
சென்னை:
தமிழகத்தில் இந்தக் கோடைக் காலம் பெரும் சோதனையாகத்தான் அமைந்துள்ளது. பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் நேற்று பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் இந்தக் கோடை காலம் பெரும் சோதனைக் காலமாகத்தான் அமைந்துவிட்டது. அக்னி நட்சத்திரத் துவக்கத்தில் இருந்தே மிகக் கடுமையான வெயில் நிலவி வந்தது. மே மாதத் துவக்கத்தில் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசி வெப்பத்தை மேலும் அதிகரித்தது.
பொதுவாக காலை நேரங்களில் கிழக்கில் இருந்து கடற்காற்று சற்றே குளிர்ச்சியாக நிலப்பகுதியை நோக்கி வீசும். ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்தை நோக்கி வீசுகிறது. மேலும் மேற்கு திசை தரைக்காற்று வீசி வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.
தென் தமிழகத்திலும் மத்திய பகுதியிலும் சில நாட்களுக்கு முன் மழை பெய்து, சற்றே நிலத்தை குளிர்ச்சிப் படுத்தியது. ஆனால், வட தமிழகம் வழக்கத்துக்கு மாறாக கடும் வறட்சியுடனும் கோடை மழை இன்றியும் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.
வேலூரில் 109 டிகிரி, திருச்சியில் 108 டிகிரி, சென்னை, கரூரில் 107 டிகிரி, பாளையங்கோட்டையில் 106 டிகிரி, புதுச்சேரி, பரங்கிப்பேட்டையில் 105 டிகிரி, மதுரை, சேலத்தில் 104 டிகிரி, கடலூர், தருமபுரியில் 103 டிகிரி, காரைக்காலில் 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் எனும் அளவில் வெயில் பதிவாகியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 113 டிகிரி வெயில் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு சென்னை, வேலூரில் இந்தளவு வெயில் பதிவாகியிருந்தது. ஆனால், திருத்தணியில் நேற்று பதிவான 114 டிகிரி வெயிலே தமிழகத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெயில் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருத்தணி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பதிவாகி வரும் வரலாறு காணாத வெயிலின் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலை மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும். திருத்தணியில் பதிவான வெயில், நம்மிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பதிவானதிலேயே அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆங்காங்கே இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுவையில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டிசம்பரில் வீசிய புயலினால் மரங்கள் பல வேரோடு வீழ்ந்து, வறண்ட நிலையை மேலும் அதிகப்படுத்தியதால், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டு வருகிறது.



