
கோயில்களை எப்போது திறப்பார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏக்கத்துடன் தங்கள் அடி வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டே, கண்ணீரில் தவித்து வருகிறார்கள் மூன்று பிரிவினர்.
தமிழகத்தில் கோயில் மூடப்பட்டுள்ளதால் மூன்று வகையான தொழில்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து, மன பாரத்துடன் பொருமித் தள்ளுகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கால் தொடர்ந்து கோயில்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்கள், ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசித்து விட்டு பிறகே உணவு உட்கொள்ளும் விரதம் போன்ற பழக்கத்துக்கு ஆட்பட்டவர்கள், இப்போது இறைவனை தரிசிக்க முடியாமல் மனம் நொடிந்து போயுள்ளனர்.
தமிழக அரசு நான்காவது முறையாக ஊரடங்கை நீடித்ததுடன், ஆலயங்கள், மத வழிபாட்டுத் தலங்களை தொடர்ந்து மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் கோயில் ஊழியர்கள் தவிர புஷ்ப வியாபாரிகள், அபிஷேக பொருட்கள், வாசனை திரவிய உற்பத்தியாளர்கள், இளநீர் கடை வியாபாரிகள் என பல்வேறு தரப்பும் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறது.

கோயில் வாசல்களில் பூக்களை விற்பணை செய்வோர், பல மாதங்களாக ஆலயங்கள் பூட்டப்பட்டுள்ளதால், தெருக்களுக்கு வந்து பூக்களை கூவி விற்பனை செய்யும் நிலைக்கு வந்து விட்டனர். ஆயினும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் பெரும் மனக்கசப்பில் உள்ளனர். இதனால் சிலர், வீட்டு அருகே தாற்காலிக காய்கறிகளை வைத்து பிழைப்பை நடத்துகின்றனர்.
இது குறித்து கோயிலில் பூ வியாபாரம் செய்யும் கோவிந்த் கூறியபோது… ஆலயங்கள் தொடர்ந்து அடைக்கப் பட்டுள்ளதால், கோயில்களை விட்டு வெளியே சாலைகளில் பூக்களை விற்று வருகிறோம். பல நாட்கள் விற்பனை ஆகாத பூக்களை குப்பையில் கொட்டுகின்ற நிலையும் உள்ளது என்றார்.

மதுரை மேலமடையைச் சேர்ந்த தனியார் ஆலய அர்ச்சகர் பிரபு கூறியபோது” பல தனியார் ஆலயங்களில் கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை! மதுரை புறநகர் பகுதிகளில் உள்ள கோயில்களை பராமரிப்போர்கள், கோயில் பூஜகர்களிடமும், இதர பணியாளர்களிடமும், நீங்கள் கொரோனா முடிந்த பிறகு பணிக்கு வாங்க, இப்போதைக்கு சம்பளம் வழங்க இயலாது என தெரிவிக்கின்றனர்… என்றார்.
எனவே, தமிழக அரசு, கொரோனா தாக்கம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆலயங்களில் சமூக இடைவெளியூடன் அனுமதித்து, கட்டாயம் மாஸ்க் அணிந்து வரச் சொல்லி, குறைவான எண்ணிக்கையில் பக்தர்களை உள்ளே அனுப்பி, இறை தரிசன அனுமதியை தொடங்க வேண்டும் என்பதே பக்தர்கள் பேரவையின் கோரிக்கை! அரசு இதற்கு செவி சாய்க்குமா?!
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை