சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது: எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published:

gas 1
gas 1

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேஸ் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றன. இந்தத் தொகையை சிலிண்டர்களை டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல், ஏஜென்சிகளே எடுத்துக் கொள்கின்றன. மேலும், டெலிவரிக்காக நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கும்படி, டெலிவரி செய்யும் நபர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்களின் பணம் 500 கோடி ரூபாய்க்கு மேல் சுரண்டப்படுகிறது

இதைத் தவிர்க்க டெலிவரி செய்யும் நபர்களுக்கு சீருடை, அடையாள அட்டைகள் வழங்கி அவர்களின் பணியை வரன்முறை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலிண்டர் சப்ளை செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், அதுகுறித்து புகாரளிக்க வசதி உள்ளதாகவும், அந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி, இது சம்பந்தமாக விதிகள் வகுத்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

ALSO READ:  செங்கோட்டை- நெல்லை பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்!

Related articles

Recent articles

spot_img