திருமழிசை சந்தையில் குறைவு! வெளியில் பல மடங்கு உயர்வு! காய்கறி விலையால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published:

vegetable market chennai
vegetable market chennai

சென்னையில் திருமழிசை சந்தையை விட பல மடங்கு அதிகமான விலைக்கு காய்கறிகள் விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையின் பிரதான கோயம்பேடு காய்கறிச் சந்தை மூலம் கொரோனா தொற்று அதிகம் பரவுவதாகக் கூறப் பட்டதால், கோயம்பேடு சந்தை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர எல்லையில் இருந்து சுமார் 25 கிமீ., தொலைவில் உள்ள திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கிருந்து பொருட்களை வாங்கி வரும் சில்லறை வியாபாரிகள், தங்களுக்கு போக்குவரத்துச் செலவே கடுமையாக உயர்ந்து பெரும் சுமையைக் கொடுப்பதாகக் கூறுகின்றனர்.

இதனால் திருமழிசையில் 8 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோ தக்காளி நகர்ப்புறங்களில் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால் சந்தையை விட சிறு கடைகளில் விற்கப்படும் காய்கறிகள் பல மடங்கு விலை உயர்வுடன் விற்பனையாகிறது. இது சென்னைவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே, கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கொரோனாவால் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் குணமடைந்து வருவதாக தகவல் வெளியானது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 146 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோயம்பேட்டில் இருந்து வந்த 320 தொழிலாளர்கள் உள்பட  413 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏற்கெனவே 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் இருந்து 84 பேரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் இருந்து 28 பேரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து 34 பேரும் என மொத்தம் 146 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இவர்கள் அனைவரும் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img