
தந்தையை கவனிக்காமல் விட்டதால், மகளுக்கு தானமாக வழங்கிய ரூ.3.80 கோடி நில உரிமைக்கான ஆவணத்தை ரத்து செய்து கோட்டாட்சியர் உத்தர விட்டார்.
இது குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலம் கோட்டாட்சியர் முருகேசன் கூறியது: திருமங்கலம் அருகே உள்ள மாவிலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரன்(81). இவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக்கழக ஊழியர். மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுகிறார். இவருக்கு 3 மகன், 1 மகள். இவர்களில் ஒரு மகன் இறந்துவிட்டார். ஒரு மகன் வறுமையில் வாழ்கிறார். ஒரு மகன் குடும்பத் தொடர்பு இல்லாமல் தனியாக வசிக்கிறார்.
மகள் தமிழ்மணி திருநெல்வேலி அருகே அரசு உதவி பெறும் கல்லூரியில் பேராசியையாகப் பணியாற்றுகிறார். இவர் தந்தையை நன்றாகக் கவனித்துள்ளார். இதனால் வைரன் தனது ரூ.3.80 கோடி மதிப்புள்ள 6.37 ஏக்கர் நிலத்தை 15 ஆண்டுகளுக்கு முன்பே மகள் பெயரில் தானப் பத்திரம் எழுதித் தந்துள்ளார்.
பிறகு தந்தையை கவனித்துக் கொள்வதில் மகள் ஆர்வம் காட்டவில்லை. தனது நிலத்தில் சிறிய வீடு கட்டி தந்தை வசித்து வந்தார். இந்த நிலத்தை விற்க வேண்டுமெனக்கூறி தந்தையைக் கட்டாயப்படுத்தி வீட்டைவிட்டு வெளியேற்றி, வீட்டையும் இடித்து விட்டார்.
இதனால் வைரன் ஊரைவிட்டே வெளியேறி சிலரது உதவியுடன் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தற்போது வசித்து வருகிறார். வாழ வழியில்லாத நிலையில், மகளின் செயலால் மனம் நொந்த வைரன் தன்னிடம் புகார் அளித்தார்.
தந்தை, மகளை அழைத்து விசாரணை செய்தேன். இதில், தந்தைக்கு தேவைப்படும் போதெல்லாம் செலவுக்கு ஏராளமான பணத்தை வழங்கியுள்ளதாகவும், அவர் வழங்கிய நிலத்தின் மதிப்பைவிட அதிக பணம் வழங்கியுள்ளேன் என்பதால், நிலத்தை சும்மா வழங்கவில்லை என்றும் மகள் தெரிவித்தார்.
மகள் வழங்கிய பணம் தந்தையின் வாழ்வு ஆதாரத்துக்கானது. இதைக்கூறி மகள் உரிமை கொண்டாட முடியாது. பெற்றோர் சொத்துகளை வழங்கினால்தான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை.
எந்த சொத்தும் வழங்காமல் இருந்தாலும், அவர்களைப் பாதுகாக்கும் கடமை குழந்தைகளுக்கு உள்ளது. அதேநேரம், வைரன் தனது மகளுக்கு அதிக மதிப்புள்ள நிலத்தை வழங்கியும், தன்னை பாதுகாக்க மகள் தவறிவிட்டதாகவும், சொத்தை வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து மகளுக்கு தந்தை தானமாக வழங்கிய நிலத்துக்கான ஆவணத்தை ரத்து செய்து செக்காணூரணி சார்-பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதன்பேரில் தானப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும். இதனால், நிலம் மீண்டும் வைரனுக்கே சொந்தமாகும்.
பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் பிரிவு 23(1)-ன் கீழ் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கோட்டாட்சியருக்கு உள்ளது. ஏற்கெனவே இதேபோல் 3 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டது என்றார்.