கோவை கிராஸ் கட் சாலையில் ‘கோல்ட் ஆன் தி கோ’ என்ற பெயரில் தங்கக் காசு ஏடிஎம் மையம் நேற்று தொடங்கப்பட்டது. தங்கம் வாங்க நினைக்கும் பொதுமக்கள் தங்கக் காசு ஏடிஎம் மூலம் 2 நிமிடங்களில் பணமாக செலுத்தியோ, ஆன்லைன் முறையில் பணம் செலுத்தியோ தங்கக் காசுகளை வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தை தொடங்கியுள்ள கோவை தனியார் தங்கக் காசுகள் உற்பத்தி நிறுவன பங்குதாரரும், இத்திட்டத்தின் நிறுவனருமான சீனிவாசன் கூறியதாவது:
கொரோனா பரவலால் எங்களது நகை கடைகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்கும் வகையில் இந்த ஏடிஎம் திட்டத்தை உருவாக்கினோம்.
இதில் பொதுமக்கள் 2 நிமிடங்களில் தங்கக் காசு வாங்க முடியும். இயந்திரத்தில் 1 கிராம், 2 கிராம், 4 கிராம், 8 கிராம் என மக்கள் தேவைக்கு ஏற்ப, அன்றைய சந்தை விலையில் 22 கேரட் 916 தங்கக் காசுகள் உத்தரவாத சான்றிதழுடன் கிடைக்கும். பணம் என்றால் ரூ.50 ஆயிரம் வரை செலுத்தி தங்கக் காசுகள் பெற முடியும்.
தங்க காசுகளில் கியூ ஆர் கோட் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஸ்கேன் செய்தால் விற்பனையாளரின் பெயர், முகவரி, செல்போன், ஜிஎஸ்டி எண் உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும் என்றார்.