மேட்டூரை தூர்வாரும் பணி தொடக்கம்: 83 வருடத்துக்குப் பிறகு விழித்திருக்கிறது அரசு!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன்

mettur dam - 2026

சென்னை:

83 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று முதல் மேட்டூர் அணை தூர்வாரப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தப் பணியைத் தொடங்கி வைக்கிறார்.

மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் ஆகிறது. இந்த அணை கட்டப்பட்ட பின்னர் இன்று தூர்வாரும் பணியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேட்டூர் அணை நீரால், தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் வசதி பெறுகிறது. அணை தூர்வாரப்படாததால் வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக, 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாம். இதனால் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவில் தண்ணீரை சேமிக்க இயலவில்லை. இந்நிலையில், வாப்காஸ் நிறுவனம் மூலம் வண்டல் மண் படிந்துள்ள இடங்கள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வும், அவற்றை அப்புறப்படுத்தும் முறைகளும் ஆலோசிக்கப்பட்டன. மேலும் அணையில் இருந்து எடுக்கப்படும் மண்ணை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்க திட்டமிடப்பட்டது.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 டிராக்டரும், மண்பாண்டம் செய்வோருக்கு 20 டிராக்டர்களும், கிராவல் மண் நபருக்கு 10 டிராக்டரும் அள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்தப் பணியில் முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் வலது கரையில் பண்ணவாடி , மூலக்காடு பகுதிகளிலும் இடது கரையில் கூணாண்டியூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டம் நாகமரை கிராமத்தில் ஆசாரி கிணற்றுப்பள்ளம், சித்தையன் கோவில் ஏரி பகுதிகளிலும் மேட்டூர் நீர் தேக்கத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் மேட்டூர் அணை தூர் வாரும் பணி மற்றும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணிகளை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

அணை தூர்வாரப்பட்டால், அணையில் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும். மேலும் தென் மேற்கு பருவ மழை அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அவ்வாறு நீர் அதிகமாக வந்தால், கூடுதல் நீரை சேமித்து வைக்க இயலும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.