
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொரானா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் ஒருவர், மருத்துவமனைக்கு உள்ளேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மேல்மனம் பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன். வயது 67. இவரது மனைவி தொழிலாளர் நல வாரியத்தில் அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர். வரதராஜன் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவி செய்து வந்ததாராம்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வரதராஜன் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து அங்கு கொரானா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவுக்கு 7ஆம் தேதி மாற்றப்பட்டார்.
அங்கே சிகிச்சை பெற்று வந்த அவர் தனது குடும்பத்தார் உறவினர் எவரும் தன்னைப் பார்க்க வராமல் புறக்கணித்து விட்டனர் என்று கூறி, மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பிணவறைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.