
தமிழகத்தின் சென்னையில் உள்ள கண்ணகி நகர் பகுதியை சார்ந்த கூலித்தொழிலாளி சுந்தர்ராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்கள் இருவருக்கும் சித்ரா மற்றும் சிந்து தேவி என்கிற இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கணவன் – மனைவி மற்றும் குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், நள்ளிரவு 1.30 மணிக்கு நாய் அதிகளவு குரைத்துள்ளது.
சத்தம் கேட்டு சுந்தர்ராஜன் வெளியே சென்று பார்க்கையில், வடமாநில இளைஞர்கள் கையில் கம்புடன் பாம்பை தேடி கொண்டு இருந்தனர். இதனையடுத்து சுந்தர்ராஜும் பாம்பை தேட கம்பு எடுத்து தேடிய நிலையில், பாம்பு கிடைக்காததால் மனைவியை வீட்டிற்குள் செல்ல கூறி கூறவே, அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். கழிவறையின் வெளியில் இருந்த பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தவே, ஆதிலட்சுமி அலறியுள்ளார்.
மேலும், ஆதிலட்சுமியின் காலில் சுருண்டு கொண்ட பாம்பு, ஆட்களின் வருகை மற்றும் ஆதிலட்சுமியின் அலறலால் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது. பின்னர் அப்பகுதியினர் விரைந்து வந்த நிலையில், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பாம்பை அப்பகுதியில் வலைவீசி தேடியும் கிடைக்காத நிலையில், இருப்பிடம் குறித்த தகவல் சரிவர இல்லாததால் ஒன்றரை மணிநேரம் கழித்து அவசர ஊர்தி வந்துள்ளது.
அவசர ஊர்தி வர நேரம் ஆகும் என்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆட்டோ மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.