
புது தில்லி:
அரசு முறைப் பயணமாக நான்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நான்கு ஐரோப்பிய நாடுகளுக்கு ஆறு நாள் அரசு முறைப் பயணமாக மே மாதம் 29 ஆம் தேதி புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இன்று பிரான்ஸ் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
அவரது இந்த பயணத்தில், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் சில வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரஷ்ய பயணத்தில் கூடங்குளத்தில் மேலும், இரு அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ரஷ்ய பயணத்தின்போது, மங்கோலிய அதிபர், ஐ.நா பொதுச் செயலாளர் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார். பிரான்ஸ் நாட்டில் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள இம்மானுவேல் மாக்ரோனை சந்தித்துப் பேசினார். அப்போது, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து வழங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னதாக, அரசு முறைப் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து தனது நன்றியை அவர் டிவிட்டரில் தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரான்ஸ் பயணம் குறித்து குறிப்பிட்டபோது, இந்தியாவுடனான முக்கிய நட்பு நாடு பிரான்ஸ், அதனுடன் உறவை மேம்படுத்துவதற்காக வந்துள்ளேன் என தனது டிவிட்டர் பதிவில் மோடி தெரிவித்தார்.
My gratitude to the Government and people of France for their hospitality during my visit. This was a significant visit. pic.twitter.com/YOvhFBgtZR
— Narendra Modi (@narendramodi) June 3, 2017



