
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான நகைக் கடைகளில் தங்க நகை சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் சேரும் வாடிக்கையாளர்கள் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வர வேண்டும். குறைந்தபட்சம் 15 மாதம் முதல் அதிகபட்சம் 36 மாதங்கள் வரை இந்தத் திட்டத்தில் பணம் செலுத்தலாம்.
குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பணம் செலுத்திய பிறகு, தங்க நகை வாங்கிக் கொள்ளலாம். இதில், தங்க நகை மட்டும்தான் வாங்க முடியும்; தங்க நாணயங்கள், மற்ற பொருட்கள் வாங்க முடியாது.
இத்தகைய திட்டத்தில், ஒவ்வொரு நகைக் கடைகளிலும் ஏராளமானோர் தங்கள் பணத்தை சேமித்து வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை தியாகராயநகரில் உள்ள கல்யாண் ஜுவலர்ஸ் நகைக் கடையில் மாதாந்திர சேமிப்பு நகை சீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்களிடம், அங்கு வேலை செய்து வந்த முரளிதரன் என்பவர் பணத்தை வாங்கிக் கொண்டு போலி ரசீது கொடுத்து வந்துள்ளார்.
பணம் கட்டி முடித்தவர்கள் அந்த பணத்திற்கான நகைகளை வாங்க வந்தபோது, முரளிதரனின் மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து கணக்குகளை சரிபார்த்தபோது, 4 லட்சம் ரூபாய் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, கல்யாண் ஜுவலர்ஸ் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முரளிதரனை தேடி வருகின்றனர்.