
சென்னை:
தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த விநோதமாக, ஆளும் கட்சி எம்எல்ஏ ஒருவரே வெளிநடப்பு செய்தார்.
தமிழக சட்டசபையிலிருந்து அதிமுக எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வன் வெளிநடப்பு செய்து சட்டசபை வரலாற்றில் ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் முதல்முறையாக வெளிநடப்பு செய்தார் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்த, 14ஆம் தேதி சட்டமன்றம் கூடியது. முதல் நாளிலேயே, அரசைத் தக்க வைப்பதற்காக, கூவத்தூரில் எம்.எல்.ஏக்களைக் கடத்தி வைத்து, பேரம் நடத்தியது குறித்த விவகாரத்தை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பின. சபாநாயகர் தனபால் அதற்கு அனுமதிக்கவில்லை. அது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார். இந்த விவகாரத்தால் அமளியில் ஈடுபட்ட திமுகவும், அதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டணி கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.
இந்நிலையில் உயர் கல்வி, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை சட்டசபையில் இன்று காலை பேரவைக் கூடியதும் நடைபெற்றது.
சுகாதாரத் துறை குறித்து கேள்வி எழுப்ப அனுமதி வழங்குமாறு தினகரன் ஆதரவாளரும், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ-வுமான தங்க.தமிழ்ச்செல்வன் கேட்டார். ஆனால், அதனை சபாநாயகர் மறுக்கவே, தங்க. தமிழ்ச்செல்வன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். இதனைப் பார்த்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சியில் உறைந்தார். சட்டசபை வரலாற்றிலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் வெளிநடப்பு செய்வது இதுதான் முதல்முறை.
உள்கட்சிப் பிரச்னை தலைதூக்கியுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடியை அவமானப் படுத்தும் நோக்கில், தினகரன் ஆதரவு ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வெளிநடப்பு செய்து, சட்டப் பேரவை வரலாற்றில் இடம்பிடித்துவிட்டார்.



