
பணியில் உள்ள போலீசார் அனைவருமே கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்ட போலீசாருக்கு எளிதான பணி ஒதுக்கப்படுகிறது. அவர்களில் நீரிழிவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் இருப்போருக்கு விடுமுறை தரப்பட்டுள்ளது. இதனால் 80 சதவீத போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
இந்நிலையில் பணியில் இருக்கும் போலீஸாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்ட போலீசாருக்கு வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டி.ஜி.பி., அலுவலகம் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகம், சிறப்புக் காவல் படை மற்றும் காவலர் பயிற்சி மையங்களிலும் பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் அனைவரும், கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மண்டல ஐ.ஜி.,க்கள் வாயிலாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தார் ஆரோக்கியமாக இருந்தால் தான் அவர்களால் முழு மனதுடன் பணிபுரிய முடியும். மேலும் ஆபத்து நேரங்களில் காவல் துறை போன்ற படைகள் தயாராக இருப்பது அவசியம். அதனால் போலீஸார் ஒவ்வொருவரும் தமக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று காவல் துறை உயரதிகாரிகள் கூறுகின்றனர்.



