிவுரையின் பேரில் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணையதளத்தில் பதிவு செய்யும் பணி 31.03.2015-க்குள் முழுமையாக முடிவு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆதார் அடையாள அட்டை பெறும் நபர்களின் புகைப்படம், கைரேகை போன்ற தகவல்கள் இணைத்து ஆதார் எண் வழங்கப்படுவதால் ஆள்மாறாட்டம் செய்வதற்கு சாத்தியமில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், வாக்காளர் பெயர் பட்டியலில் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்திட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டு அதற்கான நடவடிக்கைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு வீடு,வீடாக நேரடியாகச் சென்று மேற்கொண்டு வருகிறார்கள்;. திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 33 இலட்சம் ஆகும். அதில், 86 சதவிகிதம் நபர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அரசு பொதுமக்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை எளிதில் பெற ஆதார் எண் மிகவும் அவசியமாகின்றது. பொதுமக்கள் சிரமமின்றி ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஏதுவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் ஆதார் அடையாள அட்டை புகைப்படம் எடுக்கும் முகாம் செயல்பட்டு வருகின்றது. ஆதார் அடையாள அட்டைகளை பெறாதவர்கள் இம்முகாம்களை பயன்படுத்தி உடனடியாக புகைப்படம் எடுத்துக்; கொள்ள வேண்டும். மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை உடனடியாக இணையதளத்தில் பதிவு செய்து அரசு தங்களுக்கு செயல்படுத்தும் நலத்திட்டங்களை சிரமமின்றி பெற்றிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.அண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் 86 % பேருக்கு ஆதார் அட்டை : ஆட்சியர் கருணாகரன் தகவல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari