தூத்துக்குடியில்… நகை கொள்ளைபோனதாக நாடகம் ஆடிய பெண்ணின் கணவன் தூக்கிட்டு தற்கொலை!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
vincent suicide tutucudi - 2026

தூத்துக்குடியில் தன் வீட்டில் தானே நகையை திருடிய பெண் கைதான சம்பவத்தில், வீட்டில் இருந்த நகையை தானே எடுத்து வைத்துக்கொண்டு கொள்ளை போனதாக மனைவி நாடகம் ஆடியதால், மனமுடைந்த கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்தவர் 58 வயதான வின்செண்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். வின்செண்ட் – ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவரும் திருமணம் ஆகி, வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச் சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்செண்ட் ஒரு புகாரை அளித்தார்.

புகாரைப் பெற்றுக் கொண்டு, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்று போலீஸார் விசாரித்த போது, வங்கியில்தான் வைத்திருந்ததாக தெரியவந்தது.

துறைமுக ஊழியரான வின்செண்ட் சிக்கனமானவர் என்றும், பழைய நகைகளை வாங்கி சேமித்து வைக்கும் பழக்கத்தால், சுமார் 93 சவரன் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்ததாகவும் தெரியவந்தது. ஆனால், சில தினங்களுக்கு முன் வின்செண்ட் செல்போனுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்ததாகவும், அதில் பேசிய பெண், வங்கியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால் தங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று கூறியதாகவும் வின்சண்ட் கூறியுள்ளார்.

இதை அடுத்து வங்கி லாக்கரில் இருந்து நகைகளை எடுத்து வந்து வீட்டு பீரோவில் வைத்திருந்துள்ளார். இந்த நேரத்தில் தான் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. வங்கியில் விசாரித்த போது வங்கியில் இருந்து வின்செண்டுக்கு யாரும் போன் செய்யவில்லை என்று தெரிந்தது.

இந்நிலையில், பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் வந்திருப்பார்கள்? என்று அவரது மனைவி ஜான்சியை அழைத்து விசாரித்தபோது அவரது பதில்கள் போலீஸாரை சந்தேகப் பட வைத்தன. அப்போதுதான் அவர்களின் பின்னணி தெரியவந்தது.

ஏலச் சீட்டு நடத்திவந்த ஜான்சிக்கு பலர் ஏலத்தொகையை கட்டாமல் ஏமாற்றியதால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. மாதம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டிய நிலையில் கணவரோ 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்.

பணத்தை நகையாக வாங்கிவைத்து அனைத்தையும் வங்கியில் கொண்டுபோய் வைத்து விடுவதால், பணத் தேவைக்கு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துள்ளார் ஜான்சி . அப்போத்தான் அவருக்கு இந்த ஐடியா தோன்றியுள்ளது. அதன்படி தானே வெளியில் சென்று, குரலை மாற்றி வங்கியில் இருந்து பேசுவது போல் பேசி, வங்கியில் இருந்து நகைகளை வீட்டுக்கு எடுத்து வர வைத்துள்ளார் ஜான்சி!

பின்னர், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தருவதாகச் சொல்லி, அதில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து, கணவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது, அவரிடம் இருந்து சாவியை எடுத்து பீரோவை திறந்து, 93 சவரன் நகையை வீட்டுக்கு வெளியே புதைத்து வைத்துள்ளார்.

பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டை உள்பக்கமாகப் பூட்டி, பீரோவில் இருந்த துணிகளைக் கலைத்துப் போட்டு சாவியை பீரோவுக்குப் பின்புறம் தூக்கி வீசியுள்ளார்.

இந்நிலையில் போலீசார், ஜான்சி சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 93 சவரன் நகைகளை கைப்பற்றி, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டு ஜாமினில் ஜான்சி வெளிவந்த நிலையில், வின்செட் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று அதிகாலை மனைவி ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது வின்செட் மற்றொரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.