
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளையில் விழுந்த 2 வயது குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது! மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது. சிறுவன் சுஜித் நிலையை அறிய முடியவில்லை என்று கூறப் படுகிறது.
காலை 4:30 மணி வரை சுவாசிப்பதை உறுதி செய்தோம். அதன் பிறகு சேறு விழுந்ததால் சுவாசம் குறித்து உறுதி செய்ய இயலவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க பல்வேறு வகைகளில் மீட்புக் குழுவினர் போராடி வருகின்றனர். முதலில் 26 அடியில் இருந்த குழந்தை மீட்புப் பணியின் போது மண்ணின் ஈரப்பதம் காரணமாக மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் 68 அடி அழத்துக்கு குழந்தை சென்றதால் மீட்பு பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் மனம் தளராமல் பல்வேறு முயற்சிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இரவு முழுவதும் தூக்கம் மறந்து, அமைச்சர்கள், அதிகாரிகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விடிய, விடிய நடந்து வரும் மீட்புப் பணியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் அதிகாரிகள் மீட்பு பணிகளை கண்காணித்தனர்.
ஆழ்துளை கிணற்றில் உள்ள குழந்தையை மீட்க ஐஐடியில் இருந்து மேலும் ஒரு குழு விரைந்தது. ஐஐடி குழுவினர் கொண்டுவந்த நவீன சாதனங்கள் மூலம் குழந்தையை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

15 கிலோ எடைகொண்ட சாதனம் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியும், மைக் மூலம் பேசமுடியும் என்று கூறப் பட்டது வெங்கடேஷ் தலைமையிலான குழு தயாரித்த கருவிக்கு 2013ஆம் ஆண்டில் ஐஐடி அங்கீகாரம் வழங்கியது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலில் குழந்தையில் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. தற்போது குழந்தை உள்ள ஆழ்துளையில் மண் மூடியதால் குழந்தையில் குரலைக் கேட்க முடியவில்லை. இதனால் மீட்புப் பணியில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு தொடர்ந்து ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வரை மீட்புப் பணி சவாலாக உள்ளது என்றார்.



