ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மெரினாவில் இருந்து வெளியேற்றம்

இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர்.

சென்னை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்றும், அதற்கான தடை நீக்கப் பட வேண்டும் என்றும் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்களை மெரினாவில் இருந்து திங்கள் காலை முதல் அப்புறப்படுத்தினர் போலீஸார்.

முன்னதாக, ஜல்லிக்கட்டு நடைபெற தமிழக அரசின் சார்பில் முன்மொழியப்பட்ட அவசர சட்டம், இன்று சட்டப் பேரவை கூடியதும் நிறைவேற்றப்பட உள்ளதால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அரசு சார்பில் கோரப்பட்டது. இதனை ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் ஆமோதித்தனர்.

இதைக் கேட்டு நெல்லையில் மட்டும் மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக கூறினர். ஆனால் மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட பல பகுதிகளில் போராடி வரும் மாணவர்கள் நிரந்தர சட்டம் நிறைவேற்றும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். வரும் வியாழன் அன்று பாரத குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில்தான் நடைபெறும். எனவே போராட்டக்குழுவினரை வெளியேற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர்.

இன்று அதிகாலை போராட்டம் நடைபெறும் மெரினா கடற்கரைக்கு வந்த மயிலை காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்ட முன்வடிவை அளித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய பாலகிருஷ்ணன், போராட்டத்திற்கான குறிக்கோள் அடையப்பட்டுள்ளதால் கலைந்துசெல்லும்படி இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சட்டம், ஒழுங்கை பேணிக்காக்க அனைவரும் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு அளித்ததாகக் கூறி நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், கடற்கரையில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து அமர்ந்து கலைந்து செல்ல மறுத்தனர். இன்று காலையிலேயே ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து தனித்தனியாக இருந்த போராட்டக்காரர்கள் பலரும் விவேகானந்தர் இல்லத்திற்கு எதிரே ஒரே இடத்தில் குவிந்தனர். அனைவரும் மொத்தமாக கூடி நின்று கலைந்து செல்ல மறுத்தனர். இதனையடுத்து ஒன்றாக அமர்ந்த அனைவரும் இணைந்து கொண்டனர். பின்னர் அனைவரையும் அங்கிருந்து தனித் தனிக் குழுவாகப் பிரித்து போலீஸார் அவர்களைக் கலைத்தனர்.

காவல்துறையினர் சிலரை வலுக்கட்டயமாக வெளியேற்றியபோது சிலர் அவர்களின் கால்களைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினர். பலரும் நகர மறுக்கவே அனைவரையும் கைகளால் தள்ளிச் சென்று சாலைப் பகுதியில் விட்டனர் போலீஸார். போராட்டக் களத்தில் இருந்து வெளியேற மறுத்த பெண்கள், குழந்தைகளை பெண் போலீசார் வெளியேறச் சொல்லி கட்டாயப்படுத்தி வெளியேற்றினர்.

இந்நிலையில் இளைஞர்கள் சிலர் கடல் அலை பகுதிக்குச் சென்று இன்று மதியம் வரை இருந்துவிட்டு, சட்டம் நிறைவேறுவதைப் பார்த்துவிட்டுச் செல்வதாகக் கூறினர். இதனால் பதற்றம் நிலவியது.