
சென்னை:
பெரும்பான்மை பலம் இருந்தால் நீங்கள் எது வேண்டுமானாலும் செய்துவிடுவீர்களா? நாட்டு மக்களிடம் இன்னொரு சுதந்திரப் போராட்டத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் என்று, பா.ஜ.க.வை வையிற விழாவான கருணாநிதி வைர விழாவில் மு.க.ஸ்டாலின் காட்டத்துடன் பேசினார்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சட்டமன்ற நுழைவு வைரவிழா மற்றும் கருணாநிதியின் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை நடைபெற்றது. கருணாநிதி வைரவிழா என்ற பெயரில் விழா நடத்தினாலும், அதனை மோடி, மற்றும் பாஜக.,வை வையிற விழாவாக மாற்றிக் காட்டிய ஸ்டாலின், விழாவில் நிறைவுரையாற்றினார். இந்த விழாவில் பங்கேற்ற தலைவர்களை வரவேற்றும் நன்றி தெரிவித்தும் பேசிய அவர், பாஜக.,வுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
அவர் பேசியவை…
குளித்தலை தொகுதியில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து 12 சட்ட மன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றவர் கலைஞர். 48 ஆண்டு காலம் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தின் முதலமைச்சராக 19 ஆண்டு காலம் பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். திராவிட இயக்கம் நூற்றாண்டு கண்டிருக்கிறது. அதில், 80 வருடம் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர் கலைஞர். அப்படிப்பட்ட தலைவருக்கு எடுக்கப்பட்டுள்ள இந்த விழாவிற்கு வந்திருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விழாவை மையப்படுத்தி, ஊடகங்களில் கூட்டணிக்கு அச்சாரம் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை. இந்த விழா நமக்கெல்லாம் பூரிப்பு தருவதுதான். ஆனால் ஒரு ஏக்கத்துடனே இருக்கிறோம். கலைஞர் இங்கு வந்து அமரவில்லையே என்ற ஏக்கம்தான். தலைவர் இங்கு ஏன் வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். உடல்நிலை தேறி வந்தது. ஆனால், உடல்நிலை தேறி வரும் நிலையில், தொற்று ஏற்படும் என்பதால் கூட்டத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என்று மருத்துவர்கள் அனைவரும் தெரிவித்து விட்டார்கள். அதனால்தான் அவரை அழைத்து வரவில்லை.
இந்திய அரசியலுடன் ஒன்றிணைந்த இயக்கம் திமுக. மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் இயக்கம் திமுக. சமூக நீதி, விவசாயிகள் பிரச்னை, தொழிலாளர் உரிமை, பெண்ணுரிமை என தொடர்ந்து போராடும் இயக்கம் திமுக. தேசிய ஒருமைப்பாட்டிலும் நாட்டின் பன்முகத் தன்மை மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் இயக்கம் திமுக. அப்படிப்பட்ட இயக்கத்தின் தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்ற வைர விழாவை இங்கே கொண்டாடுகிறோம். தலைவர் கலைஞர் எண்ணற்ற பிரதமர்களை உருவாக்கியவர், உருவாகக் காரணமாக இருந்தவர்.
தற்போது மத்தியில் இருக்கும் இந்த ஆட்சி மூன்றாண்டு காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆட்சியாளர்கள் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார். பெரும்பான்மை பலம் இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா? மாநிலங்களின் முதலமைச்சர்களை ஒருங்கிணைத்து டீம் இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னார்கள்.
உருவாக்கப்பட்டதா? வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்ற உறுதி மொழி என்ன ஆயிற்று? விவசாயிகள் வருமானத்தை ஒன்றரை மடங்கு உயர்த்தி தருவோம் என்றார்கள். செய்தார்களா? வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வருவோம், அதன்மூலம் இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என்றார்களே, 15 ஆயிரமாவது போட்டார்களா? லோக்பால் உருவாக்கப்படும் என்றார்கள். உருவானதா? இல்லையே. ஆக, மூன்றாண்டுகாலமாக எதையும் செய்யவில்லை. எதைப்பற்றியும் கவலைப்படவில்லை.
அதையொல்லாம் மூடி மறைக்க, ராகுல் காந்தி சொன்னதுபோல் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்கள். இப்போது மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளார்கள். இந்த நிலையில்தான் மத்தியில் பாஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. அத்துடன், இந்தியாவை மதச்சார்புள்ள நாடாக மாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கலைஞர் மட்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால் மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்த்து முதல் நபராகக் குரல் கொடுத்திருப்பார்.
திமுக., மத்திய அரசு சொல்வதற்கு எல்லாம் ஆடக் கூடிய பொம்மை அல்ல. எங்களுக்கு ஆட்சி பெரிதல்ல, ஆட்சி பெரிதென்று கருதியிருந்தால் நெருக்கடி நேரத்தில் ஆட்சியை காப்பற்றியிருக்க முடியாதா? ஆட்சியைப் பற்றி கவலைப்படவில்லையே. இலங்கைத் தமிழர்களுக்காக ஆட்சி பறிபோனதே, கலைஞர் கவலைப்பட்டாரா? கொள்கை, லட்சியத்தில் இருந்து நாம் என்றைக்கும் பின்வாங்கியது கிடையாது.
பா.ஜ.க. ஆட்சிக்கு இன்று பெரும்பான்மை இருக்கலாம். அதன்மூலம் எதிர்க் கட்சிகளை அழிக்க காய் நகர்த்திக் கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில்தான் நாம் இந்த மேடையில் கூடியிருக்கிறோம். இதேபோல் மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
இப்போது மத்திய ஆட்சியாளர்கள் மாட்டிறைச்சிக்கு தடைவிதித்து குழப்பதை ஏற்படுத்துகிறார்கள். அவர்களிடம் கேட்க விரும்புகிறேன், இன்னொரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள். அதை சந்திக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாமும் தயாராக இருக்கிறோம். .. என்று பேசினார் மு.க.ஸ்டாலின்.



